விதை

நீரில்லா பாலையிலே
நாவல் மரமொன்று
வெயிலோடு போராட
பழுத்த நாவலொன்று
சூரைக்காற்றில் மண்ணில் விழ

சுட்டெரிக்கும் வெயிலும்
கொந்தளிக்கும் மணலும்
பழத்ததனை வறுத்தெடுக்க
நீர்வற்றி , உடல் வற்றி
விதையென ஆனதென்ன?
கனலின் நடுவே பிறந்த
பிள்ளையை வெயிலே
வறுத்தெடுப்பதென்ன?

அப்பக்கம் வந்ததோர்
வெள்ளாட்டுக் கூட்டமோ
பிள்ளையை மித்தெடுக்க
அதிலோர் வெள்ளாடு
பிள்ளையை மேய்ந்துவிட
வெள்ளாட்டின் குடலில்
பிள்ளையின் போராட்டமென்ன?

வெள்ளாட்டுக் கூட்டத்தை
இடையனோ வயலில் பட்டியிட
வெள்ளாடோ புழுக்கையிட
விதையும்தான் விழுந்ததடி
உழவனின் மிதிகொஞ்சம்
காளையின் மிதிகொஞ்சம்
விதையும்தான்  புதைந்ததடி மண்ணிலே!

கார் இருள் , கடும் அழுத்தம்
அம்மாவின் கருவறையில்
இருந்த அதே சூழல்
அப்போது சுகமாய்
இப்போது போராட்டமாய்
தோலெல்லாம் கிழிந்து
உடலெங்கும் ரணமாய்
உயிர்வாழும் வைராக்கியம் எஞ்சிருக்க

வந்ததோர் மழைகாலம்
ஒருதுளி மழைநீர் உற்சாகப்படுத்த
மண்ணை துளைத்து
பொங்கி எழுந்தது
விண்ணைமுட்ட!


5 comments:

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

It is very cute

தன்னம்பிக்கை தரும் கவிதை

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More