தேர்வில்தான் தோல்வி..வாழ்க்கையில் அல்ல


    பள்ளியில் ஒரு வருடத்திற்கு பின் எழுதப்படும் முழு ஆண்டு தேர்வு என்பது நம்முடைய ஒரு வருட கல்வியின் தரத்தை மதிப்பிடுவதற்காகவே அன்றி நம்முடைய எதிர்காலத்தை அதுதான் நிர்ணயிக்கும் என்று சொல்ல முடியாது. தேர்வில் தோல்வி அடைவதால், அல்லது மதிப்பெண் குறைவாக பெற்றதால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் கவனத்திற்காகவே இந்த கட்டுரை.


        நம்முடைய அரசாங்கத்தின் கல்வி வெறும் ஏட்டு சுரைக்காய்தான். இதில் படித்த படிப்புகள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கைக்கு சிறுதும் உதவாத கல்வி. ஏன் படிக்கிறோம்,எதற்கு படிக்கிறோம் என்று தெரியாமலே படித்துவிட்டு, பின்னர் படித்த படிப்பிற்கும் கிடைத்த வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டும் நபர்களின் எண்ணிக்கைதான் நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றது. பி.இ. கம்ப்யூட்டர் தொழிற்படிப்பு படித்துவிட்டு, வங்கியில் லோன் செக்ஷனில் பணிபுரிபவர்களும், மெக்கானிக்கல் படித்து விட்டு அக்கவுண்ட்ஸ் துறையில் பணிபுரிபவர்களும்தான் இங்கு ஏராளம். எனவே தேர்வில் நமக்கு கிடைக்கும் தோல்வியோ, அல்லது குறைந்த மதிப்பெண்ணோ நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்காது என்பதை மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

   எனக்கு தெரிந்த ஒரு நண்பர் எம்.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். வயது முப்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ஓட்டலில் சர்வர் வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கின்றார். பத்தாவது படித்த ஒரு ஒருவர் அவரைவிட மேலான பதவியில் இருக்கின்றார். சர்வர் வேலை என்பது மட்டமான வேலை கிடையாது. ஆனால் அதற்கு அவர் எம்.ஏ படிக்க தேவையில்லையே. எட்டாவது படித்து முடித்தவுடம் இந்த வேலைக்கு வந்திருக்கலாமே...


எனவே நல்ல மதிப்பெண்கள் வாங்கியவர்கள் எல்லோரும் மிகப்பெரிய பதவியை அடைவதில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்கள் எல்லாம் கெட்டுப்போவதுமில்லை. படிக்கும்போதே நடைமுறை வாழ்க்கைக்கு தேவையானவற்றை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். படிக்கும் காலத்திலேயே வங்கியில் கணக்கு துவங்குவது எப்படி, ரயில்வே ரிசர்வேஷன் டிக்கட் பதிவு செய்வது எப்படி, இணையத்தில் போன் பில்,எலக்ட்ரிக் பில்,சொத்துவரி முதலியவற்றை செலுத்துவது எப்படி போன்ற நடைமுறை வாழ்க்கைக்கு தேவையானவற்றை தெரிந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு ஒரு பிற்காலத்தில் உறுதுணையாக இருக்கும்.

    மேலும் கல்லூரியில் படிக்கும்போதே நாம் படிக்கும் படிப்பின் துறையில் பகுதி நேர ஊழியராக வேலை செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் சொற்பமானதாக இருந்தாலும், அது நம்முடைய கைச்செலவிற்கு உதவுவது மட்டுமின்றி நாம் படிக்கும் கல்விதுறைக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எதையும் செயற்கைத்தனமாக  மனப்பாடம் செய்து படிக்கக்கூடாது. பாடத்தைப் புரிந்து கொண்டு, படிக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய எதிர்காலத்திற்கு கல்வி பயனுள்ளதாக இருக்கும். மேலும் படிக்கும் காலத்திலேயே தினசரி நூலகம் சென்று கல்வி,அரசியல்,பொருளாதாரம்,சினிமா போன்ற செய்திகளை தினமும் தெரிந்து கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு செல்வதற்கு ஒருவாரத்திற்கு முன் அனைத்து பொது விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கான பதிலை மனப்பாடம் செய்வது பயனளிக்காது. நாம் சிறுவயதில் இருந்தே பொது அறிவு விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வதுதான் பயனளிக்கும்.

  தேர்வில் பின் தங்கிய மாணவர்களுக்கு, இது உங்களுக்கு கிடைத்த தோல்வியல்ல, மனனம் செய்பவர்களுக்கு கிடைத்த வெற்றியே..உங்கள் திறமைகள் இன்னும் பரிச்சயிக்கப்படாமலே உள்ளது. அதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க நம்முடைய அரசாங்கம் தவறியுள்ளது. நீங்கள் பின் தங்கியதன் காரணம் உங்கள் இயலாமை அல்ல. ஒட்டிய மண்ணை துடைத்துவிட்டு விழுந்த இடத்திலிருந்து எழுங்கள். உங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுங்கள். பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்கு உங்கள் உயர்ந்த எண்ணங்களை புரியவைத்து இலக்கை நோக்கி நடைபோடுங்கள் வெற்றி உங்களுக்கே...

2 comments:

சிவலிங்கம் அவர்களின் சிறப்பான பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துகள்..!

ஆமாம்,எட்டாவதை எட்டி பாக்காதவனுக்கும்,என்னை போல பத்தாவதை தாண்டாத அறிவுகொழுந்துகளுக்கும் நீங்கதான் சாமி ஆசீர்வாதம் பண்ணனும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More