லஞ்சம் கொடுப்பது தவறா?

லஞ்சம் வாங்குவது தவறு என்று எல்லோரும் உரக்க குரல் கொடுப்போம். லஞ்சத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராடங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்தும். லஞ்சம் வாங்கும்போது, மறைந்திருந்து அதிரடிப்படையினர் பொறிவைத்து பிடித்து கைது சம்பவம் பலவற்றை நாம் தினசரிகளில் படித்திருப்போம். அப்போதெல்லாம் நாம் ஒரு தடவையாவது யோசித்திருப்போமா? லஞ்சம் வாங்குவது எவ்வளவு பெரிய தவறோ? அதேபோல் லஞ்சம் கொடுப்பதும் தவறு என்று.

இல்லை. இல்லவே இல்லை. எந்த ஒரு போலீஸ் அதிகாரியாவது லஞ்சம் கொடுத்தவரை கைது செய்துள்ளதா? லஞ்சம் கொடுத்தவர் மீது எந்த வழக்காவது பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று யோசித்துப்பார்த்தால் இல்லை என்று பதில்தான் எனக்கு தெரிந்தவரை கிடைத்துள்ளது.

லஞ்சம் கொடுக்காமல் இப்போதுள்ள நடைமுறை வாழ்க்கையில் ஜெயிக்க முடியாதா? யதார்த்தம் என்று கூறி லஞ்சம் கொடுப்பதை நாம் ஊக்குவிப்பது சரியா? ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டியதற்காக போலீஸாரிடம் மாட்டிக்கொள்ளும்போது "எனக்கு இருநூறு ரூபாய் லஞ்சம் கொடுக்கிறாயா? அல்லது கோர்ட்டில் ஐநூறு ரூபாய் அபராதம் கட்டுகிறாயா?"  என்று கேட்டால் நாம் எதை தேர்ந்தெடுப்போம். யதார்த்தமாக யோசித்து பார்த்தால், கண்டிப்பாக இருநூறு ரூபாயை போலீஸிடம் கொடுத்துவிட்டு முந்நூறு ரூபாயை மிச்சப்படுத்திவிட்டோம் என்ற சந்தோஷத்துடன் தான் வீட்டிற்கு செல்வோம். கோர்ட்டுக்கு போய் ஒருநாள் முழுவதும் காத்திருந்து, ஐநூறு ரூபாய் பணம் அபராதம் கட்டினால், நமக்கு ஒரு நாள் வேலையும் கெட்டுவிடும். முந்நூறு ரூயாயும் அதிகமாக செலவாகிவிடும். அதை தவிர்த்துவிட்டோம் என்ற நிம்மதி மனதில் எழுகிறது. இது சரிதானா?

இது எதில் கொண்டுபோய் விடும் என்பது தெரியுமா?  மறுநாளும் கவனக்குறைவாக நாம் ஹெல்மெட் போட மாட்டோம். அப்படியே ஞாபகம் வந்தாலும், சரிதான், இருநூறு ரூபாய் கொடுத்தால் போதும் என்ற மனநிலை எளிதில் வந்துவிடும். மீண்டும் ஒருமுறை போலீஸிடம் பிடிபட்டு, இருநூறு ரூபாய் தண்டம் அழவேண்டும். இது தேவையா? லஞ்சம் கொடுத்து, அப்போதைக்கு நிலைமையை சரிசெய்துவிட்டால், நம்முடைய தவறு நமக்கு தவறாகவே தெரியாது. மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டே இருப்போம்., ஆனால், அன்றைக்கு கோர்ட்டுக்கு போய், ஒருநாள் முழுக்க கோர்ட் வாசலில் காத்திருந்து, ஐநூறு ரூபாய் பணம் கட்டிவிட்டு வீட்டுக்கு வந்தால், இனிமேல் ஹெல்மெட் இல்லாமல் வண்டியை தொடவே கூடாது என்ற நினைப்பு மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். மீண்டும் ஒருமுறை தவறு செய்யவே மாட்டோம். 

இதுவொரு உதாரண சம்பவம்தான், இதுபோல்தான் எல்லா சம்பவங்களிலும் நடக்கும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். சரியாக தேர்வு எழுதாத ஒரு மாணவன் லஞ்சம் கொடுத்து, அந்த வருடம் பாஸ் செய்துவிட்டான் என்றால் கண்டிப்பாக அடுத்த வருடம் நிச்சயமாக அந்த மாணவன் படிக்கவே மாட்டான். அடுத்த வருடமும் லஞ்சம் கொடுத்து பாஸ் செய்துகொள்ளலாம் என்றே நினைப்பான்.  டாக்டர் சீட்டுக்காக இருபது லட்சம் லஞ்சம் கொடுத்து கல்லூரியில் சேரும் ஒரு மாணவன், டாக்டராகி வெளியே வந்தவுடன் அந்த இருபது லட்சத்தை வட்டியும் முதலுமாக சேர்த்து எப்படி எடுப்பது என்ற நினைப்புதான் இருக்கும். சேவை செய்யவேண்டும் என்ற எண்னம் கடுகளவு கூட இருக்காது. 

யதார்த்த வாழ்க்கை முறையில் லஞ்சம் கொடுக்காமல் வாழ்வது என்பது நடைமுறையில் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் சிறிது கஷ்டப்பட்டு லஞ்சம் கொடுக்க பழகாமல் இருந்தால், பின்னர் நமக்கு மிகவும் எளிதாக அந்த விஷயம் தெரியும். லஞ்சம் கொடுக்காமல் வாழ்வை நடத்துவது நம் கையில்தான் இருக்கிறது. ஒரு அலுவலகத்திற்கு செல்லும்போது தேவையான ஆவணங்களுடன், சரியான நேரத்திற்கு செல்லுவது, வண்டியில் செல்லும்போது சரியாக எல்லா ஆவணங்களையும் வைத்திருப்பது, போன்ற பழக்கங்களை நாம் ஏற்படுத்திக்கொண்டால், லஞ்சம் கொடுப்பதை முழுவதுமாக செயல்படுத்த முடியாமல் போனாலும், ஓரளவிற்கு குறைத்துக் கொள்ளலாம். எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும்கூட லஞ்சம் இல்லாமல் வேலை நடக்காத சில இடங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் தேவையில்லாத இடங்களில் லஞ்சம் கொடுப்பதை நிறுத்த நாம் நம் விஷயத்தில் சரியாக நடந்துகொண்டால் போதுமானது என்பது என் தாழ்மையான கருத்து,

லஞ்சம் வாங்குவதை விட கொடுப்பது என்பது மிகப்பெரிய குற்றம் என்ற எண்ணம் என்று நம் மக்கள் மனதில் விதைக்கப்படுகிறதோ, அன்று முதல் லஞ்சம் படிப்படியாக ஒழியும் என்பது உறுதி.  சிகரெட் விற்கும் கடையில் சிகரெட் உடல்நலத்திற்கு தீங்கானது என்ற விளம்பரமும், மதுக்கடையில், மது நாட்டுக்கும்,வீட்டுக்கும் கேடு என்று விளம்பரப்படுத்துவதும் முட்டாள்தனமானது. சிகரெட்டை ஒழிக்க வேண்டுமென்றால் சிகரெட் தொழிற்சாலையை மூட வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை மூடவேண்டும். அப்போதுதான் அந்த பழக்கங்கள் குறையும்., அதுபோல் லஞ்சம் கொடுப்பதை நிறுத்திவிட்டால், லஞ்சம் இந்த நாட்டைவிட்டு தன்னாலேயே மறைந்து விடும். 

 


1 comments:

லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More