அடிப்படை மாற்றம்!


இங்கு ஏதேதோ தோன்றியதெல்லாம் கிறுக்கியுள்ளேன்! உங்களது பொன்னான நேரத்தை இதை வாசித்து வீணடிக்காதீர்கள்!

இன்னும் வாசிக்கத்தான் செய்வேன் என்றால், பிறகு நான் பொறுப்பல்ல!

:) :) :) 

நம்மில் பலருக்கும் பள்ளியில் பல சுவாரசியமான அனுபவங்கள் இருக்கும். பல நல்ல பழக்கங்கள், சில தீய பழக்கங்கள் என அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கும் நமது பள்ளிக் கூடங்கள்.

பள்ளிகளில் பல வகை உண்டு. பள்ளிகளில் வகையா? ஆம்! நீங்கள் நினைப்பது போல, அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, மெட்ரிக் பள்ளி என்ற வகைகள் அல்ல!

ஒவ்வொரு பள்ளியையும் அதன் குறிக்கோள்( motto ) அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

1) சில பள்ளிகள், பணத்திற்காக மட்டுமே செயல்படுவதுண்டு.
2) சில பள்ளிகள், மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதில் சிறந்தவை!
3) சில பள்ளிகள், மதிப்பெண்கள் அதிகம் பெறுவதைக் காட்டிலும், ஒழுக்கமும், நாட்டுப் பற்றும் நிறைந்த மாணவர்களை உருவாக்கும் பணியே சிறந்தது என்னும் கொள்கை உடையன! 

இது போல ஆசிரியர்களையும் கூட வகைப்படுத்தலாம்!
1 ) இயந்திரத்தனமாய் பாடங்களை நடத்துவோர் (ஒப்பிப்போர்)
2 ) எந்நேரமும் பாடம் தவிர்த்து நக்கல் நையாண்டி என்று தேவையற்ற பேச்சுகளில் நாட்டம் உள்ளோர்.
3 ) ஒழுக்கம், நாட்டுப் பற்று, சமுதாய அக்கறை முதலியவற்றை பாடத்தோடு சேர்த்து புகட்டுவோர்!

பெரும்பாலான நேரங்களில், பெற்றோர்கள் தேர்வு செய்யும் பள்ளிகள், இரண்டாம் வகையைச் சார்ந்தனவாகவே இருக்கின்றன. (மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதில் சிறந்தவை!)

காரணம்: நிறைய மதிப்பெண்கள் பெற்றால், பொறியியல், மருத்துவம் சேர்த்து, பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக வெகு விரைவில் பிள்ளைகளை மாற்றலாம்!
பிள்ளைகளுக்குப் பிடித்த ஆசிரியரும் பெரும்பாலும் இரண்டாம் வகையைச் சார்ந்தவராகவே இருக்கிறார்! காரணம் ஆனந்தமாய் இருக்கலாம் அந்த ஆசிரியர் வரும் நேரத்தில்!

ஆனால், நன்மை தருவது, நமக்கு அவசியமானது, மூன்றாம் வகையே!
மதிப்பெண்கள் மட்டுமே போதாது. கற்ற கல்வியை பிறர் முன்னேற்றவும் பயன்படுத்த வேண்டும் என்ற மனப் பக்குவம் தேவை!

கோடிக்கணக்கில் செலவு செய்து மருத்துவம் படிக்கும் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை,கோடிகளை மீட்க மருத்துவம் பார்க்குமே தவிர, சேவை உள்ளத்தோடு அல்ல!போட்ட பணத்தை மீட்கப் போராடும் பந்தயக் குதிரைகளாய் மாற்றும் இந்த நிலை மாற்ற ஆசிரியர்களால் மட்டுமே இயலும்.

மருத்துவமோ, பொறியியலோ, எந்தப் பாடப் பிரிவைச் சார்ந்த ஆசிரியராக இருப்பினும், சிறிது அக்கறை காட்டுங்கள் தங்கள் மாணவரின் சுய சிந்தனைக்காகவும் நாட்டுப்பற்றுக்காகவும்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதாம்! ஐந்து வயது முதல், ஏன், வயிற்றில் கரு வளரும் நாள் தொடங்கி, அன்பை போதியுங்கள்! பெற்றோர்களே பல இடத்தில் சாதி மதம் என்று பேசி, பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் அவலம் பெரும்பாலாக நடந்து வருகிறது. சரி அன்பை போதித்தால் மட்டும் போதுமா?

சரி, இதெல்லாம் இருக்கட்டும். அன்பு, பண்பு, இது போன்றவை முக்கியம் அல்ல என்றே கருதினாலும் பரவாயில்லை.  தொழில்நுட்பம் படிக்க விரும்புகிறோம் நாம், ஆனால், அந்தத் தொழில்நுட்பத்திலாவது சிறந்து விளங்குகிறோமா?

நாமும் சில சாதனைகள் செய்துவிடத்தான் செய்கிறோம், அத்திப் பூத்தார் போல! நமக்கு இருக்கும் மக்கள் தொகைக்கு நிறைய சாதித்திருக்க வேண்டுமல்லவா?

ஏன் இல்லை??? அடிப்படையில் சிறுவயதில் இருந்தே, பணம் என்ற ஒன்றை மட்டுமே போதித்து வளர்த்து விடுகிறோம், வளர்ந்து விடுகிறோம்! ஏதாவது செய்து, நம்மை, நமது நாட்டின் பெருமையை முன் நிறுத்த வேண்டும் என்று யாரும் பெரும்பாலும் எண்ணுவதில்லை.

விஜய் டி.வி. "நீயா நானா?" புகழ், கோபிநாத் அவர்கள் அவருடைய ஒரு மேடைப்பேச்சில் இப்படிச் சொன்னார். அவர் சொன்னதை அப்படியே இங்கே குறிப்பிடவில்லை, அதன் பொருளை எனது வார்த்தைகளால் குறிப்பிட்டுள்ளேன்.

"நாம் தமிழ் மொழியை முன்னேற்ற வேண்டும், தமிழைப் பெருமைப் படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம், ஆனால், பெரிதாக முயற்சிகள் எடுப்பதில்லை.
இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது. அவர்கள் கண்டுபிடித்து ஆங்கிலத்தில் பெயர் சூட்டிவிடுகிறார்கள். நாம் அவற்றை தமிழில் மொழி பெயர்த்துவிட்டு, தமிழை முன்னேற்றுகிறேன் என்று பெருமை கொள்கிறோம். ஏன்? ஏன் நாமே புதியதாய் நிறைய கண்டுபிடித்து அதற்குத் தமிழில் பெயரிடுவோம். உலகமெங்கும் பிறகு அந்தப் பொருளைப் பயன்படுத்தும் பொழுது, தமிழில் தானே குறிப்பிட முடியும்?"
அவர் சொல்வதும் சரி தானே? நாம் ஒரு பொருள் கண்டுபிடித்து அதற்கு சுத்தத் தமிழில் பெயரிட்டு அந்தப் பொருளை வெளியிடுவோம், நமது மொழியில் தானே குறிப்பிட வேண்டும் அந்தப் பொருளை? 
முதலடி எடுத்து வைப்போம்!

உதாரணத்திற்கு, நானே புதியதாய் ஒரு வாகனம் உருவாக்கியுள்ளேன் என்று வைத்துக் கொள்வோம்! அதற்க்கு எனது பெயரையே சூட்டுகிறேன், அதாவது "கண்மணி". இது முழுமையான தமிழ்ப் பெயர், தமிழில் தவிர இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க இயலாது. கண்டிப்பாக அந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர் எல்லாம், அதை "கண்மணி' என்று தான் அழைத்தாக வேண்டும். 

இவை எல்லாம் செய்யாமல், "ரேடியோ" என்று கண்டுபிடித்தால், நாம் "வானொலி" என்று மொழி பெயர்த்துவிட்டு, தமிழை வளர்த்துவிட்டேன் என்று பெருமை கொள்வது.. சரியானது தானா?

இப்படி புதியதாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வையும் சிறுவயதில் இருந்தே வளர்த்தெடுக்க வேண்டும்.

சரி, சரி, இதை வாசிக்கும் பொழுது தோன்றும் நமக்கு, ஆம், செய்ய வேண்டும் என்று ஆனால், செய்யமாட்டோம்! நானும் பெரிய யோக்கியசாலி இல்லை பாருங்கள்!

முடிந்தமட்டும், முதல் அடி ஒன்றாய் எடுத்து வைப்போம், அடிப்படையில் மாற்றம் கொண்டு வருவோம். வெற்றி நிச்சயம்!

-----------------

கண்மணி அன்போடு!


3 comments:

எங்கள் இனிய கண்மணிக்கு....

அம்மணி, நாங்க எல்லாம் செய்ய வேண்டாம் என்றால் செய்வோம், பார்க்க வேண்டாம் என்றாலும் பார்ப்போம்....

எப்படியோ ஒரு நல்ல தகவலை பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றி!!!

நாமும் முடிந்த வரை நம்மை திருத்தி முதல் அடி வைப்போம்....தொடரட்டும் நம் தலைமுறையினர்...

சபாஷ் தோழி.....

வாழ்த்துக்கள்....

ஆஹா! நான் 'கண்மணி' கார் வாங்கப் போறேன்! எல்லாரும் வாங்க, 'கண்மணி' காரில் ஏறி சென்னையில் நடக்கும் தமிழ் பதிவர் திருவிழாவுக்கு போகலாம்....!
நல்ல யோசனை தமிழை வளர்க்க....வாழ்க! வளர்க!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More