நட்புப் பயிலுவோம் வாருங்கள்!


நட்புப் பயிலுவோம் வாருங்கள்!
ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு  நண்பர்கள் தினம். எல்லோருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்!

நட்பு என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். நண்பர்கள் என்றால் ஈருடல் ஓருயிர் என்று இருக்கவேண்டும்; நட்புக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்; அவனுக்கு ஜலதோஷம் என்றால் நான் தும்முவேன்; எனக்கு ஜுரம் என்றால் அவன் மாத்திரை சாப்பிடுவான். அவனது சந்தோஷம் என் சந்தோஷம். என் துக்கம் அவனது துக்கம்.

சினிமாவில் காண்பிப்பது போல நண்பனின் காதலை வெற்றி பெறச் செய்ய மற்ற நண்பர்களையும் அடி வாங்க வைப்போம்!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

நான் SSLC முடித்த பிறகு கல்லூரி செல்லாததால் பள்ளித் தோழிகளின் தொடர்பு பள்ளியுடன் நின்று விட்டது.

என்னுடைய தோழிகளைப் பற்றி எண்ணும்போது முதலில்  நினைவுக்கு வருவது ஜெயா என்கிற ஜெயலக்ஷ்மி. உண்மையில் இவள் என்னைவிட சற்று பெரியவள். என் அக்காவின் தோழி. அவள் வேலை பார்த்த அலுவலகத்தின் தொழிற்சாலையில் எனக்கு வேலை.

எனக்கு தொலைபேசியில் எப்படி பேசவேண்டும், பதில் சொல்லவேண்டும் என்று சொல்லிக் கொடுத்து  என்னுடைய ஆங்கில அறிவை வளர்த்த ஆசான்  இவள்தான். புரசைவாக்கத்தில் எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இவள் வீடு. தினமும் அலுவலகம் முடிந்ததும் சந்திப்போம். மணிக்கணக்கில் பேசுவோம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய முயற்சியிலேயே முன்னுக்கு வந்தவள் இவள். தனது குடும்பத்தையும் உயர்த்தியவள். எனக்கு இவளிடம் மிகவும் பிடித்தது எதைப்பற்றியும் குறை சொல்லாத குணம். நான் அவளிடமிருந்து கற்றுக் கொண்டதும் அதைத்தான்.

எப்போது பெங்களூர் வந்தாலும் தவறாது தொலை பேசுவாள். அடிக்கடிப் பார்த்துக் கொள்ளுவது கிடையாது. ஆனாலும் எப்போது பேசினாலும், நேற்றுதான் பேசி முடித்தாற் போல பேசுவோம். எங்களுக்குள் இடைவெளி என்பது இருப்பதே இல்லை.

நீ ஏன் தொலைபேசுவதே இல்லை என்றோ சென்னை வரும்போது ஏன் வந்து பார்ப்பதில்லை என்றோ கேட்கவே மாட்டாள். நானாகவே ‘போன வாரம் சென்னை வந்திருந்தேன்.....’ என்று சொன்னாலும், ‘அப்படியா?’ என்று ஒரு வார்த்தையில் அதை தள்ளி விடுவாள். இப்படிக் கூட இருக்க முடியுமா ஒருத்தியால்?

'சென்னை வந்தும் உன்னைப் பார்க்கவில்லை என்றால் உனக்கு கோவம் வராதா?' என்றால், 'நாம் பார்க்கும் அந்த சில சமயங்களிலும் உன்னுடன் சண்டைபோட்டு என்ன கிடைக்கப் போகிறது?' என்பாள்.

நிஜம்தானே?

என் பிறந்தகத்தில் என்னைக் கூப்பிடும் பெயரால் என்னை விளிப்பவள் இவள் மட்டும்தான். நான் பதிவு எழுதுவது பற்றி சொன்னபோது  மிக மிக சந்தோஷப்பட்டு  மனதாரப் பாராட்டினாள்.  

நான் முதலில் சொன்ன (ஈருடல்........இத்யாதி, இத்யாதி ) வசனங்கள் எங்கள் இருவரிடமும் கிடையாது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ள மாட்டோம்; பண்டிகை நாளன்று மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் எங்களிடையே இல்லை.

ஆனாலும் ஜெயாவைப் பற்றி நினைக்கும் போது மனதிற்கு இதமான நினைவுகளில் மூழ்கி விடுவேன். எங்களிடையே எந்தவிதப் பாசாங்குகளும் கிடையாது. பரிசுகள் கொடுத்து நட்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் அவசியம் இல்லை.

“எல்லாவிதமான நட்புக்களின் பின்னாலும் ஒருவரது சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்பது இல்லை.” என்ற சாணக்கியனின் சொல்லைப் பொய்யாக்கிய நட்பு எங்களுடையது. எங்களுக்கு எல்லா நாட்களுமே ‘நண்பர்கள் தினம்’ தான்.

திருவள்ளுவர் சொல்லும் ‘நெஞ்சத்து அகநக நட்பது’ எங்கள் நட்பு! ‘முகநக நட்பது’ எங்களிடையே இல்லை.

பி.கு: நேற்றே எந்தப் பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன். வீட்டில் வேலை அதிகம் இருந்ததால் முடியவில்லை. நண்பர்கள் மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். 

7 comments:

நல்லநண்பர்கள் கிடைப்பது அறிது. என்நட்பினை பற்றி வரும்நாட்களில்...

நன்றி திரு சீனி அவர்களே!
உங்கள் நட்பு பற்றி அரிய மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் திரு மதுர கவி அவர்களே. விரைவில் எழுதுங்கள். வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

அன்புள்ள அம்மாவிற்கு...

வணக்கம்...நம் வாழ்வில் உண்மையான நண்பர்கள் கிடைப்பது அரிது....என் பள்ளி நாட்களின் புகைபடங்களை நான் பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறேன்.....உங்கள் பதிவின் மூலம் நான் கடந்த காலங்களின் நினைவுகளை நினைத்தால் ஆனந்த கண்ணீர் வருகிறது..... என்றும் உங்கள் நட்பு இனிதே தொடர வாழ்த்துக்கள்...

அன்புடன் .....திருமதி.ரேவதி ஜானகிராமன்...

வருக திருமதி ரேவதி ஜானகிராமன் அவர்களே!
உங்கள் பின்னூட்டம் நெஞ்சைத் தொடுகிறது.
வாழ்த்துகளுக்கு நன்றி!

//எங்களுக்கு எல்லா நாட்களுமே ‘நண்பர்கள் தினம்’ தான்//Friendship is not in wishing, it s sharing... arumayaana natpu

நன்றி திரு ஸ்ரீராம் ராஜா! தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.
இன்றைக்குத் தான் உங்கள் கருத்துரையைப் பார்த்தேன்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More