மூடப்படவேண்டிய முதியோர் இல்லம்.

சென்ற 10 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வெறும் 50 முதியோர் இல்லங்கள்தான் இருந்தனவாம். ஆனால் இப்போது ஊருக்கு ஐம்பது இருக்கின்றது. காரணம் என்ன?  நமக்கு உயிர் கொடுத்து, உடமைகள வாங்கிக் கொடுத்து, நம்மை ஆளாக்கிய நம் பெற்றோர்களுக்கு நாம் தரும் பரிசு முதியோர் இல்லம்தானா?


ஒரு மனிதனுக்கு பிறந்தது முதல் பாலூட்ட, தாலாட்ட தாய் வேண்டும். கல்வி கற்க தந்தை வேண்டும், வளர்ந்து ஆளாகி, வேலைக்கு சென்று திருமணம் ஆகும் வரை ஒரு மனிதன் கண்டிப்பாக பெற்றோரை சார்ந்துதான் இருக்க வேண்டிய நிலை. தனக்கென ஒரு நிரந்தர வருமானம் கிடைத்து, பின் திருமணம் ஆகி, தனக்கென ஒருவள் வந்த பின், இதுவரை பாசமாக தெரிந்த பெற்றோர் பின்னர் பாரமாக தெரிவதன் காரணம் என்?

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆசை ஆசையாய் பாசத்தை ஊட்டி வளர்க்கின்றனர். மகனும் பதிலுக்கு பாசத்தை கொட்டுகிறான். திருமணம் ஆனபின் பாசத்தை பங்குபோட ஒரு மருமகள் வந்தபின் எங்கே தன் மகனை முழுவதும் அவள் ஆக்கிரமித்து கொள்வாளோ என்ற பயத்தில் தோன்றும் வெளிப்பாடு தான் பிரச்சனைகளுக்கு முதல் காரணம். மருமகளை மகள் போல ஒரு தாய் நினைத்தால் நிச்சயம் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.


மகள் போல நினைக்கும் மாமியாரை எந்த ஒரு மருமகளும் எதிரியாக நினைக்க மாட்டாள். மகனே பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப நினைத்தாலும், மருமகள் தடுத்துவிடுவாள்.  மாமியாரை அவரின் பதவிகாக இல்லாமல் போனாலும் வயதுக்காக மதிக்கலாம். மாமியாரும் தானும் ஒருகாலத்தில் மருமகள் இடத்தில் இருந்ததை நினைவு கூர்ந்து கொஞ்சம் அனுசரனையாக நடக்கலாம்.

இரண்டவதாக இதுவரை சம்பளக்கவரை தன்னிடம் கொடுத்த வந்த மகன், மருமகள் வந்தவுடன் அவளிடம் கொடுக்கின்றானே என்ற எண்ணம் ஒரு பெற்றோருக்கு வரவே கூடாது. என்னதான் பெற்றவர்களாக இருந்தாலும், திருமணத்திற்கு பின்னர் மகனிடம் ஒரளவிற்கு மேல் பொருளாதாரத்தை பெற்றவர்கள் எதிர்ப்பார்க்கக்கூடாது. அதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தன்னுடைய முதுமை காலத்திற்கென ஒரு தொகையை அவர்கள் சேமித்து கொண்டே வந்தால், திடீரென வரும் வெறுமையை எளிதாக சமாளிக்கலாம்.

அடுத்தது, பெரும்பாலான பெற்றோர்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுவதன் காரணம், அவர்களுக்கு வயதான காலத்தில் ஏற்படும் நோய்களும் ஒரு காரணமாக அமைகின்றது. எந்த ஒரு மருமகளும்,  நோய்வாய்ப்பட்ட மாமனார்,மாமியாருக்கு சேவகம் செய்ய விரும்புவதில்லை. இதுபோன்ற பிரச்சனைகள் வரும்போதுதான், தன் கணவனிடம் எதையாவது சொல்லி,  அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடுகின்றனர். எனவே  பெற்றோர்கள் நாற்பது வயதை கடந்துவிட்டாலே, தங்களுடைய உடலை ஒரு முறை தீவிரமாக மருத்துவமனைக்கு சென்று ஏதாவது நோயின் அறிகுறி தெரிகிறதா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்தல் அவசியம்.  அப்பொழுதுதான் நோயின் தாக்கத்தை தொடக்கத்திலேயே கண்டறிந்து அவற்றில் இருந்து விடுபட தேவையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.

தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவி இரண்டு பேர்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், கண்டிப்பாக தங்களுடைய குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள ஒரு ஆள் தேவை. என்னதான் பணம் கொடுத்து வேலைக்காரியோ, அல்லது குழந்தைகள் காப்பகத்திலோ விட்டாலும் நம்முடைய உறவுகள் பார்ப்பதுபோல் இருக்காது. எனவே வீட்டில் உள்ள பெரியவர்களை வரும் மருமகள் அனுசரித்து நடந்து கொண்டால், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. 


பெற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளால் ஏற்படும் மனஸ்தாபம்தான் இவ்வளவு முதியோர் இல்லங்கள் பெருக காரணம்.  இப்பொழுது பெற்றோரை கவனிக்க தவறிய பிள்ளைகளை தண்டிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவையெல்லாம் சட்டம் போட்டு செய்ய வேண்டிய சேவைகளா? இல்லை.. பெற்றவர்களை காப்பது நமது கடமை. எந்த பிரச்சனையையும் பேசி தீர்த்து,  முதியோர் இல்லம் இல்லா நாடாக மாற்றவேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

2 comments:

மாற்றவழியே இல்லை.தம்பிள்ளை வெளிநாட்டில் வாழநினைக்கும் இன்றையபெற்றோர் சிந்தனை மாறாதவரை,அவர்கள்வீடே முதியோர் இல்லம்தான்.

சீரிய சிந்தனை.சீர் மிகு தமிழர் என உலகம் போற்றும்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More