நாட்டு நலனில் ஊடங்களின் பங்கு என்ன?

பத்திரிகை மற்றும் ஊடகங்களை நான்காவது தூண் என்று கூறுவார்கள். நாட்டில் நடக்கக்கூடிய செய்திகளை மக்களிடம் போய் சேர்க்கும் மிக புனிதமான பணியை மேற்கொள்பவர்கள் என்பதால் இந்த தகுதி அவர்களுக்கு உண்டு. ஆனால் இன்றைக்கு இருக்கும் ஊடகங்களில் ஒரு சிலவற்றை தவிர பெரும்பாலான ஊடகங்கள் நாட்டின் நலனில் அக்கறை கொண்டுள்ளனவா என்ற சந்தேகம் கிளம்புகிறது.
பரபரப்பாக செய்தி வெளியிட வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை திரித்து கூறுதல் ஒரு வாடிக்கையாகி விட்டது.  நாட்டில் நடக்கும் முக்கியமான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கொலை,கொள்ளை,கற்பழிப்பு, விபச்சாரம்,சினிமா நடிகைகளின் கிசுகிசு போன்ற பரபரப்பான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, முக்கிய செய்திகளை பெட்டி செய்திகளாக போடும் ஊடகங்கள், மிகவும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. 

இன்றைக்கு செய்திகளை வெளியிடும் பல இணையதளங்கள், செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை. ஏதாவது ஒரு இணையதளத்தில் வந்த செய்தியை காப்பி செய்து, உடனே தங்கள் இணையதளத்திலும் வெளியிடும் வழக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. சினிமா நடிகைகள் உட்கார்ந்தால்,நின்றால்,சாப்பிட்டால்,தும்மினாலே அதை ஒரு செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிடும் இணையதளங்கள், பிரதமர்,ஜனாதிபதி போன்றவர்களின் செய்திகளை ஒரு ஓரத்தில் சின்னதாக வெளியிடுகிறார்கள்.

செய்திகளை சேகரிக்க செல்பவர்களும் பரபரப்பான,கிளுகிளுப்பான செய்திகளுக்கே முக்கியத்துவம் தருவதால் வரும் சிக்கல்தான் இது. தர்மபுரியில் மாணவிகள் சென்ற பேருந்தை நயவஞ்சகர்கள் சிலர் எரித்தார்கள். அப்பொழுது உள்ளே மாட்டிக் கொண்ட மாணவிகள் அலறி துடித்துக் கொண்டிருந்ததை வீடியோ எடுப்பதில் காட்டிய அக்கறையை, அந்த மாணவிகளை காப்பாற்றும் முயற்சியில் சிறிதாவது எடுத்திருந்தால், அந்த மாணவிகளை காப்பாற்றி இருக்கலாம் அல்லவா? பரபரப்பான செய்திகாக மாணவிகளின் உயிரைவிட வீடியோவிற்கு முக்கியத்துவம் தந்தது சரியா?


சமீபத்தில் அசாம் மாநிலத்தில் இருபது பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தபோது, காவல் துறைக்கு உடனே தகவல் கொடுக்காமல், உள்ளூர் தொலைக்காட்சி ஊடகம் ஒன்று பாலியல் பலாத்காரத்தை வீடியோ எடுத்து, அதை அவர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி பரபரப்பையும், விளம்பரத்தையும் தேடிக்கொண்டார்கள். இதை அம்மாநிலத்தின் முதல்வர் கூட கண்டித்திருக்கிறார். ஊடகத்தில் வேலை செய்பவர்களுக்கும் சமூக பொறுப்புகள் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.


நித்தியானந்தா, ரஞ்சிதா விஷயத்தில் நடந்த வீடியோ காட்சிகளை விடிய விடிய ஒளிபரப்பிய ஊடங்களுக்கும் இதே நிலைதான்.


எத்தனையோ எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய ஒரு கட்டுரையால் ஆட்சியையே கவிழ்த்திருக்கிறார்கள். புரட்சியை உருவாக்கியிருக்கிறார்கள், மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தங்கள் உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகள் இருக்கும் இடம் சென்று பேட்டி எடுத்திருக்கின்றார்கள். அவர்களின் பொறுப்பு சிலசமயம் மெய்சிலிர்க்க வைப்பதுண்டு.மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போதும், பார்லிமெண்ட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போதும், செய்தியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, செய்த சேவைகளை நினைத்தால் சிலிர்க்க வைக்கின்றது.


எனவே ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, கடமையை உணர்ந்து பணிபுரிந்தால்தான் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

1 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More