Latest News

வதந்தீ என்னும் கொடுந்தீ.....

சமீப காலமாக தமிழக மக்கள் எல்லோரையும் வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய நிகழ்ச்சி வதந்தீ. எது எதற்குத்தான் வதந்தி பரப்புவது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. முன்பெல்லாம் எப்போதாவது வரும் வதந்தீ, இப்போது வாரம் தவறாமல் வருகிறது. இந்த வாரம் என்ன வதந்தீ என்று கேட்கும் அளவிற்கு நிலைமை போய்க்கொண்டே இருக்கிறது. 

இரண்டு வாரங்களுக்கு முன் வட மாநிலத்தவர் முழுவதும் தாக்கப்படுவர் என்கிற வதந்தியால், தென்னிந்தியாவில் வாழும் வட மாநிலத்தவர்கள் அனைவரும் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றார்கள். அதற்காக இரயிலே நிலையத்தில் சேர்ந்த கூட்டத்தைப் பார்த்து சிறப்பு ரயில் விடும் நிலைமை ஆகியது. பின்னர் அது வெறும் வதந்திதான் என்று உறுதி செய்யப்பட்டவுடன், மீண்டும் வடமாநிலத்திவர்கள் தற்போது திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

சென்ற வாரம் மெஹந்தி வதந்தீ. ரம்ஜான் அன்று இந்த வதந்தி வெளியானதால், தமிழகமே அல்லோகலமானது. நடு ராத்திரியில் மருத்துவமனைக்கு சென்று, சோதனை செய்த பெண்களை நினைத்தால், பரிதாப்படுவதா, துக்கப்படுவதா என்றே தெரியவில்லை.

இந்த வாரம் பிறந்த குழந்தை பேசியது என்றும், 4000 குழந்தைகளை பழிவாங்குவேன் என்று கூறியது என்றும் நேற்று ஒரு வதந்தீ கிளம்பியுள்ளது. இது வதந்தி என்று தெரிந்தும், பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எதேனும் தீங்கு வரக்கூடாது என்று தேங்காயில் சூடம் ஏற்றி வருகின்றனர். 

இப்படிப்பட்ட வதந்தியை கிளப்பிவிடுவதால், என்ன லாபம் அடைகிறார்கள் என்றே தெரியவில்லை. நமது மக்களும் கொஞ்சம் கூட தம் பகுத்தறிவை பயன்படுத்தாமல், வதந்திக்கு உடனே கை,கால் வைத்து ஒரு உருவத்தை கொண்டுவருகிறார்கள்.  இப்படிப்பட்ட வதந்தீயால், எத்தனை பேருக்கு டென்ஷன்,துக்கம், பொருள் இழப்பு,அலைச்சல் என்பதை ஏன் வதந்தியை பரப்புபவர்கள் சிந்தித்துப் பார்ப்பது இல்லை. 

சினிமா உலகில் தோன்றும்  கிசுகிசு போலத்தான் வதந்தியும். கிசுகிசுவை படித்தவுடன் எவ்வித பொருட்டுமின்றி எப்படி அடுத்த பக்கத்தை புரட்டுகிறோமோ அப்படியே வதந்தியை படித்தவுடன் அதை உடனே மறந்துவிட்டு அடுத்த வேலையை தொடர்ந்தால், இந்த பிரச்சனையே இல்லை. படித்தவர்கள் அதிகம் வாழும் இந்த காலத்தில் கூட வதந்திக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் ஏற்படுகின்றதே என்பதை நினைக்குபோது உண்மையில் மனம் வேதனைப்படுகிறது. அதுவும் இதுபோன்ற வதந்திகளுக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணைய தளங்களை வதந்தி பரப்புபவர்கள் பயன்படுத்துவதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.

காவல்துறையினர் வதந்தியை பரப்புபவர்களை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த வதந்தியை கட்டுப்படுத்த முடியும். வதந்தி பரப்புவது என்பது சில சமயம் விளையாட்டுக்காகவும், சில சமயம் சீரியஸாகவும் இருக்கிறது. கண்ணதாசன், தான் இறந்தால் எத்தனை பேர் அழுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஒருமுறை அவரே வதந்தியை பரப்பியதாக செய்தி ஒன்று உண்டு. அதுபோலவே எம்.ஜி.ஆர், ரஜினி போன்றோர் குறித்து அடிக்கடி வதந்தி ஏற்பட்டதுண்டு. வதந்தி பரப்புவது என்பது உண்மையில் ஒரு கிரிமினல் குற்றத்திற்கு இணையானது. இருந்தாலும், நம் மக்கள் வதந்தியை ஒரு பொருட்டாக நினைக்காத காலம் வந்தால், வதந்தி பரப்புபவர்கள் தன்னாலேயே திருந்திவிடுவார்கள்.

தீயை விட வேகமாக பரவும் வதந்தீ என்னும் சமூகக்கொடுமையை தவிர்ப்போம். நிம்மதியான வாழ்க்கை வாழ்வோம்.

Follow by Email

Recent Post