Latest News

கடன் அன்பை முறிக்குமா? எலும்பை முறிக்குமா?
கடன் அன்பை முறிக்கும் என்பது பழமொழி. கடன் எலும்பை முறிக்கும் என்பது புதுமொழி. ஆனால் உண்மையில் கடன் வாழ்க்கையையே முறித்துவிடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. கடன் பட்டார் வாழ்க்கை போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பரே கடனின் கொடுமையை ராமாயணத்தில் கூறியிருக்கின்றார்.


கடன் வாங்காதவர்கள் யார் இருக்கிறார்கள். இந்தியாவே கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளதே என்று மனதை தேற்றிக் கொண்டு கடன் வாங்குபவர்களுக்கு ஒரு உபதேசம். நீங்கள் வாங்கும் கடன், உங்கள் சக்திகேற்றவாறு இருக்க வேண்டும். எவ்வளவு கடன் வாங்கினால், நம்மால் திருப்பிக் கொடுக்க முடியும் என்று என்பதை ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து கடன் வாங்க வேண்டும்.

எங்கள் ஊரில் வட்டிக்கு கடன் கொடுக்கும் ஒருவரிடம் நாம் சென்று கடன் வாங்கினால், அவர் நேராக நம்முடைய வீட்டிற்கு வந்து கடனை கேட்க மாட்டார். வேண்டுமென்ற பக்கத்து வீடுகளுக்கு சென்று, நம்முடைய பெயரை சொல்லி, அவருடைய வீடு இதுதானே, அவர் என்னிடம் ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி கேட்பதற்காக வந்துள்ளேன் என்று மானத்தை வாங்கிவிடுவார். நான்கைந்து வீடுகளுக்கு சென்று விசாரித்து விட்டு அதன்பிறகே நம் வீட்டிற்கு வந்து கடன் கேட்பார். அதன்பின் நம்முடைய அக்கம் பக்கத்தவர்கள் நம்மை ஏளனமாக பார்ப்பார்கள். இது தேவைதானா?

அதிகம் படித்த மேதாவிகள் சிலர் தற்போது வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுகின்றனர். கிரெடிட் கார்டு இருக்கின்றதே என்று வேண்டாத பொருட்களையெல்லாம் வாங்கி குவித்துவிட்டு, பின் கடனை கட்ட முடியாமல், திண்டாடி வருவார்கள். கிரெடிட் கார்டு கொடுத்த வங்கியோ சில நாட்களில் நீதிமன்றம் மூலம் ஜப்தி நடவடிக்கை எடுக்கும்போதுதான் தெரியும் கடனின் கொடுமை என்னவென்று.


கடன் பிரச்சனையால்தான் சொந்தபந்தம்,உற்றார் உறவினர், ஏன் குடும்பத்தில் மனைவி, மக்களை கூட இழக்க நேரிடலாம். பல வருடங்கள் ஒன்றாக இருந்த  நண்பர்களும் கடன் பிரச்சனையால் தங்கள் நட்பை இழந்திருக்கின்றார்கள். எனவே யாரிடம் கடன் வாங்கினாலும், காலந்தவறாமல் திருப்பிக் கொடுத்தால்தான் நம்முடைய மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். கடன் பிரச்சனையால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்ற கொடுமைகளுக்கு ஆளாகாமல், முடிந்தவரை கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்துங்கள். அதையும் மீறி கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை வந்தால், அளவோடு வாங்கி, உங்களையும், உங்கள் குடும்பதையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.


பெரும்பாலும் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கக்கூடாது என்று எவரும் நினைப்பதில்லை. ஆனால் திடீரென ஏற்படும் சூழ்நிலை கடன் வாங்கியவர்களை திண்டாட வைக்கின்றது. அப்போதுதான் அவர் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் போகின்றார். ஒரு தொழில் செய்வதற்கு கடன் வாங்கினார் என்றால், அந்த தொழிலில் சம்பாதித்து கடனை அடைக்க வேண்டும் என்பதுதான் முறையானது. ஆனால் திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டால், கடன் கொடுக்க முடியாதவராக ஆகின்றார். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே கடன் வாங்க வேண்டும். மற்றவர்கள் இருப்பதை வைத்து வாழ்ந்து கொள்ள் வேண்டும்.


கடன் கொடுத்த நிறுவனங்கள் சில சமயம் அடாவடியாக நடந்துகொள்ளும். அவர்கள் நடந்து கொள்ளும் முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம் அவர்களுடைய நோக்கம் அவர்கள் கொடுத்த திருப்பி வாங்கவேண்டும் என்ற நியாயமான காரணம் தான். எனவே கடன் வாங்கியவர்கள் தங்கள் வாழ்க்கையை பிரித்து கொள்ள வேண்டும். கடன் வாங்குவதற்கு முன் பெரிய செலவாளியாக இருந்தால், கடன் வாங்கிய பின் செலவை குறைத்து கொள்ள வேண்டும்.  நம்முடைய தமிழக அரசு போல கடன் வாங்கி இலவசங்கள் கொடுத்துவிட்டு, பின் அத்தியாவசிய தேவைக்கு பணம் இல்லாத நிலை நம்மில் யாருக்கும் வரக்கூடாது.

வாங்கிய கடனை திட்டமிட்டு திருப்பி கொடுத்தால், கடன் நம் அன்பையும் முறிக்காது, எலும்பையும் முறிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Follow by Email

Recent Post