கிரெடிட் கார்ட் பயனர்களின் கவனத்திற்கு:


கிரெடிட் கார்ட்  பயனர்களின் கவனத்திற்கு:


கிட்டத்தட்ட எல்லா மத்தியதரக் குடும்பங்களிலும் குளிர் சாதனப் பெட்டி, பெரிய அளவுள்ள தொலைக்காட்சி பெட்டி, துவைக்கும் இயந்திரம் இருக்கிறது.

எல்லோரிடமும் இரு சக்கர வாகனமோ, காரோ ஏதோ ஓர் வாகனம் இருக்கிறது. மக்களின் வாங்கும் ஆற்றல் அதிகரித்துள்ளது என்று  பல செய்திகள் வருகின்றன. உண்மையில் மக்களில் முக்கால்வாசிப்பேர்கள் கடனில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்! கிரெடிட் கார்டுகள் பண்ணும் புண்ணிய காரியம் இது!

இப்போது கிரெடிட் கார்டுகளை திருடும் திருடர்களும் புதுப்புது வழிகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

காட்சி 1:
வழக்கமாக ஜிம் செல்லும் இளைஞர் ஒருவர் தினமும் செய்வதுபோல அன்றும் தனது உடைமைகளை (பர்ஸ் உள்பட) அங்கிருக்கும் லாக்கரில் வைத்து விட்டு உடற்பயிற்சி செய்யச் செல்லுகிறார். திரும்பி வந்து பார்க்கும்போது லாக்கர் திறந்து இருக்கிறது. ‘பூட்டி விட்டுத்தானே போனேன்.....’ என்ற யோசனையுடன் தனது பர்ஸை திறந்து பார்க்கிறார். எல்லாம் சரியாக இருக்கிறது.

சில வாரங்கள் கழித்து அவருக்கு கிரெடிட் கார்ட்  அலுவகத்திலிருந்து கார்ட் கணக்கிலிருந்து பல லட்சம் ரூபாய்கள் செலவழித்து இருப்பதாகவும், பணத்தை உடனடியாகக் கட்டுபடியும் தகவல் வருகிறது. பயங்கர கோபத்துடன் கன்னா பின்னாவென்று சத்தம் போடுகிறார், தான் அவ்வளவு பெரிய தொகைக்கு எதுவுமே வாங்கவில்லை என்று.

பயனாளர் பொறுப்பதிகாரி ஒன்றுக்கு இரண்டுமுறை சரி பார்த்துவிட்டு ‘உங்கள் கார்ட் தொலைந்து போய்விட்டதா என்று கேட்கிறார். ‘இல்லை’ என்று முதலில் சொன்ன இளைஞர், சட்டென்று நினைவுக்கு வர, தனது பர்ஸை திறந்து பார்க்கிறார். அவரது கார்ட் போலவே, காலாவதியான வேறு ஒரு கார்ட் இருக்கிறது அவரது பர்ஸில்!

கார்ட் தொலைந்துபோன விஷயத்தை அவர் முதலிலேயே தெரிவிக்காததால் தன் கையைவிட்டு தான் வாங்காத பொருட்களுக்கு அத்தனை பெரிய தொகையைக் கட்டவேண்டிய நிர்பந்தம் அவருக்கு.
கிரெடிட் கார்ட் நிறுவனங்களும் சிறிய தொகைப் பற்றி அவ்வளவு கவலைப் படுவதில்லை. பெரிய தொகையாக இருந்தால் உஷாராகிவிடுகிரார்கள்.

காட்சி 2:

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பில் செலுத்த தன் கார்டை கொடுக்கிறார் ஒருவர். அங்கிருக்கும் பணியாளர் அதை வாங்கிக் கொண்டு போய் பில் செலுத்திவிட்டு திரும்பக் கொண்டு வருகிறார். கார்டின் சொந்தக்காரர் தன்னிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட கார்டைப் பார்க்கிறார். காலாவதியான வேறு கார்ட் அது. அதைப்பற்றி கேட்டவுடனே அந்தப் பணியாளர் மறுபடி பணம் செல்லுத்துமிடத்திற்குச் சென்று சரியான கார்டை எடுத்து வருகிறார்! பணியாளர் பணம் செலுத்தும் இடத்திற்குச் செல்லும்போதே அங்கிருப்பவரிடம் தவறான கார்டை தூக்கிக் காண்பிக்கிறார். அவர் உடனே மேசையைத் திறந்து சரியான கார்டைக் கொடுக்கிறார். இதெல்லாமே திறமையான நாடகம்!

எப்போது நீங்கள் கார்டை பயன்படுத்தினாலும் ஒன்றுக்கு பத்து தடவை திரும்பி வருவது உங்கள் கார்டா என்று சரி பாருங்கள்.

காட்சி: 3
ஒருவர் பீட்ஸா விற்கும் கடைக்குப் போய் பிட்ஸா வாங்கி பணம் செலுத்த தனது கார்டை கொடுக்கிறார். கவுண்டரில் இருக்கும் இளைஞன் கார்டை பயன்படுத்தி விட்டு இவரிடம் கொடுக்காமல் கவுண்டர் மேசைமேல் வைத்து விட்டு தனது கைபேசியை எடுக்கிறான். கார்ட் கொடுத்தவரிடமும் அந்த இளைஞனிடம் இருப்பதுபோல கைபேசி இருக்கிறது. அதனால் அவர் இவன் என்ன செய்கிறான் என்று பார்க்கிறார். அவன் தனது கைபேசியில் ஏதோ எண்களை அழுத்துவதுபோலச் செய்கிறான். அவனது கைபேசி அந்தக் கார்டை புகைப்படம் எடுக்கும் சத்தம் இவருக்குக் கேட்கிறது. இவரிடமும் அதேபோல கைபேசி இருந்ததனால் அவன் என்ன செய்கிறான் என்று இவருக்குப் புரிந்தது.

ஆகவே உங்கள் கிரெடிட் கார்டை எங்கே எப்போது பயன்படுத்தினாலும் உங்களைச்சுற்றி இருப்பவர்களைக் கவனியுங்கள்; திருப்பிக்கொடுக்கப் படுவது உங்களுடையதா என்று ஒரு தடவைக்குப் பல தடவை சரி பாருங்கள்.

கவனமாக இருங்கள். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் யாருடைய உல்லாசத்திற்கோ பயன் படக்கூடாது! ஜாக்கிரதை!

இப்போது கிரெடிட் கார்ட் வழங்கும் வங்கிகள், எந்த வங்கியிலிருந்து கார்ட் பெறுகிறீர்களோ  அந்த வங்கியிலேயே இணையம் மூலம் நமது கார்டை பதிவு செய்ய வழி செய்கின்றன. இதனால் நீங்கள் கார்டைப் பயன்படுத்திய அடுத்த நொடி உங்களுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப் படுகின்றது.

இந்த வசதியினால் உங்கள் கார்ட் உங்களிடம் இருக்கிறதா, நீங்கள்தான் பயன்படுத்தியதா என்று உடனடியாகத் தெரிய வரும்.

கிரெடிட் கார்ட் இல்லாமல் இருப்பது உத்தமம். தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்துகிறேன் என்று சொல்பவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது அதி முக்கியம்.

1 comments:

அக்கா,டெபிட்கார்டு பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More