காணாமல் போன சிட்டுக்குருவிகள்!“விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போல...”
நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கவலைப் பட்டுக் கொண்டு நின்ற தனது மனைவி செல்லம்மாவைப் பார்த்து, அவள் பக்கத்து வீட்டிலிருந்து கடனாக வாங்கி வந்திருந்த அரிசியை எடுத்து வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து இருந்த சிட்டுக்குருவிகளுக்கு இறைத்தபடியே சிரித்துக் கொண்டே பாடினாராம் பாரதியார்.

இந்தக் குருவிகள் கூட்டங்கூட்டமாக வசிப்பவை. மிகுந்த இரைச்சல் போடுபவை; நாம் சாப்பிடும் சாப்பாடோ, மற்ற தின்பண்டங்களோ துளி கீழே சிந்தினாலும் எங்கிருந்தோ ‘சிட்டா’ க பறந்து வந்து தன் அலகினால் கொத்தி எடுத்துக் கொண்டு ‘சிட்டா’ க பறந்து போகும் அதனால்தான் இதற்கு சிட்டுக் குருவி என்று பெயர் வைத்தார்களோ?

வீட்டு முற்றங்கள் தான் இவைகளின் ராஜ்ஜியம். இவை குதித்துக் குதித்து வரும் அழகே தனி. இந்தச் சிட்டுக் குருவிகள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. இவைகளின் இரைச்சல் தாங்காமல் எவ்வளவு முறை விரட்டினாலும் திரும்பவும் வெகு சகஜமாக  வீட்டுக்குள் நிழைந்து வீட்டு உத்தரங்களிலும், சுவர்களில் இருக்கும் சின்னச் சின்னப் பொந்துகளிலும் கூடு கட்டுபவை. குருவி கூடு கட்டுவது குடும்பத்திற்கு நல்லது என்று கருதப் பட்டதால் குருவிக் கூட்டைக் கலைக்க மாட்டார்கள்.

இந்தக் குருவிகள் பெரும்பாலும் தானியத்தைத் தின்று வாழ்பவை. பழங்கள், கொட்டைகள், குப்பைகள், பிரட் துண்டுகள் என்று கிடைத்ததை தின்று வாழக் கற்றவை. இந்த குணமே இவை உலகெங்கிலும் காணக் கிடைப்பதற்குக் காரணம். நகரப் புறங்களில் வீடுகளிலும், கிராமப் புறங்களில் வயல் வெளிகளிலும், தானியக் கிடங்குகளின் அருகிலும் வாழக் கூடியவை.

இவைகளின் அபரிமிதமான எண்ணிக்கை, எந்தச் சூழலிலும் வாழும் பாங்கு, மனிதர்களைக் கண்டு பயப்படாத தன்மை இவற்றினாலேயே சிட்டுக்குருவிகள் பறவை இனங்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன. இவைகளைப் பற்றிய ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? இதுவரை இவைகளைப் பற்றி 5000 விஞ்ஞான அறிக்கைகள் வெளிவந்துள்ளனவாம்.

முன்னொரு காலத்தில் பல்கி பெருகி இருந்த சிட்டுக் குருவி இப்போது அரிதாகி விட்ட காரணம் என்ன? எங்கே போயின இந்தக் குருவிகள்?
·         அந்தக் காலத்தில் – மாடி இல்லாத கூரை வீடுகளின் காலம்....மர உத்திரங்கள் இருந்த காலம். குருவிகளுக்குக் கூடு கட்ட எக்கச்சக்கமான இடங்கள். பழைய தனி வீடுகள் போய் அடுக்குமாடிக் கட்டிடங்கள் வந்துவிட்ட பின்பு பாவம் குருவிகளுக்கு கூடு கட்டிக் குஞ்சு பொரிக்க  இடம் இல்லாமல் போய்விட்டது. வீட்டுத் தோட்டங்களும் குறைந்து /மறைந்து விட்டன.

·         விவசாயத்திலும் ஏகப்பட்ட மாறுதல்கள்; செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் பூச்சிகள் இறந்துவிடுகின்றன. சிட்டுக்குருவிகள் தானியம் தின்று வாழக் கூடியவை என்றாலும், தங்கள் குஞ்சுகளுக்குக் கொடுக்க சிறு பூச்சிகளையும், புழுக்களையுமே தெரிவு செய்கின்றன. குஞ்சுகளுக்கு கொடுக்க உணவு இல்லாதபடியாலும் அவைகள் வாழ தகுந்த இடங்கள் இல்லாதபடியாலும்  குஞ்சுகள் பறவைகள் ஆவதற்கு முன்பே  இறந்து விடுகின்றன.

·         சிட்டுக் குருவிகள் பற்றிய ஆராய்ச்சியில் மேதையான டெனிஸ் சம்மர்ஸ்-ஸ்மித் இந்த இனம் குறைய காரணம் என்று சொல்லுவது என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற “unleaded petrol” தான்! வியக்கவைக்கும் உண்மை இது. இந்த பசுமைப் பெட்ரோலின் கழிவுப் பொருட்களைத் தின்னும் சின்னச்சின்ன பூச்சிகள் அழிந்து விடுகின்றன. சிட்டுக் குருவிகளுக்கு பூச்சிகள் கிடைப்பது அரிதாகி விடுகிறது.

·         நகரப் புறங்களில் குப்பைக் கழிவுகள் அதிகமாகி விட்டபடியால் காக்கைகளும், பூனைகளும் பெருகி விட்டன. இவை சிட்டுக் குருவிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன.

இந்த இனத்தை எப்படிக் காப்பாற்றலாம்?
பல பொது நிறுவனங்கள் சிட்டுக் குருவிகளைக் காப்பாற்ற, அவைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. குருவிக் கூடுகளை தத்து எடுத்துக் கொள்ளவும், விருப்பமுள்ளவர்களின் வீடுகளில் பறவை ஆகார ஊட்டியை (Bird feeders), பறவைக் குளியல் (bird bath) வைக்கவும் உதவுகிறார்கள். இந்த நிறுவனங்கள் தனி மனிதர்கள் தங்கள் வீடுகளில் குருவிக்கூடு அமைக்க ஊக்கம் அளிக்கின்றன.

குருவிக்கூடு அமைப்பது எப்படி?
·         ஒரு சிறிய அட்டைப் பெட்டியில்  வைக்கோலை அடைத்து வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ, மரத்திலோ  தொங்கவிடலாம்.
·         இந்தப் பறவை வீட்டிற்குள் ஒரு சிறிய கிண்ணத்தில் பறவைக் குளியலுக்கு வசதியாக நீர் வைக்கலாம்.
·         சமைத்த உப்பு சேர்க்காத அரிசிச் சோற்றை வைக்கலாம்.
இந்த நிறுவனங்கள் விருப்பம் இருப்பவர்களுக்கு ‘குருவிகூடு’ களைக் கொடுக்கிறது. குருவிகளுக்குத் தேவையான தானியங்கள், வீட்டில் வளர்க்க கூடிய பழச் செடிகள், புதர்ச் செடிகளையும் இந்த நிறுவனம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச் செடிகள் சிட்டுக்குருவிகளை ஈர்க்கும்.

நாமும் நம்மால் இயன்ற அளவுக்கு சிட்டுக்குருவிகளை காப்பாற்ற முயல்வோமா?


8 comments:

என் வீட்டில் பெரியகூண்டு உருவாக்கி அதில் சிட்டுகுருவிகள் இருபது,லவ்பேர்ட்ஸ் முப்பது ஜோடிகளையும் வளர்த்துவருகிறோம். கைப்புள்ளை பொழுதுபோக்கு அவைகள்தான்.என் தாத்தா பலவகை மிருகங்களையும்,அப்பா என்னையும் வளர்த்தாங்க.அதான்நானும்...

அழகான படமும் , அற்புதமான கட்டுரையும்....

ஒவ்வொரு பதிவின் போதும் மதுர கவியாரின் கருத்து என்னவாக இருக்கும் என்று சிந்திப்பது உண்டு. பறவைகளை வளர்ப்பது பற்றி மிகுந்த மகிழ்ச்சி!நகைச்சுவையும் பொருட்சுவையும் கலந்த கருத்து நன்றாக இருக்கிறது.
(மாமனாரைக் கண்டுபிடிச்சீங்களா?)

நன்றி ஸ்ரவாணி! உங்கள் கவிதைகளை பதிவர் சந்திப்பில் கேட்க ஆவலாக இருக்கிறேன்!

அருமை அம்மா, என் பதிவையும் படித்தமைக்கு, நன்றி

அருமை அம்மா, என் பதிவையும் படித்தமைக்கு, நன்றி

ரொம்ப சுறுசுறுப்பாகச் செயல்படும் செழியனுக்கு முதலில் ஒரு ஓ.....ஹோ..!
என் பின்னூட்டம் பார்த்துவிட்டு உடனே எனது முன் பதிவையும் தேடிக் கண்டுபிடித்து படித்ததற்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும் இளைஞரே!
வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்..!


மிக்க நன்றி அம்மா, வாழ்த்துங்கள் வளர்கிறேன்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More