சுதந்திர தினத்தில் என்ன செய்யப்போகிறோம்.

வழக்கமாக சுதந்திரதினம் என்றால் என்ன நடக்கின்றது. அன்றைக்கு விடுமுறை நாள். காலையில் தாமதமாக தூங்கி எழுந்து, காலை டிபனை முடித்துவிட்டு, டிவி முன் உட்கார்ந்து, சுதந்திரத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத நடிகர், நடிகைகளின் பேட்டிகள், சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், உலக தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை ஒளிபரப்பாகாத மொக்கை திரைப்படத்தையும் பார்த்துவிட்டு, பொழுதை போக்குகிறோம். சுதந்திர இந்தியாவிற்கு நாம் என்ன செய்தோம். சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலைப்போரட்ட வீரர்களுக்கு நாம் எதாவது செய்கிறோமா என்பதை தயவுசெய்து இந்நாளில் சிந்தித்து பாருங்கள்.

சிலர் ஒவ்வொரு புத்தாண்டு நாளில் ஏதாவது ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்வார்கள். புகைபிடிப்பதை நிறுத்துவது, மது அருந்துவதை நிறுத்துவது என்பது போன்ற உறுதிமொழிதான். அது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் அப்படி ஒரு உறுதிமொழி எடுப்பதே பெரிய விஷயம்தான். அதுபோல சுதந்திர தினத்திலும், நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம். ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லம் சென்று நம்மால் முடிந்த உதவி செய்வது, இவையேல்லாம் முடியாவிட்டால் ரத்ததானம், உடல் உறுப்புதானம் செய்வது போன்ற ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்தால், நாம் கொண்டாடும் சுதந்திர தினத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.,

சுதந்திர தினத்தை நமது அரசியல்வாதிகள், தங்கள் கட்சியையும், தங்களையும் பிரபலப்படுத்திக்கொள்ளும் ஒரு நாளாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களின் சுதந்திர தின கொண்டாட்டத்தால், வேறு எவ்வித பலனும் இருக்கப்போவதில்லை. தேசியக்கொடியை கொடியேற்றிவிட்டு, வீரவசனங்கள் பேசிவிட்டு, அவர்களுடைய வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். ஆனால் நாம் அவ்வாறே இருக்க வேண்டுமா? யாராவது ஒருவருக்காவது ஒரு சிறிய உதவியை செய்தால், அதுவே மிகப்பெரிய சுதந்திர தினக் கொண்டாட்டம் ஆகும்.

குண்டு துளைக்காத மேடை இல்லாமல், கறுப்புப்பூனை பாதுகாப்பு இல்லாமல், நம் தலைவர்கள் என்று தேசியக்கொடியை ஏற்றுகிறார்களோ அன்றுதான் நமக்கு உண்மையான சுதந்திரதினம் என்பதை அரசியல்வாதிகள் என்று புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுவது ஒவ்வொரு இந்தியனின் கடமைதான். ஆனால் அந்த சுதந்திரதினத்தை ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தோடு கொண்டாடினால், நமக்கும் நாட்டிற்கு நலம் பயக்கும்.

2 comments:

//சுதந்திரதினத்தை ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தோடு கொண்டாடினால், நமக்கும் நாட்டிற்கு நலம் பயக்கும்.//
உண்மையான வார்த்தைகள்.
பாராட்டுக்கள்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

என் பாட்டன் கணா சுதந்திர தாகம் எமக்கும் உண்டு..

என்று தனியும்..?

அனைவரும் ஒன்றினைந்து ஒரு புதிய சமூகம் காண வேண்டும்..

வாழ்த்துக்கள்!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More