உளமார உண்போம் வாருங்கள்!மனச் சாளரத்தைத் திறப்பதில் நமது உணவுக்கும் பெறும் பங்கு உண்டு.
நம் உடலானது நாம் உண்ணும் உணவினால் ஆனது. உணவு என்பது நம் உடலுக்கு வலு சேர்ப்பது மட்டுமல்ல; நம் மனத்துக்கும் வளம் சேர்ப்பது. நாம் உட்கொள்ளும் உணவு நமது குணங்களையும், நமது மன நிலையையும் தீர்மானிக்கும்.

சில உணவுகள் நமக்கு அதீதத் தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தையும் கொடுக்கும். சில நம் மனநிலையை உயர்த்தும். என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதுடன், எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

காலை உணவை தவிர்க்கக் கூடாது. ஒவ்வொரு வேளையும் பழங்களும், பச்சைக் காய்கறிகளும் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு உணவு மிகவும் கொஞ்சமாகவும் இலகுவாக செரிக்கும்படியும் இருக்கட்டும். இரவு மிகவும் நேரம் கழித்து உண்பது கூடாது.

தேடியந்திரத்தின் மூலம் எனது பதிவுகளுக்கு வருபவர்களில் அதிகப்படி-யானவர்கள் தேடுவது ‘உடனடியாக உடல் இளைக்க’, ‘ஸ்லிம் ஆவது எப்படி?’, இரண்டு மாதத்தில் உடல் பருமன் குறைய’  இவைகளைத்தான்!

தினசரி நாளிதழில் ஒரு செய்தி:

நமது தலைநகர் புது தில்லியில் பள்ளி செல்லும் சிறுவர்களில் மூன்று பேரில் ஒருவர் அளவுக்கு மீறிய உடற்பருமனுடன் இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் செல்வந்தர் வீட்டுக் குழந்தைகள் என்று நினைத்தால் தவறு. மத்திய தரக் குடும்பக் குழந்தைகளில் 10 க்கு ஒரு குழந்தை வயதிருக்கு மீறிய உடற்பருமனுடன் இருக்கின்றது. 

இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன? நமது ஒழுங்கீனமற்ற உணவு முறையைத்தான்.

இந்த நவீன யுகத்தில் உண்பது என்பதும் ஒரு வேலையாகிவிட்டது.
‘சீக்கிரம் சாப்பிடுங்கள்; எனக்கு வேலை ஆக வேண்டும்’ என்று ஒவ்வொரு இல்லத்தரசியும் சொல்லுகிறார்கள். கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு, நடந்துகொண்டு, அலைபேசியில் பேசிக்கொண்டு அல்லது பேப்பரில் ஒரு கண், தொலைக்காட்சியில் ஒரு கண் என்று  சாப்பிடுவது என்பது ஒரு செய்து தீர்க்கவேண்டிய கட்டாயக் கடமை என்ற நிலை வந்துவிட்டது.

தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு தட்டில் என்ன போடுகிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது.

தரையில் அமர்ந்துகொண்டு தலைவாழை இலைபோட்டு நிதானமாக ருசித்து ரசித்து சாப்பிடுவது என்பது போன தலைமுறையுடன் முடிந்து போன பழங்கதை ஆகிவிட்டது. அது போகட்டும்; உணவு மேசையிலாவது அமர்ந்து சாப்பிடுகிறார்களா என்றால் ஊஹும், அதுவுமில்லை. குடும்பத்துடன் சாப்பிடுவது என்பதும் மலையேறிவிட்டது.

காலையில் இல்லத்தரசிகளுக்கும், கணவன்மார்களுக்கும் அலுவலகம் போகும் அவசரம்; பிள்ளைகளுக்கு பள்ளிக்கும், கல்லூரிக்கும் கிளம்பும் அவசரம். உட்கார்ந்து சாப்பிட நேரமில்லை. மதிய உணவு நமது டிபன் பாக்ஸ் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு தான்! இரவாவது நிம்மதியாக, நிறுத்தி, நிதானமாக சாப்பிடுகிறோமா என்றால்  அந்தப் புண்ணியத்தையும் தொலைக்காட்சிப்பெட்டி இல்லையென்றாக்கி விடுகிறது.

இதன் விளைவு என்ன?

சிறிய வயதிலேயே அளவுக்கதிகமான உடற்பருமன், அதைத்தொடர்ந்து வரும் வரும் ‘சர்க்கரையை மற, உப்பைக் குறை’ என்ற நோய்கள்தான்.
நாம் தலைமுறை தலைமுறையாக சாப்பிட்டுவரும் உணவுகளை விடுத்து, அதிகக் கலோரிகளைக் கொண்டுள்ள உணவுகள், பாஸ்ட் புட் எனப்படும் குப்பை உணவுகள் சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்தையும் குறைத்து மன நிலையையும் வெகுவாகப் பாதிக்கின்றன.

வீட்டு உணவு தான் எப்போதும் சிறந்தது. எப்போதாவது ஒரு சமயம் வெளியில் சாப்பிடலாம்; தவறில்லை.

இளமையில் உணவை மருந்துபோல் உண்டால், வயதான காலத்தில் மருந்துகளை உணவு போல் உண்ண வேண்டிய அவசியம் நேராது.

உணவை வீணாக்காமல் உண்ணுவோம்:
நாம் உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவின் பின்னும் பலரின் உழைப்பு இருக்கிறது. நம் வீட்டுப் பெண்களின் உழைப்பு மட்டுமல்ல. வெயில் மழை பாராது நிலத்தில் நெற்றி வியர்வை சிந்த உழைக்கும் விவசாயிகளிலிருந்து தொடங்கி நம் இலையில் – தட்டுகளில் – சமைத்த உணவாக விழும் வரை  எத்தனையெத்தனையோ பேர்கள் பாடுபடுகிறார்கள். நாம் வீணாக்கும் ஒவ்வொரு சிறு துளி உணவும் இவர்களின் உழைப்பை அலட்சியப்படுத்துவது போல, அல்லவா?

எத்தனையோ மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கிடைக்காமல் பசியுடன் வாழ்க்கை நடத்தும்போது நாம் உணவை வீணடிப்பது நம்மைப் படைத்தவனை அவமானப் படுத்துவது போல!

கோவில் பிரசாதம் ரொம்ப ருசியாக இருக்கும். எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ஏன் தெரியுமா? சமைக்கப் பட்டவுடன் கடவுளுக்குப் படைக்கப் படுவதுதான். உண்பதற்கு முன் ஓர் நிமிடம் கடவுளை த்யானித்து விட்டு உண்ணுவது அந்த உணவை பவித்திரமாக்கும்.

சமைக்கும் பெண்களுக்கு/ஆண்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்: சமைக்கும்போது மனதில் கோபங்கள், தீய எண்ணங்கள் வேண்டாம். நமது தீய சிந்தனைகள் சாப்பிடும் உணவை விஷமாக்கும். சமைக்கும்போது கடவுளுக்கு தோத்திரங்கள் சொல்லிக் கொண்டே சமைக்கலாம். இது உணவின் தோஷங்களை சமனம் செய்யும்.

சாப்பிடும்போது சண்டை சச்சரவுகள் வேண்டாம்.

சாப்பிடும்போது உணவில் மட்டுமே கவனம் செலுத்துவோம். 

அப்போதுதான் நாம் உண்ணும் உணவு அமிர்தமாக மாறி நம்மை நோய் நொடிகள் வராமல் காக்கும்.

நினைவிருக்கட்டும்: நாம் உண்ணும் உணவுதான் நம்மை உருவாக்கும் –உட்புறத்திலும், வெளிப்புறத்திலும்.

உளமார, வயிறார கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே சாப்பிடுவோம். உண்ணும் உணவின் மூலம் உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணுவோம். 


3 comments:

பசியாற்றக்கூடிய வகையில் சுவையான பதிவு,,

உணவு என்பதே ஒரு கலைதான்...
அதை உண்பதிலும், செய்வதிலும் ஈடுபாடு இனிமேல் நிச்சயம் வரும்,,,

எனது படைப்புகளை அக்கறையுடன் படித்து உடனுக்குடன் பின்னூட்டம் தந்து உற்சாகப்படுத்தும் Cpede News குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

அம்மா,என்னைபோல் சாப்பாட்டுல பாத்திகட்டிஅடிக்கிறதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More