நம் பிள்ளைகளை நாம் ஒழுங்காக வளர்க்கிறோமா?

அன்பர்களுக்கு வணக்கம், கடந்த பதிவில் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் விரும்பிய பிரிவில் படிக்க விடுங்கள் எனக் கூறியிருந்தேன். அதனை படிக்காதவர்கள் கீழே உள்ள இணைப்பினை பயன்படுத்தி படித்து விடுங்கள்.


படித்து விட்டால்தான் ஒரு தொடர்ச்சி இருக்கும். சரி விசயத்திற்கு வருவோம். பிள்ளைகளுக்கு பிடித்த பிரிவில் சேர்த்து விட்டால் மட்டும் போதுமா? அவர்களுக்கு தானாக படிக்க ஆர்வம் வருமா? அதுவும் இப்போதிருக்கும் சமுதாயத்தில் பிள்ளைகளுக்கு எப்படி தவறு செய்யலாம்? என்பதை சொல்லித்தரும் காரணிகள் தான் அதிகம், உதாரணம் ஊடகத்துறை.


 எனக்கு ரொம்ப நாளாக பெற்றவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வி உள்ளது, யாராவது பிள்ளையிடம் எதற்காக படிக்கிறோம் என்று விளக்கியதுண்டா? பேச்சுவாக்கில் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதை தவிர, படிப்பு எதற்காக என்று பிள்ளைகளுக்கு விளக்கியதுண்டா? சரி ஒருவேளை உங்களுக்கே தெரியாமல் இருந்திருந்தால் எடுத்து சொல்லாமல் இருந்திருப்பீர்கள், நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.


பெரும்பாலான பெற்றோர்கள் படிப்பதை கவுரவத்தின் அடையாளமாகவும், வேலைக்கு செல்வதற்கான தகுதியாகவும்தான் பார்க்கிறார்கள், அதனால் தான் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களை பார்ப்பவர்கள் அவனது பொது அறிவு மற்றும் பண்பாடு, ஒழுக்கங்களை பெரிதாக கவனிப்பதில்லை.


முதலில் கல்வி எதற்கு என்றால் பிள்ளைகளுக்கான தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளவும், நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளவும்தான், இப்போதுள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன, அதற்கு ஒரு வகையில் பெற்றவர்களாகிய நாமும் ஒரு காரணம்.


நம் பிள்ளை முதல் மதிப்பெண் மட்டும் வாங்கினால் போதுமா? தான் வாழும் ஊரின் பின் கோடு தெரியாமல் எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் தெரியுமா? ஒரு வங்கிக்கு சென்று காசோலை மாற்ற படித்த பிள்ளைகள் தயங்குகிறார்கள்? ஒரு அரசு அலுவலகத்துக்கு போய் ஏதேனும் ஒரு வேலையாக விண்ணப்பம் எழுத அது போல் மாதிரி ஏதேனும் இருந்தால் குடுங்கள் என்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வழியில் யாருக்கேனும் அடிபட்டால் கண்டும் காணாமல் வரவும், பிரச்சனை என்றால் அதில் சிக்காமல் ஒளிந்து கொள்ளவும் தான் கற்றுக் கொள்கிறார்கள். கற்றவன் மற்றவர்களுக்கு மாதிரியாக இருக்க வேண்டாமா? ஓட்டு போட சலிப்பாக வீட்டிலேயே அமர்ந்து கொண்டு மற்றவர்களை குற்றம் சொல்லத்தான் அவர்களை படிக்க வைத்தோமா?


படிக்கின்ற பிள்ளைகளுக்கு முதலில் தன்னம்பிக்கை, ஒழுக்கம், பண்பாடு, நாட்டுப்பற்று அவசியம் பயிற்றுவிக்க பட வேண்டும், இவைகள் இப்போது எந்த நிறுவனங்களும் சொல்லியும் தருவதில்லை. புத்தகத்தில் இருப்பதை மட்டும்தான் கற்று தருகிறார்கள். வேலைக்கு எப்படி செல்வது என்பதை பணம் வாங்கிக் கொண்டு கற்று தருகிறார்கள். 

இதற்கு தீர்வு நம் கையில் தான் இருக்கிறது, நம் பிள்ளைகள் படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் என்ன செய்கிறான் என்பதை விழிப்போடு கவனியுங்கள், நம் பிள்ளை முதல் மதிப்பெண் மட்டும் பெற்றால் போதாது, நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் நெஞ்சில் பதியுங்கள்.


தினசரி செய்திகளை பிள்ளையுடன் விவாதியுங்கள், அவனுக்காக நீங்கள் சினமாவையும் பார்க்கலாம், அப்போதுதான் அவன் உங்களுக்காக செய்திகளை பார்ப்பான். சின்ன சின்ன பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படையுங்கள், சின்ன பசங்க, படிக்கற பசங்களுக்கு என்ன தெரியும்னு நினைக்காம எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக் குடுக்க ஆரம்பிங்க.


பிள்ளைங்க மேல முழுசா நம்பிக்கை வைக்கறது தப்பு இல்லை, அதுக்குனு அவனை கைக்கழுவி விடறதுதான் தவறு, அவன் படிப்பை பற்றி பேசுங்கள், உங்கள் வேலை மற்றும் தொழிலை பற்றி அவனிடம் விவாதியுங்கள். முதலில் உங்கள் குடும்ப கஸ்டங்களை அவனுக்கு தெரிய படுத்துங்கள், அப்போதுதான் அவனுக்கு அவன் பொறுப்பு புரியும்.

உங்கள் வீட்டு பிரச்சனை மட்டுமல்ல, நாட்டு பிரச்சனையையும் தீர்க்க போவது அவன் தான், அவனது தலைமுறைதான் என அவர்களுக்கான கடமையை முதலில் அவர்களுக்கு உணர்த்துங்கள், அவர்கள் புரிந்து கொண்டதும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள், எப்படி செய்ய வேண்டும் என்பதை அவனே சிந்தித்து கொள்வான். 

நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பிள்ளையிடம் நண்பனாக பழகி நல்லவைகளை குருவாக கற்று தர வேண்டியதுதான்.

மேல கூறிய அனைத்தும் என் கருத்துக்களே, ஏதேனும் பிழை இருப்பின் தெரிவியுங்கள். நம் பிள்ளைகளின் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

5 comments:

மேற்கூறிய அனைத்தும் இன்றையநிலையை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளது,வாழ்வதுஒருமுறை வழிசெய்வோம்வாருங்கள் வாழ்த்தட்டும்
வரும்தலைமுறை...

மேற்கூறிய அனைத்தும் இன்றையநிலையை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளது

கல்வி எதற்கு என்றால் பிள்ளைகளுக்கான தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளவும், நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளவும்தான்//
ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌தும் ஆட‌ம்ப‌ர‌ வாழ்வும் இர‌ண்டாம் ப‌ட்ச‌மாய் க‌ருதும் ம‌ன‌ப்பான்மை வ‌ள‌ர்ந்தால் தான் இவையெல்லாம் சாத்திய‌ப்ப‌டும். அடுத்த‌வ‌ரை முன்மாதிரியாக‌ கொள்வ‌தை விட‌ ந‌ம்மை முன் மாதிரியாக‌ பிற‌ர் கொள்ள‌த்த‌க்க‌ அள‌வு ந‌ற்சிந்த‌னைக‌ள் நிறைய‌ வேண்டியிருக்கிற‌து.

நிலா மகளின் கருத்திற்கு நன்றி!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More