Latest News

கருவிலே திரு!அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே ஒரு குழந்தை மிகச்சிறந்த ஞானத்துடன் வளர முடியுமா? முடியும் என்பதற்கு சரித்திரச் சான்று பிரகலாதன் கதை. தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாரத ரிஷியின் மூலம் நற்சிந்தனை நிரம்பிய கதைகளைக் கேட்டு நாராயணனே பரம்பொருள் என்று உணர்ந்த குழந்தை அவன்.

அது எப்போதோ நடந்த கதை; இப்போது இந்தக் கலிகாலத்தில் அதேபோல கருவிலிருக்குபோதே ஒரு குழந்தையை நம்மாலும் உருவாக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்து வருபவர்கள் யூதர்கள் (JEWS) ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

சில மாதங்களுக்கு முன் என் நண்பர் ஒருவர் யூதர்களைப் பற்றிய ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எனக்கு அனுப்பி அதை தமிழ் மொழியாக்கம் செய்து தரச் சொன்னார். யூதர்கள் எப்படி மிகவும் சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்று ஒரு மருத்துவர் ( Dr. Stephen Carr Leon) இஸ்ரேல் நாட்டில் வேலை பார்த்தவர் – எழுதிய கட்டுரை அது. மிக ஆச்சரியமான விஷயங்கள் அடங்கிய அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை அதாவது – ஓர் தாய் கருவிலிருக்கும் தன் குழந்தையை எப்படி உருவாக்குகிறாள் என்பதை – உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை அதிமேதாவியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு யூதப்பெண்ணும் ஆசைப் படுகிறாள். முதலிலிருந்தே அதற்காகத் தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். கருவுற்றிருக்கும் யூதப்பெண் எப்போதும் பாடிக்கொண்டும், பியானோ போன்ற இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டும் இருப்பாள்.

இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.

அதுமட்டுமல்ல; அவள் கையில் கணிதப் புத்தகம் எப்போதும் இருக்கும். கடினமான, சிக்கலான கணித புதிர்களை விடுவிப்பதும் அவளது தினசரி பழக்கம். கணிதப் புதிர்களை விடுவிக்கக் கணவனும் உதவுவான்.  கருவிலிருக்கும்போதே கணிதப் பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் குழந்தை மிகச்சிறந்த மேதையாக உருவாகும் என்பது அவர்களது அழுத்தம் திருத்தமான நம்பிக்கை.

உணவு விஷயத்திலும் சில கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கிறாள் யூதப்பெண். பாலில் பாதாம்பருப்பு முதலிய கொட்டை வகைகளையும், பேரீச்சம் பழத்தையும் கலந்து உண்ணுகிறாள். மதிய உணவில் தலை துண்டிக்கப்பட்ட மீன், பாதாம்பருப்பு, பிரெட், பச்சைக் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுகிறாள்.

மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்பும் இவர்கள், மீனின் தலை மூளைக்கு நல்லதில்லை என்றும் நம்புகிறார்கள். இதைத்தவிர மீன் எண்ணெயும் யூதக் கர்ப்பிணி சாப்பிடுகிறாள். மீனின் சதைப் பகுதி, மற்றும் எலும்பு இல்லாத பகுதிகளை மட்டுமே உண்கிறாள். மீன் சாப்பிட்டால் இறைச்சியைத் தவிர்க்கிறாள். மீனையும்  இறைச்சியையும் ஒன்றாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை என்று நம்புகிறார்கள்.

உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள்.

இன்னுமொரு வியப்பூட்டும் விஷயம்:

உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர் ஒரு இஸ்ரேலியர் தான். ஆனால், இஸ்ரேல் நாட்டில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்ட ஒன்று. சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும், DNA வையும் பாதிக்கும். சிகரெட் பிடிப்பவர்களின் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும், அறிவற்றவர்களாகவும் இருப்பார்கள் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.

நம் நாட்டிலும் கர்ப்பிணிப்பெண் சந்தோஷமாக, சிரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். அவளது சந்தோஷத்திற்காகவே பூச்சூட்டல், சீமந்தம் போன்ற விசேஷங்களை செய்கிறோம். சீமந்தத்தின் போது வீணை இசையை கேட்கச் செய்கிறோம். இவையெல்லாமே கொஞ்ச நாட்களுக்குத்தான். தொடர்ந்து செய்வதில்லை.

சாப்பாட்டு விஷயத்தில் ‘நிறைய சாப்பிடு; இரண்டு பேருக்கு நீ சாப்பிட வேண்டும்’ என்று ஏதேதோ சொல்லி அந்தப் பெண்ணை ஏகத்துக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்து விடுகிறோம்.  

கருவிலே திருவுடைய குழந்தையைப் பெற யூதர்களைப் பின்பற்றுவோமா?

Follow by Email

Recent Post