மனச் சாளரத்தை திறப்போம் வாருங்கள்!சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பேச்சாளர்கள் இளம் மாணவர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பேச்சாளர் கூறினார்:

“உங்களுக்குத் தெரியுமா இளம் மாணவர்களே, நம் மூளை திறக்கிறது; மூடுகிறது என்று?.........”

கூடியிருந்தவர்கள் நடுவே மௌனம் நாற்காலி போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருந்தது. யாரும் பேசவில்லை. எனக்கும்கூட இது சற்று புதிதாக இருந்தது. என்ன சொல்ல வருகிறார்?

பேச்சாளர் சிறு புன்னகையுடன் தொடர்ந்தார்: “இத்தனை நேரம் நன்றாக இருந்தாரே, இப்போது என்னவாயிற்று என்று நீங்கள் நினைப்பது புரிகிறது! எப்படி நம் மூளை திறக்கும், மூடும் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள், அல்லவா? இப்போது உங்கள் மூளை திறக்கப்பட்டு இருக்கிறது. நான் சொல்லுவதைக் கேட்கத் தயாராகிவிட்டீர்கள்.”

“இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் இதோ ஒரு உதாரணம்: நீங்கள் பரீட்சை ஹாலில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்; வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. 50% விடைகள் உங்களுக்கு நன்றாகத்  தெரியும். 25% விடைகள் பாதி தெரியும்; பாதி தெரியாது. பாக்கி உள்ள 25% விடைகள் தெரியாது என்று வைத்துக்கொள்ளுவோம். தெரிந்த விடைகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுதி முடிக்கிறீர்கள். அப்பாடா, 60 மதிப்பெண்களுக்கு எழுதிவிட்டோம் என்ற திருப்தியுடன் பாதி தெரிந்த பாதி தெரியாத வினாக்களைப் படிக்கிறீர்கள், என்ன அதிசயம்! அவற்றில் சில உங்களுக்கு தெரிந்ததாகவே இருக்கிறது. அவற்றையும் எழுதி முடிக்கிறீர்கள். இப்போது தெரியாத வினாக்களைப் படிக்கிறீர்கள்; ஆஹா! அவை இப்போது பாதி தெரிந்த பாதி தெரியாத வினாக்களாக மாறிவிடுகின்றன! அவைகளில் எத்தனை தெரிந்ததோ அத்தனை எழுதுகிறீர்கள்.”

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்ததா? எப்போதெல்லாம் உங்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உங்கள் மூளை திறக்கிறது.

மனம் என்பதும் அப்படித்தான். நேர்மறையான எண்ணங்கள் தோன்றும் போது மனச் சாளரம் திறக்கிறது.

எப்போதுமே நேர்மறையான எண்ணங்கள் தோன்றுமா? சில சமயம் வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது நிலைகுலைந்து போகிறோமே; மன வலிமை குறைந்தது போல தோன்றுகிறதே, என்ன செய்யலாம்?

வாழ்க்கையில் நல்லவை, தீயவை இரண்டும் நம்மைப் பாதிக்கின்றன. எவருடைய வாழ்விலும் வெறும் நல்லது மட்டும் நடக்கிறது என்றோ தீயவை மட்டுமே நடக்கின்றன என்றோ கிடையாது. ஆனால் மனித மனம் கசப்பான நிகழ்வுகளை மாத்திரம் வெகு நாட்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுகிறது. ஆறின புண்களை கீறி விட்டுக் கொண்டு, மறந்துபோன வலியை நினைவில் கொண்டுவந்து ‘ஐயோ! என்னைப்போல் இந்த உலகத்தில் கஷ்டப்படுபவர்கள் யார் இருக்கிறார்கள்?’ என்று சுய பச்சாதாபத்தில் உழல்வதில் நம்மில் சிலர் ஆஸ்கர் விருது வாங்கிவிடுவார்கள்.

மனச் சாளரத்தைத் திறக்க இதோ ஒரு வழி:

இயற்கையுடன் தொடர்பு கொள்ளுங்கள்:
இயற்கையை விட்டு நாம் வெகு தூரம் வந்துவிட்டோம்.  
இயற்கை அன்னையைப் போல நம்மை குணப்படுத்த யாராலும் முடியாது. மரங்களும், செடிகளும் நம்முடைய எதிர்மறை எண்ணங்களை உள்வாங்கிக்கொண்டு நமக்கு ‘சீ’ (Chi) என்கிற பிரபஞ்ச ஆற்றலையும், நல்வாழ்த்துக்களையும் கொடுக்கின்றன என்று சீன வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

இந்த ஆற்றலைப் பெற உங்கள் தோட்டத்தில் உள்ள மரம் செடிகொடிகளுக்கு நீரூற்றுங்கள். தோட்டம் இல்லாதவர்கள் இயற்கை சூழலில் நடைபயிற்சி செய்யலாம். புல்வெளியில் உட்கார்ந்து கொள்ளலாம். மரங்களை கட்டிக் கொள்ளுவது பழைய கால சிகிச்சை முறை. இப்போதும் செய்யலாம். புதிதாய் பூத்த பூக்களை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் பூஞ்சாடிகளில் வைக்கலாம். மணி பிளாண்ட் வளர்க்கலாம்.

சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை செடிகொடிகளிடம் அபாரமாக இருக்கிறது. மணி பிளாண்ட் வளர்க்க நிறைய இடம் தேவையில்லை. சின்னச்சின்ன ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் சிறிது நீர் விட்டுவிட்டு இவைகளை வளர்க்கலாம். சரசர என்று வளர்ந்துவிடும். இவற்றில் முளைவிடும் புத்தம்புதிய கருத்துக்களைப் தினமும் கவனியுங்கள். உங்கள் மனச் சாளரங்கள் மெல்ல மெல்ல திறப்பதை உணருவீர்கள்.

மூலிகை மருந்துகள் நம் உள்ளுறுப்புகளை குணப்படுத்துவது போல மரம் செடிகொடிகளின் அண்மை நம் மனதிற்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுக்கும்.

இங்கிலாந்து நாட்டு இளவரசர் திரு சார்லஸ் 1986 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி பேட்டியாளரிடம், நான் என் தோட்டத்தில் செடி கொடிகளுடன் பேசுகிறேன்; நாம் அவைகளுடன் பேசுவது மிக முக்கியம்; அவை நமக்கு பதிலளிக்கின்றனஎன்று சொன்னாராம்.

நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் இளவரசரது கூற்றை ஆமோதிக்கின்றன.

இயற்கையின் வண்ணமான பச்சை நிறம் சுற்றுப்புறத்தைக் குளிர்விப்பதுடன் நம் மனத்தையும் குளிர்விக்கும் ஆற்றல் பெற்றது. கண்களுக்கு விருந்து படைக்கும். மென்மையானது. மன உளைச்சலிலிருந்து காக்கும்; பச்சை வண்ணம் நமக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும்.

இயற்கையின் உதவியுடன் நம் மனச் சாளரத்தை இன்று திறந்தோம். மனச் சாளரத்தின் மற்றைய திறவுகோல்கள் நாளை........10 comments:

சிறப்பான கருத்துக்கள்! நல்ல பகிர்வு!

இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in

மிக அருமையான பதிவு

மிக அருமையான பதிவு

உற்சாகமான எழுத்துக்கள்....

அருமையான பதிவு நண்பனுக்கு நன்றி

மக்கள் சந்தையில் என்னுடைய இரண்டாவது பதிப்பைப் படித்துவிட்டு உற்சாகமான பின்னூட்டம் தந்த திரு சுரேஷ், குமாரி தமிழ் செல்வி, Cpede news, மற்றும் அன்பைத் தேடி...அன்பு அவர்களுக்கு நன்றிகள் பல கோடிகள். என்னுடைய முதல் பதிவு "வெற்றியாளரே, வருக". இதையும் படித்து விட்டு பின்னூட்டம் தர வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
ரஞ்ஜனி

பல ஆண்டுகளுக்குமுன் என் ஆசான் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி மூலம்,
காந்திகிராம கிராமிய பல்கலைகழக வளாக தோட்டத்தில்,தனிமையில் அறிந்து கொண்ட இயற்கையோடு தொடர்பு வழியை ஞாபகப்படுத்திவிட்டீர்களே..!? தோழி.

நன்றி தோழரே! டாக்டர் எம்.எஸ். உதய மூர்த்தியின் பல கட்டுரைகள் என்னை புடம் போட உதவியிருக்கின்றன. அவரது மாணாக்கனான உங்களுக்கு என் கட்டுரை பிடித்திருப்பது மிகப் பெரிய விஷயம்.

நன்றி சீனி அவர்களே!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More