அச்சடித்த வெள்ளைத்தாள்களை மறுபடி பயன்படுத்தலாம்!

அச்சடித்த வெள்ளைத்தாள்களிலிருந்து மசியை அப்புறப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஒரு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மசியை அகற்றிவிட்டு, அந்த தாளை மறுபடியும் அச்சு இயந்திரத்திலும் நகல் இயந்திரங்களிலும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகக் குழுவினால் உருவாக்கப்பட்ட இந்த முறை தாள்களின் மேல் அச்சடிக்கப் பட்ட வார்த்தைகளையும், படங்களையும் அழிக்க  ஒளிக்கதிரை குறுகிய துடிப்புகளாக மாற்றி பயன்படுத்துகிறது.
ஒளிக்கதிர் தாள்களை பழுதாக்காமல் மசியை ஆவியாக்கி அகற்றி விடுகிறது. இதன் விளைவாக எதிர்காலத்தில் அச்சடிக்கும் இயந்திரங்கள் ‘அன்ப்ரின்ட்’ (unprint) என்ற ஒரு செயல்பாட்டுடன் உருவாகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதனால் ஒருமுறை அச்சான வெள்ளைத்தாள்களை மறுபடி பயன்படுத்தலாம்.

“இதனால் காகிதத்திற்காக மரங்களை வெட்டுவதும் கணிசமாகக் குறைவதுடன், காகித மறுசுழற்சிக்கு குறைந்தவிலையிலான ஒரு மாற்றாகவும் அமையும்” என்று இந்த ஆராய்ச்சியின் தலைமை விஞ்ஞானி டாக்டர் திரு ஜூலியன் ஆல்வுட் கூறுகிறார். இந்த செயல்பாடு பெரும்பாலான மசிகளை அழிக்கிறது. அதனால் அலுவலகங்களிலும் காகிதத்தை மறுஉபயோகம் செய்ய இயலும். பல வர்த்தக நிறுவனங்கள் இந்த அன்ப்ரின்ட் கருவியை உருவாக்க ஆர்வத்துடன் தம்மை அணுகுவதாக திரு ஜூலியன் கூறுகிறார்.

ஆராய்ச்சியாளர்கள் தங்களது இந்த ஆய்வு பற்றி ப்ரோசீடிங்க்ஸ் ஆப் தி ராயல் சொசைட்டி A என்ற இதழில் விவரித்துள்ளார்கள். இப்படி எழுத்துக்களையும், படங்களையும் அழிப்பதற்கு ஒரு நொடியில் 4/1000000000 நொடிகளே ஆகின்றன என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அல்ட்ரா வயலட், மற்றும் இன்ப்ரரெட் ஒளிக் கதிர்கள் இதற்கு பயன்பட்டாலும், பச்சை ஒளிக் கதிர் மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தக் கதிர்கள் காகிதத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படாமலும் நிறச் சிதைவு ஏற்படாமலும் மசியினை அகற்றிவிடுகிறது. ஆவியாகும் மசி வாயுவாக வெளியேறும்போது அதனை வடிகட்டிகள் மூலம் பிடிக்கலாம்.

இதற்கான மாதிரியை உருவாக்க 19000 பவுண்ட்ஸ் ஆகலாம் என்றாலும் தொழில் நுட்பம் வளர்ந்து, வர்த்தகமயம் ஆகும்போது விலையும் குறையும். குறைந்த விலை இயந்திரங்களுக்கு அலுவலகங்களில் மதிப்பு கூடுவதுடன், காகிதம் வாங்கும் செலவும் குறையும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதுடன், காகிதத்தை மறுசுழற்சி செய்யும்போது வெளிப்படும் கரியமில வாயு உமிழ்வும் 79% வரை குறையும் என்பதும் கூடுதல் நன்மைகள். 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More