காலம் கண் போன்றதா? இல்லைவே இல்லை

காலம் கண் போன்றது என்பது சரியா? தற்போதைய சூழ்நிலையில் அது தவறுதான். காலம் கண்ணை விட உயர்ந்தது. கண் போனால்கூட நவீன அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெற்று விடலாம். ஆனால், காலம் போய்விட்டால் அதை திரும்பப் பெறவே முடியாது.இன்று வெள்ளிக்கிழமை என்று வைத்துக்கொள்வோம். இந்த வெள்ளிக்கிழமை இதே நாள்,இதே நேரம் இனிமேல் வருமா? அடுத்த வாரம் வேண்டுமானல் மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை வரும். ஆனால் இன்றைய வெள்ளிக்கிழமை இனிமேல் வருமா? இல்லவே இல்லை.. எனவே காலம் கண்ணைவிட உயர்ந்தது.

 

நம்முடைய முன்னோரிகள் ஒரு பழமொழி கூறுவார்கள். நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று என்பது கையில் இருக்கும் வீணை. உடைந்த பானை எதற்குமே உதவாது. அதுபோல் நேற்று முடிந்ததைப் பற்றி நினைப்பதால் எவ்வித பயனும் இல்லை. நாளை என்பது மதில் மேல் பூனை. பூனை எந்த பக்கம் போகும் என்பது யாருக்குமே தெரியாது. அதுபோல நாளை என்ன நடக்கும் என்பது யாராலும் அறிய முடியாத ஒன்று. இன்னும் சொல்லப்போனால் நாளை நாம் உயிரோடு இருப்போம் என்றுகூட உறுதியாக சொல்ல முடியாது. எனவே நாளை நடக்கவிருப்பதை எண்ணி பயனில்லை. இன்று என்பது கையில் வீணை. இருக்கின்ற வீணையை வைத்து இசையை மீட்டி நீங்களும் சந்தோஷமடைந்து, மற்றவர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்துங்கள்.

 

வெற்றி பெற்ற அனைவரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். காலத்தை அவர்கள் ஒரு வினாடி கூட வீணாக்காமல் கடுமையாக உழைத்ததை நாம் அறியலாம். ஒரு வருடத்தின் மதிப்பு வெற்றி அடைந்த மாணவனுக்கு தெரியும், ஒரு மாதத்தின் மதிப்பு, மாத சம்பளம் பெறும் ஊழியனுக்கு தெரியும், ஒரு வாரத்தின் மதிப்பு, பத்திரிகை நடத்தும் ஆசிரியர்களுக்கு தெரியும், ஒரு நாளின் மதிப்பு, தினக்கூலி செய்பவருக்கு தெரியும், ஒரு மணி நேரத்தின் மதிப்பு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு தெரியும், ஒரு நிமிடத்தின் மதிப்பு, பேருந்தை தவறவிட்ட பயணிக்கு தெரியும், ஒரு நொடியின் மதிப்பு, விபத்திலிருந்து மயிரிழையில் தப்பித்தவருக்கு தெரியும், ஒரு மைக்ரோ செகண்டின் மதிப்பு தங்கப்பதக்கம் பெற்ற விளையாட்டு வீரனுக்கு தெரியும்.ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெற நேரந்தவறாமை மிகமிக அவசியம். காலத்தை கண்ணைவிடவும், பொன்னைவிடவும் போற்றி நடப்பவருக்கு தோல்வி என்பதே இல்லை என்பதை எல்லோரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

3 comments:

காலத்தே பயிர்செய். நினைவுபடுத்திவிட்டீர்.

காலத்தின் அருமையை அழகாக சொல்லும் கட்டுரை

// காலத்தை கண்ணைவிடவும், பொன்னைவிடவும் போற்றி நடப்பவருக்கு தோல்வி என்பதே இல்லை//
சிறப்பான கருத்து! பாராட்டுக்கள்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More