Latest News

அவமானத்தை சகித்துக் கொள்வது சரிதானா?


நம்முடைய வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு நேரத்தில் அவமானப்படுத்தப்பட்டிருப்போம். படிக்கும் காலத்திலும் சரி, வேலை தேடும் காலத்திலும் சரி, அல்லது வேலையில் இருக்கும் காலத்திலும் சரி. அப்போதெல்லாம் நாம் பெரும்பாலும் என்ன செய்வோம் என நினைத்து பாருங்கள். பதிலுக்கு நாமும் அவரை அவமானப்படுத்துவோம். அல்லது அவரிடம் சண்டையிட்டு மேலும் பிரச்சனையை வளர்ப்போம்.

அவ்வாறு இல்லாமல் அவமானப்படுத்துபவர்களை, அலட்சியப்படுத்திவிட்டு, நாம் நம் வேலையை தொடர்ந்தால், நம்மை அவமானப்படுத்தியவர்தான் அவமானப்படுவார்.  சரி அவமானப்படுத்துபவரை அலட்சியப்படுத்தினாலும், அவர் மேலும் மேலும் அவமானப்படுத்தி நம்மை எரிச்சலுக்குள்ளாக்குவாரே, அவரை அப்படியே விட்டுவிடுவது சரிதானா? என்ற கேள்வியும் எழும். அதற்கு ஒரே வழி, அவர் எந்த நம்மை எந்த விஷயத்திற்காக அவமானப்படுத்தினாரா அந்த விஷயத்தில் நாம் வெற்றி பெற்று காட்டினால், அவமானப்படுத்தியவர் வெட்கி தலை குனிவார் என்பது நிச்சயம். ஆஹா இவரையா நாம் அவமானப்படுத்தினோம் என்று மனதிற்குள் நிச்சயம் வருந்துவார். அந்த வெற்றிக்காக நாம் பாடுபட வேண்டும்.

நம்மை ஒருவர் கிண்டலடித்து,  வெறுப்பேற்றும் போது நாம்,  நாம் சிறிது மனக்கட்டுப்பாட்டுடன் நடந்து பொறுமையாக இருந்தால், வேண்டாத பல சிக்கல்களில் இருந்து விடுபடலாம். அதைவிட்டுவிட்டு, பதிலுக்கு நாமும் அவரை அவமானப்படுத்திவிட்டு, மேலும் மேலும் பகையை வளர்ப்பதால் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை. நம்முடைய மனசாட்சிக்கு எது சரி என்று படுகின்றதோ, அதை சரியாக செய்துவிட்டு யாருடைய அவமானத்தையும்,அலட்சியத்தையும் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

நம்மை கேலி செய்வதால், அவர்களுக்கு மகிழ்ச்சி கிடக்கிறது என்றால், மற்றவர்கள் மகிழ்வதற்கு நாம் ஒரு காரணமாக இருக்கின்றோம் என நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். அன்னை தெரசா ஒரு பெரிய செல்வந்தவரிடம் தனது இல்லத்தில் உள்ள தொழு நோயாளிகளுக்கு உதவி செய்யுமாறு கேட்டபோது, அந்த செல்வந்தர் கையில் எச்சிலை துப்பினாராம். அப்போதும் பொறுமை காத்த அன்னை தெரசா, நீங்கள் எனக்காக தந்ததை, நான் மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன், என் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் ஏதாவது தாருங்கள் என்று கூறியவுடன் அந்த செல்வந்தர்  வெட்கி தலை குனிந்து, பெரும் செல்வத்தையும் அவருக்கு பரிசாக கொடுத்தாராம். எனவே அமைதி காத்தல், பொறுமை காத்தல் என்பது கோழைத்தனம் ஆகாது. 

சரி எல்லா இடங்களிலும் இந்த பொறுமையை கடைபிடிக்க முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியாது. ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தையும் காட்ட வேண்டும் என இயேசு கூறியதற்கும், ஒரு கன்னத்தில் அடித்தால், இரு கன்னங்களிலும் திருப்பியடி என விவேகானந்தர் கூறியதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பொறுமை காக்கும் இடத்தில் பொறுமை காத்து, பொங்கியெழ வேண்டிய நேரத்தில் திருப்பித் தாக்கினால்தான், தற்போதைய காலத்தில் நாம் பாதுகாப்பாக வாழ முடியும். ஆனால் இந்த இரண்டு நிலைகளையும் சரியாக புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாறாக அமைதி காக்க வேண்டிய நேரத்தில் பொங்கி எழுந்தாலோ, பொங்கி எழ வேண்டிய நேரத்தில் அமைதி காத்தாலோ எதிர்விளைவு ஏற்பட்டு, நம் வாழ்க்கை நரகமாகிவிடும். ஜாக்கிரதை.

அமைதியாக இருப்பது பயத்தினால் அல்ல. முட்டாள்களுடன் வாக்குவாதம் செய்வது நமக்கு தான் இழப்பு. அதற்காக மறுகன்னத்தை காட்டும் அளவிற்கு நாம் ஒதுங்கி போக கூடாது என்பதும் தற்போது உண்மை. அவை எல்லாம் சான்றோர்களுக்கு மட்டுமே, சாமானியர்களுக்கு அல்ல.

இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலரின் வாழ்க்கை வரலாற்றை பின்னோக்கி பார்த்தால், அவர்கள் பட்ட அவமானங்களையெல்லாம் அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பதிலேதான் அவர்கள் வெற்றி இருக்கிறது என்பதை அறியலாம். அவர்கள் மிகப்பெரிய அவமானங்களை சந்தித்து, நாம் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியின் காரணமாக அவர்களுக்கு அந்த வெற்றி கிடைத்திருக்கின்றது என்பதை நாம் அறியலாம்.

வாழ்க்கையில நம்மளை ஜெயிக்க வைக்கிறதே நம்ம எதிரிகள் தான். எதிரி என்று ஒருத்தன் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கையே இல்லை.

Follow by Email

Recent Post