பாராட்டலாம் வாருங்கள்!
தொழில் களத்தில் என்னுடைய 3வது பதிவு இது. இரண்டாவது பதிவுக்கு வந்த பாராட்டுக்கள் கொடுத்த புத்துணர்ச்சியுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பாராட்டு என்பது ஒரு அருமருந்து. அவ்வருமருந்து
·         நம் மனத்தடைகளை விலக்கி உற்சாகத்தைக் கொடுக்கும்
·         மேலும்மேலும் நம் ஆர்வத்தைத் தூண்டும்.
·         நல்ல எண்ணங்கள் உருவாக வழி கோலும்.
·         சாதனைகள்  செய்யத் தூண்டும்.
·         நம்மை உயரே உயரே கொண்டு போகும்.

சரி, முதலில் யாரைப் பாராட்டலாம்?

'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையா’ ரான
அன்னவரைத்தான்!

இந்த உலகமனைத்தையும் படைத்து, அளித்து, காத்து வரும் அந்த அற்புதக் கலைஞனைத்தான் முதலில் பாராட்ட வேண்டும். குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு பாலை தாயின் முலையில் வைக்கும் இந்த இறைவனை எத்தனை பாராட்டினாலும் போதாது.

நீர்வளம், நிலவளம் என்று இந்த மனித சமுதாயத்திற்கு வற்றாத வளங்களை வழங்கி வரும் வள்ளலை வாயாரப் பாராட்டத்தான் வேண்டும், இல்லையா?

ஒரு நிமிடம் நம் உடலமைப்பைப் பற்றி நினைத்துப் பாருங்கள்: என்ன ஒரு அற்புதமான படைப்பு இந்த மனித உடல்! இரண்டு கைகள், இரண்டு கால்கள் உழைப்பதற்கு; இரண்டு கண்கள் நல்லவற்றை பார்ப்பதற்கு; இரண்டு காதுகள் நல்லனவற்றை கேட்பதற்கு; குறைவாகப் பேசு என்று ஒரே வாய்!

அப்பாவை உரித்து வைத்துக் குழந்தை பிறந்திருக்கிறது என்கிறோம்; ஆனால் அப்பாவுக்கு வேறு மாதிரி மூக்கு; குழந்தைக்கு வேறு மாதிரி மூக்கு! எத்தனை விதமான மனிதர்களோ அத்தனை விதமான உறுப்புக்கள்!

என்னைப் பொருத்தவரை பிரார்த்தனை என்பது தெய்வத்திடம் ‘எனக்கு  இதைக் கொடு; அதைக் கொடு’ என்று கேட்பது இல்லை; அவன் நமக்கு கொடுத்திருக்கும் வசதிகளுக்கும், அவனது அளப்பரிய கருணைக்கும் தினம் தினம் நன்றி பாராட்டுவதுதான் பிரார்த்தனை. 

பல சமயங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போகலாம். அவன் கொடுக்கும் முடிவு எல்லாவிதமான நன்மைகளையும் கொண்டு வருகிறது.

நமக்கு இன்று தெரியும்; நேற்று தெரியும்; அவனுக்கு நாளையும் தெரியுமல்லவா?

இந்தச் சமயத்தில் ‘இன்று ஒரு தகவல்’ தென்கச்சி திரு. சுவாமிநாதன் சொன்ன ஒரு கதை நினைவிற்கு வருகிறது.

ஒரு ஊரில் ஒரு சமயம் நதியில் வெள்ளப் பேருக்கு ஏற்படுகிறது. மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரைகிறார்கள். ஒருவன் மட்டும் ஒரு மரத்தின் மேல் ஏறிக்கொண்டு உரக்க கடவுளிடம் வேண்டுகிறான்: 

“கடவுளே, உனக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். உன்னிடம் எனக்கு அதீத பக்தி உண்டு. உடனே வந்து என்னைக் காப்பாற்று!”

அந்தச் சமயம் ஒரு படகு அந்தப் பக்கம் வருகிறது. அதிலிருந்தவர்கள் இவனைப் பார்த்து, “எங்கள் படகில் ஏறிக் கொள். வெள்ளம் அதிகமாகிக்கொண்டே வருகிறது...வா....வா....” என்கிறார்கள்.

இவனோ, “இல்லையில்லை, கடவுள் என்னைக் காப்பாற்றுவார். நான் அவருக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறான்.

மறுபடி அவன் உரக்கக் கூவத் தொடங்கினான். “இறைவா, நான் எத்தனையோ தான, தருமங்கள் செய்திருக்கிறேன். உனக்கு எல்லாம் தெரியும். உடனே வா. வந்து என்னைக் காப்பாற்று.....”

இன்னொரு படகு இவனைப் பார்த்ததும் இவனருகில் வந்தது. “கீழே இறங்கிவா, நதியின் அக்கரைக்கு உன்னை அழைத்துப் போகிறோம்....” என்று அதிலிருந்தவர்கள் சொன்னார்கள்.

“முடியாது. என் பக்தியை மெச்சி கடவுளே வருவார் என்னைக் காப்பாற்ற...” என்று மறுத்துவிட்டு தன் அறைகூவலைத் தொடர்ந்தான்.
“கடவுளே! கடவுளே! இப்போதும் நீ வரவில்லையானால் நான் வெள்ளத்தில் மூழ்கி விடுவேன். உனக்கு நான் எத்தனை பூஜைகள் செய்திருக்கிறேன், .எத்தனை அபிஷேகங்கள் செய்திருக்கிறேன், நினைவு படுத்திக் கொள்!  நான்  கூவுவது காதில் விழவில்லையா?......”

மீண்டும் ஒரு படகு நிறைய மனிதர்களுடன் வந்தது. “ஏய்! இதுதான் கடைசி படகு. உன் கத்தலை நிறுத்திவிட்டு படகில் ஏறிக் கொள். உயிர் பிழைக்கலாம்” என்றனர் அதிலிருந்த மக்கள்.

“முடியவே முடியாது. நான் எத்தனை பெரிய பக்திமான்.....என்னைக் காக்க கடவுளே வருவார்......”

கடைசிப் படகும் போய் விட்டது. சிறிது நேரத்தில் நீர் மட்டம் அதிகமாகிவிட இவன் ஏறியிருந்த மரமும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இறந்துபோன அந்த மனிதன் நேராக கடவுளிடம் போனான்.

“உன்னை எத்தனை நம்பினேன் நான் ....... என்ன குறை என்னிடம்? என் ஊரிலுள்ளவர்கள் எல்லோரும் பிழைக்க நான் மட்டும் இறந்துவிட்டேனே...துளிக் கூட கருணை இல்லதாவன் நீ...” என்று சரமாரியாக கடவுளைத் திட்டத் தொடங்கினான்.

கடவுள் சிரித்தார். “நான் 3 படகுகளை அனுப்பினேனே...... அவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டனர். நீ வந்த வாய்ப்புக்களை மறுத்துவிட்டாய்.......”

நம்மில் பலரும் இப்படித்தான். நம் கைக்கு வரும் வாய்ப்புகளை விட்டு விட்டு வேறு எதற்கோ காத்திருப்போம். பிறகு கடவுளை திட்டுவோம்.

குறை ஒன்றுமில்லை என்று சொல்லுங்கள் – உங்கள் குறைகளைக் களைவான்.

நிறைவானவன் நீயே என்று அவனைப் பாராட்டுங்கள்; நீங்கள் நிறைவாக வாழும்படி செய்வான்.

அவனைப் பாராட்டுங்கள் – உங்களை எல்லோரும் பாராட்டும்படி அவன் செய்வான்.

அவன் கொடுத்தவற்றிற்கு, கொடுக்கப்போவதற்கு என்று எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை நன்றியுடன் நினைப்பார்கள்.

கடவுளை இன்று பாராட்டினோம்; நாளை கடவுளின் முக்கியப் படைப்பைப் பாராட்டுவோம், சரியா?

மனச் சாளரத்தின் அடுத்த திறவுகோல் நாளை.......

4 comments:

வாழ்த்துக்கள் தோழி.அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் உங்கள்பணி தொடரட்டும்...

நன்றி தோழரே!

இதமளிக்கும் பதிவு... தொடரட்டும் உங்கள் சுவை...

என்னைப் பொருத்தவரை பிரார்த்தனை என்பது தெய்வத்திடம் ‘எனக்கு இதைக் கொடு; அதைக் கொடு’ என்று கேட்பது இல்லை; அவன் நமக்கு கொடுத்திருக்கும் வசதிகளுக்கும், அவனது அளப்பரிய கருணைக்கும் தினம் தினம் நன்றி பாராட்டுவதுதான் பிரார்த்தனை.

எத்தனை பேர் உணர்வார்களோ, ஆனால் உணர்ந்தால் உலகம் நன்றாகவே இருக்கும். நல்ல பதிவு அம்மா...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More