உங்கள் பிள்ளையின் வாழ்க்கையை நீங்கள் வாழாதீர்கள்

அன்பர்களுக்கு வணக்கம், இன்று முதல் மக்கள் சந்தையின் மூலமாக தினமும் உங்களை சந்திக்க போவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திடும் இந்த முயற்சியில் ராமாயண அணிலாய் என் பங்கும் இருக்கும் என நம்புகிறேன். இறைவனை மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டு துவங்குகிறேன்.

நம் தேசத்து இளைஞர்களுக்கு(என்னையும் சேர்த்துதான்) ஒரு பெரிய கெட்ட பழக்கம் இருக்கிறது. அது கிட்டத்தட்ட அடிமைத்தனம் போன்றதொரு பழக்கம், அதுதான் தனித்தன்மையற்று இருப்பது. எதை பற்றி சொல்கிறேன் என்று புரியவில்லையா? கொஞ்சம் கொஞ்சமாய் புரியும், தொடருங்கள்.


நம் நாட்டில் ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து படிப்பை முடித்து வேலைக்கு போகும் வரை ஏன் கடைசி வரையுமே எப்படி வளர்ந்து வாழ்கிறது தெரியுமா? அடுத்தவர்களின் ஆசைப்படி தான், நான் அடுத்தவர்கள் என்று அழைப்பது பெற்றவர்களை அல்ல, மற்றவர்களை. 

உதாரணத்திற்கு ஒரு இடைத்தர வர்க்கத்தில் ஒரு பையனை முதலில் பள்ளியில் சேர்த்துவதாக இருந்தால் என்ன யோசிப்பார்கள்? பக்கத்து வீட்டு குழந்தை எங்கு படிக்கிறது என்றுதான், அதில் தவறில்லை, ஆரம்பத்தில் ஒரு துணைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இருக்கலாம்.

போகப்போக அந்த பையனின் மதிப்பெண்கள் பக்கத்து வீட்டு பையனுடன் ஒப்பிட்டுதான் நல்ல மதிப்பெண்ணா என்ற முடிவுக்கே வரும். அதுவும் தவறில்லை, சிறு வயது, ஒரே படிப்பு என விட்டு விடலாம்.

 

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் வரும் பாருங்கள் ஒரு பிரச்சனை, எத்தனை வீட்டில் பிள்ளைகளின் விருப்பத்திற்கு கல்லூரியில் சேர்க்கிறார்கள்? குடும்ப ஏழ்மையின் காரணமாக முடியாமல் போகிறவர்களை நான் கேட்கவில்லை. படிக்கக் கூடிய பிள்ளையை கேட்காமல் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று ஏதோ ஒரு கல்லூரியில் சேர்க்கிறவர்களைத்தான் கேட்கிறேன்.

அப்படி எல்லாம் இந்த காலத்துல யாராவது இருப்பாங்களா? என்று நீங்கள் கேட்கலாம், நீங்கள் சந்தித்திருக்க மாட்டிர்கள், உங்கள் ஊர் கொஞ்சம் முன்னேறியதாக இருக்கும், நான் இருக்கும் பேரூராட்சியில் வாரம் ஒருத்தரையாவது இது போல் பார்க்கிறேன். அவர்கள் ஏமாற்ற படுகிறார்கள். 
அவர்கள் சொல்லும் புளித்து போன வசனம் "சின்ன பையனுக்கு என்ன தெரியும்?"


நான் ஒரு தொழில் நுட்ப கல்லூரியில் பணியாற்றுகிறேன், அருகில் இருக்கிற காரணத்திற்காக எங்கள் கல்லூரியில் சேர்க்க வரும் பெற்றோர்கள்  பிள்ளைகளை கேட்காமல் மற்றவர்கள் பேச்சை கேட்டு "எவ்வளவு செலவானாலும் பராவாயில்லங்க, என் பையனை மெக்கானிக்கல் குருப்ல சேர்த்து விடுங்க" என்பார்கள்.

அவர்கள் படிக்காதவர்கள், தெரியாமல் கேட்கிறார்கள், பிள்ளைகளும் என்னவென்று தெரியாமல் சேர்ந்து கொண்டு சிலர் படிக்க முடியாமல் திணறுகிறார்கள், காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

சிலருக்கு கணிதம் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும், சிலருக்கு படம் வரைய பிடிக்கும், டிப்ளமோ என்றால் மெக்கானிக் என்று விசாரிக்காமல் சேரும் மாணவர்களில் பலர் அதில் இருக்கும் கணித பாடங்களில் தேர்ச்சி பெற முடியாமல் தவிக்கிறார்கள். உங்களுக்கே தெரியும், தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் கடைசியில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று?

இதற்கு தீர்வு கல்லூரிகளின் கையிலும் பெற்றாவர்களின் கையிலும் தான் இருக்கிறது. முதலிம் பெற்றவர்கள் தாங்கள் படிக்காதவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு படிக்க போகும் பிள்ளையை அழைத்து கொண்டு நேரே கல்லூரிக்கு சென்று என்னென்னெ பிரிவுகள் இருக்கிறது என்று விசாரித்து விட்டு அதில் வரும் பாடங்கள் எவ்வாறு இருக்கும் என பிள்ளையை விட்டு கேட்க சொல்லுங்கள், எந்த பிரிவில் சேர விரும்புகிறான் என்று முடிவை அவன் கையில் விடுங்கள்.வேலை வாய்ப்பு எல்லா பிரிவுக்கும் சமம்தான், மெக்கானிக் என்பதற்காக தேர்ச்சி பெறாத மாணவனுக்கு எந்த நிறுவனமும் வேலை தரப் போவதில்லை.பெரும்பாலான கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கு தயாராகிவிட்டன.


பெற்றோர்களே நீங்கள் தயாரா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யட்டும். நீங்கள் அவர்களுக்கு காட்டுங்கள், ஊட்ட வேண்டாம். அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பப்படி இருக்கட்டும்.

எவ்வாறு ஆர்வமுடன் படிப்பது என்பதை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

அடுத்த பதிவினை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

4 comments:

என்னை போல் ஒருவர்..!

நல்லதொரு பதிவு, ஒப்பிடுதல் வேண்டாம் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைக்கு என்னை போல் ஒருவன் என்று ஒப்பிட்டு பார்க்கும் வாசகர்...இதுவே தங்கள் பதிவிற்கு கிடைத்த வெற்றி தான் எல்லோரும் பிறரை ஒத்த தன்மையுடையவர்களாய் இருந்துவிட்டால் நாம் நாமாக இருப்பது எப்போது.

பதிவினை படித்தவர்களுக்கும், கருத்துரைத்தவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி, நமக்குள் போட்டி இருப்பின் எழுத இன்னும் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும் என தோன்றுகிறது, ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் ஓவ்வொரு துறையில் ஆர்வம், பார்க்கலாம், மீண்டும் நன்றி

பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யட்டும். நீங்கள் அவர்களுக்கு காட்டுங்கள், ஊட்ட வேண்டாம். அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பப்படி இருக்கட்டும்.//

ந‌ல்ல‌ அறிவுறுத்த‌ல்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More