முக அழகுக்கு முக்கியத்துவம் தரலாமா?

தற்போது உள்ள செயற்கைகள் நிறைந்த உலகத்தில் முக அழகுக்கே முக்கியத்துவம் கொடுத்து பழகிவிட்டோம். அக அழகு ஒன்று இருப்பதே பலருக்கு தெரியாமல் போய்விட்டது. அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பார்கள். ஆனால் இப்போது முகத்தின் அழகை வைத்துதான், ஒருவரின் நிலையை கணிக்கின்றனர். இதுபோன்ற கணிப்புகள் பல சமயங்களில் ஆபத்தாக முடியும்.

முக அழகு இருந்தால்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என தற்கால ஆண்களும், பெண்களும் நினைக்கின்றனர். அழகு இருந்தால்தான், வேலைவாய்ப்பு,சினிமா வாய்ப்பு போன்றவை கிடைக்கும் என்பது பலரது நினைப்பு. ஆனால் முக அழகு இல்லாத ஆண்களும், பெண்களும் பலர் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதை எண்ணிப்பார்க்க வேண்டும்.  விளையாட்டு துறையில் பல தங்க மெடல்கள் வாங்கிய பி.டி.உஷாவை நாடு முழுவதும் போற்றுவது அவரின் அழகிற்காக அல்ல. மகாத்மா காந்தி,நெல்சன் மண்டேலா, ஆபிரஹாம் லிங்கன் போன்றவர்கள் உலகம் முழுவதும் பாராட்டப்படுவது அவர்களின் அழகிற்காக அல்ல..

சினிமாவில் அழகாக இருக்கும் கதாநாயகனுக்கு கிடைக்கும் கைத்தட்டலைவிட கோமாளி போல் இருக்கும் நகைச்சுவை நடிகருக்கு கிடைக்கும் கைதட்டல் அதிகம். எனவே அழகை வைத்து ஒருவரின் மதிப்பை எடைபோட வேண்டாம். அழகு என்பது முகத்தில் இல்லை, அவர்களின் செயல்களில் உள்ளது. 

இன்றைக்கு முக அழகை கூட்டுவதற்காக வீதிக்கு ஒரு அழகு நிலையங்கள் தோன்றியுள்ளன. அழகை மெருகூட்ட நினைப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் அழகுநிலையங்களுக்கு போய் தங்கள் அழகை மேம்படுத்த நினைத்தாலும், இயற்கையை வெல்ல முடியவே முடியாது. இயற்கையான அழகை சிறிது நம் கைப்பக்குவத்தில் மெருகேற்றினாலே போதுமானது. அழகு நிலையங்களுக்கு சென்று, பணத்தையும், நேரத்தையும் வீணாக செலவழிக்க வேண்டாம்.

ஏழே நாளில் சிவப்பழகு என்ற விளம்பரத்தை பார்த்து கண்ட கண்ட கிரீம்களை வாங்கி முகத்தில் பூசிக்கொண்டு, ஏழு நாள் கழித்து கண்ணாடியைப் பார்த்து, இன்னும் நாம் சிவப்பாக மாறவில்லையே என நினைப்பவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். ஏழு நாள் அல்ல ஏழு வருடங்கள் ஆனாலும் சிவப்பாக முடியாது, இது அந்த பொருளை தயாரிப்பவருக்கும் தெரியும், விற்பவர்களுக்கும் தெரியும். பின் ஏன் இந்த தேவையில்லாத வேலை. சிவப்பாக மாறி என்ன சாதிக்க போகிறோம். ஏன் கருமையான உடலை வைத்து சாதனை செய்ய முடியாதா?நடிகைகள் தங்கள் முகம் திரையில் பளிச் என்று தோன்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே மேக்கப் சாதனங்களை உபயோகப்படுத்துகின்றனர். ஷூட்டிங் முடிந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை மேக்கப்பை கலைப்பதுதான். சிலருக்கு மேக்கப் போடாவிட்டாலோ, அல்லது ஹை ஹீல்ஸ் போன்ற செருப்புகள் போட்டு தங்களை உயரமாக காண்பிக்காவிட்டாலோ தாழ்வு மனப்பான்மையால் துவண்டு விடுகின்றனர். இது தேவையில்லாத கவலை. கடவுள் கொடுத்த சுத்தமான உடம்பை தினமும் சுத்தப்படுத்தி, தூய ஆடைகள் உடுத்தினாலே போதும், அதை வெஇட வேறு ஒன்றும் தேவையில்லை.

அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணில் உள்ளது. ஆண்டவன் படைப்பில் அனைத்தும் அழகே.. அழகுக்கு அழகு சேர்க்கிறேன் என செயற்கையை கலக்கும் ஒப்பனையை விட இயற்கையான அழகே உயர்ந்தது.

அழகு இருந்தால்தான் அன்பான கணவன் கிடைப்பான் என்றால் சிறிது காலங்களுக்கு பின் குழந்தை பிறந்து அழகு குறைந்துவிட்டால், அந்த கணவன் தனது மனைவியை விட்டுவிடுவானா என்ன ? அப்படி விட்டுவிட்டு போனால், கணவனின் அழகில்தான் குறையிருக்கின்றதே தவிர, மனைவியின் மேல் எந்த குறையும் எல்லை. பொதுவாக ஆண்கள், அதீத மேக்கப் உள்ள பெண்ணை பெரிதும் விரும்புவதில்லை என்பதே எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை,.

எனவே இனிவரும் காலங்களில் முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நம் சாதனையையே அழகாக மாற்றி வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிப்போம்.

4 comments:

மிகச் சரியான கருத்து. புற அழகை அதிகரிக்க செலவு செய்யும் பணத்தையும், நேரத்தையும் அக அழகை அதிகரிக்க செலவிட்டால் நன்றாக இருக்கும்.
பயனுள்ள அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.

புற அழகினால் ஆபத்தும் அதிகம்.

பயனுள்ள தகவல்...

ஒருவர் மனத்தை அழகாக வைத்தாலே, வாழ்வில் நிச்சயம் சாதிக்க முடியும்.

நன்றி நண்பரே.....

மனைவியை பிரிவதற்கு கணவன் அழகுதான் காரணமா ? என்னைபோல் உள்ளவர்கள்...

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More