இலவசங்கள் வேண்டும். அரசுக்கு ஓர் வேண்டுகோள்.

ஒரு அரசு , தன் மக்களுக்கு எதை இலவசமாக கொடுக்க வேண்டும். அரிசி,பருப்பு, டிவி, ஆடு, மாடு, ஃபேன், மிக்ஸி இவற்றையா? இவை எல்லாம் குடிமக்களாகிய நம்மால் வாங்க முடியாதா? இவற்றை இலவசமாக கொடுப்பதின் மூலம் அரசு சாதித்தது என்ன?

இப்போதுள்ள மனிதன், அரசு கொடுக்கும் இலவச வீடுகளில் குடியிருந்து கொண்டு ( அல்லது மானியத்தில் கட்டிய வீடு) அரசு கொடுக்கும் இலவச அரிசியை பொங்கி சாப்பிட்டுக்கொண்டு, அரசு கொடுக்கும் டிவியில் அறிவை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு, வாழ்நாளை வெட்டியாக கழித்துக் கொண்டிருக்கின்றான். இதையா மக்களின் நலன் வேண்டும் ஒரு அரசு செய்வது?

ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது பல இருந்தாலும், அடிப்படை தேவை கல்வி. கல்வியை இலவசமாக ஒரு அரசு கொடுக்க வேண்டும். முதல் வகுப்பு முதல், கல்லூரி படிப்பு வரை ஒரு மாணவனுக்கு இலவச கல்வி கொடுத்தால்தான், அந்த மாணவன் படித்து முடித்துவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பான்., எல்.கே.ஜியில் சேருவதில் இருந்து, டாக்டர் படிப்பு முடிக்கும் வரை லட்சக்கணக்கில் செலவு செய்த ஒரு மாணவனுக்கு, எப்படி இலவச சேவை நினைப்பு வரும்?

இப்போது இந்தியாவிலேயே மிகவும் லாபம் கொழிக்கும் தொழில் கல்வியாகத்தான் இருக்கும். முன்பெல்லாம் மாணவர்களின் நலன் கருதியே பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் இப்போது, மாநிலத்தை ஆள்பவர்களின் பணலாபம் கருதியே கல்வி விற்கப்படுகின்றது.  ஒரு சாதாரண கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிக்க வேண்டும் என்றால் கூட ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. கல்வியை வியாபார பொருளாக்கி, இதையும் ஒரு தொழிலாக மாற்றிய பெருமை நம்முடைய அரசுக்கு உண்டு. 


அடுத்தது மருத்துவம். லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கும் ஒரு டாக்டர் , தான் செலவு செய்து படித்த தொகையை ஒரு சில மாதங்களிலேயே எடுத்துவிடும் அளவிற்கு மருத்துவம் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது மாறிவிட்டது. இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதென்றால் ரமணா திரைப்படத்தில் வருவது போல மருத்துவம் என்பது ஒரு முகமூடி அணியாத கொள்ளை என்றும் சொல்லும் அளவிற்கு நிலைமை போய்விட்டது.  

கல்வியும், மருத்துவமும் எந்த ஒரு நாட்டில் இலவசமாக கிடைக்கின்றதோ, அந்த நாட்டில் மற்ற எந்த பொருள், எவ்வளவு விலை ஏறினாலும் கவலையில்லை. அவற்றையெல்லாம் விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு மக்களிடம் பொருளாதாரம் உயர்ந்துவிடும். பொதுமக்களின் அறிவை வளர்க்கும் கல்வியையும், உடலை பேணி காக்கும் மருத்துவத்தையும் இலவசமாக வழங்கிடுங்கள். நாடு தன்னால் வல்லரசு ஆகிவிடும்.

3 comments:

இதுதானே வேனும்.நல்லா ''நச்''ன்னு இருக்கு !

சரியான சவுக்கு, இதுதான் இலவசமா குடுக்கனும்

இலவசம், இலைவசத்திடம் அல்லவா உள்ளது இப்பொழுது,
தோலுரித்து விட்டீர்கள், தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள், நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More