எந்த விஷயங்களை பற்றி எழுதுவது?


இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் ‘வலைபதிவு செய்யுங்களேன்’ என்று சொல்லி வருகிறேன். உடனே ஒரு கேள்வி வரும்: என்ன எழுதுவது என்று.

எந்த விஷயங்களை பற்றி எழுதுவது என்று இன்று முதல் பார்க்கலாம்.

நம் எல்லோரிடமும் ஓர் திறமை ஒளிந்திருக்கும்; பள்ளிக்கூடத்தில் கற்றிருப்போம்; அல்லது சின்ன வயதில் சிலவற்றைச் செய்ய ஆசைப்பட்டு இருப்போம்; பாதி கற்றிருப்போம்; இப்போது நிறைய நேரம் இருக்கிறது யாராவது மீதியை இப்போது கற்றுக் கொடுத்தல் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும்.

எல்லாவற்றிற்கும் இந்த வலைப்பதிவில் வழி இருக்கிறது!

உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லித் தரலாம் உங்கள் வலைப்பதிவு மூலம். நீங்கள் புதிதாகக் கற்றுக் கொள்ளலாம் மற்றவர்களது பதிவுகள் மூலம்.

வலைபதிவு என்பது ஒருவழிப் பயணம் அல்ல; பலவழிப் பயணம். பலர் உங்களுடன் கூட வருவார்கள்; வழி காட்டுவார்கள். அதேபோல பலருக்கு நீங்கள் துணை போகலாம்; வழி காட்டலாம்.

‘எனக்கு நல்லா சாப்பிடத்தான் தெரியும்’ என்கிறீர்களா? அதைப் பற்றியே எழுதலாம். நம் உடலுக்கு எது நல்லது? எதை சாப்பிட்டால் உற்சாகம் வரும்? எதை சாப்பிட்டால் நன்றாக உறக்கம் வரும்?

சில உணவுகள் நமது மன நிலையை மாற்றும்;  சில பாதிக்கும்;  சில நமது நாவுக்கு இனிக்கும் ஆனால் உடலுக்கு நல்லதல்ல; சில உஷ்ணத்தைக் கொடுக்கும்; சில குளிர்ச்சியைக் கொடுக்கும். இவற்றைப்பற்றி எழுதலாம்.

‘எனக்கு இதெல்லாம் தெரியாதே? என்கிறீர்களா? நமக்காகவே இருக்கிறது கூகிள் தேடி இயந்திரம்! (Google Search Engine) தட்டுங்கள் திறக்கப்படும் என்பதுபோல தேடுங்கள் விவரங்கள் கொடுக்கப்படும் என்று புதுமொழி பேசும் இந்தத் தேடி இயந்திரத்தின் மூலம் நீங்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம். அப்படியே காப்பியடிக்காமல் கிடைத்த விஷயங்களை உங்கள் நடையில் எழுதுங்கள்.

எழுதும்போது கவனிக்க வேண்டியவை:

  • முடிந்த வரை தூய தமிழில் எழுத முயலுங்கள். சில சமயங்களில் தமிழ் வார்த்தை ரொம்ப தெரிந்ததாக இல்லாமல் இருக்கலாம். அப்போது அதன் ஆங்கில வார்த்தையை அடைப்புக்குறிக்குள் எழுதுங்கள்.


  • எழுத்து பிழைகளைத் தவிர்க்கவும். ‘ல’, ‘ள’ , ளை, லை, ழை ஆகியவற்றை பொறுமையுடன் தட்டச்சு செய்யவும்.


  • எழுத்துப் பிழை என்பது நல்ல சாப்பாட்டில் வரும் கல் போல (கள் அல்ல!) சாப்பாட்டைப் பற்றித் தானே எழுதப் போகிறீர்கள், அதனால் சாப்பாட்டு உதாரணமே கொடுத்து விட்டேன்.


  • முதல் பாராவிலிருந்து முடிவு பாராவரை ஒரு அழகான தொடர்பு இருக்கட்டும். ஒவ்வொரு பாராவும் அடுத்தடுத்து வரும் பாராக்களுடன் ‘நட்பு’ பாராட்ட வேண்டும். நவக்கிரகங்கள் போல ஒவ்வொரு பாரா ஒவ்வொரு திசையைப் பார்க்கக்கூடாது.


  • சின்னச்சின்ன பாராவாக பிரித்து எழுதுங்கள். குறிப்புகள் கொடுத்தால் எண்கள் கொடுத்து வரிசைப் படுத்துங்கள்.


  • முக்கியமான விஷயங்களை ‘ஹை-லைட் செய்யுங்கள். பல வண்ணங்களில் எழுதாதீர்கள். கண்களை உறுத்தும்.


நல்லா சாப்பிடுபவர்கள் இன்னொரு வகையிலும் வலைபதிவு செய்யலாம். திருமண வீட்டிலோ, நண்பர் வீட்டிலோ சாப்பிடும்போது குறிப்பிட்ட ஒரு உணவு வகை மிக ருசியாக இருக்கிறது என்றால், உடனே சமையல்கட்டுப் போய் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டு அதையே பதிவு செய்து விடலாம்.

விதவிதமான சமையல் முறைகள் பற்றி எழுதலாம். நம் தமிழ் நாட்டிலேயே எத்தனை விதமான உணவு தயாரிக்கும் முறைகள் இருக்கின்றன, அவற்றை ஒரு தொகுப்பாக வழங்கலாம்.

இந்தியாவில் வடக்குப்பகுதியில் வேறு வகையான உணவுப் பழக்கம் இருக்கிறது. அதைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கலாம்.

ஒவ்வொரு வகை உணவு தயாரிப்பிலும் குறிப்பிட்ட பொருட்கள் சேர்ப்பார்கள். அந்தப் பொருட்களைப் பற்றி எழுதலாம். ‘அஞ்சறைப் பெட்டியில் இருக்குது ஆரோக்கியம்’ என்பார்கள். அதில் இருக்கும் பொருட்களைப் பற்றி நிறைய விஷயங்களை பதிவு செய்யலாம்.

சாப்பாடு என்று சொல்லும்போது நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் இவை பற்றியும் எழுதலாம்.

பத்திய சாப்பாடு பற்றி எழுதலாம்: பிரசவித்த பெண்ணுக்கு; மஞ்சள் காமாலைக்கு; சர்க்கரை நோயாளிகளுக்கு; உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு; உடல் இளைக்க விரும்புவர்களுக்கு, உடல் பெருக்க விரும்புபவர்களுக்கு (அந்த வகையும் உண்டு!)

கிராமத்து சாப்பாடு வகைகள்:

பண்டிகை சாப்பாடு வகைகள்; நமக்குத் தான் எத்தனையெத்தனை பண்டிகைகள்!

இன்னொன்று மறந்து விட்டேனே.. சாப்பாட்டிலேயே சைவம், அசைவம் என்றும் இருக்கிறதே!

ஆதிமனிதனின் சமைக்காத உணவிலிருந்து ஆரம்பித்து இந்தக் காலம் வரை உணவு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது.....

இன்னும் யோசித்தால் பல விஷயங்கள் தோன்றும்.

பாருங்கள் இந்த சாப்பாடு என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு எத்தனை எத்தனையோ எழுதலாம்!

சாப்பாட்டைப் பற்றி எழுத ஆரம்பித்து பசிக்க ஆரம்பித்து விட்டது, நாளை பார்க்கலாம்....இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயத்துடன்...!

7 comments:

எப்படி எழுதலாம் என்றே ஒரு பதிவு, பின்னிடீங்க, நன்றி

ஒரு சாப்பாடு என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு, அருமையாக பல தகவல்களை சொல்லி விட்டீர்கள்... நாங்கள் தங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அம்மா...

/// ஒவ்வொரு பாராவும் அடுத்தடுத்து வரும் பாராக்களுடன் ‘நட்பு’ பாராட்ட வேண்டும். நவக்கிரகங்கள் போல ஒவ்வொரு பாரா ஒவ்வொரு திசையைப் பார்க்கக்கூடாது. /// --- மிகவும் ரசித்தேன்...

நன்றி செழியன்!உங்களைபோல இளைய தலைமுறைகளின் எழுத்துக்களுக்கு நடுவில் என் எழுத்து தனித்துத் தெரிய வேண்டுமே!

நன்றி தனபாலன்! எப்படி உடனே உடனே பின்னூட்டம் போடுவது என்று ஒரு பதிவு எழுதுங்கள் ப்ளீஸ்!

நன்றாக ரஸித்துப் படித்து தெறிந்து கொள்ள நிறைய விஷயயங்கள். நிறைய யோசனைகள். ரொம்--பவே நன்றாக உள்ளது.

வாருங்கள் காமாட்சி அம்மா! உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
உங்களை இனிமேல் அடிக்கடி இங்கும் சந்திக்கிறேன்.

//எழுத்துப் பிழை என்பது நல்ல சாப்பாட்டில் வரும் கல் போல (கள் அல்ல!) சாப்பாட்டைப் பற்றித் தானே எழுதப் போகிறீர்கள், அதனால் சாப்பாட்டு உதாரணமே கொடுத்து விட்டேன்.//

அருமையான உதாரணம். மகிழ்ச்சி.

எல்லாமே பயனுள்ள மற்றும் தன்னம்பிக்கையூட்டும் அறிவுரைகளாகவே த்ந்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள். ;)))))

vgk

இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பிடித்திருப்பது பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. பல பதிவுகள் விதம் விதமாக எழுதியிருக்கும் உங்களிடமிருந்து வரும் பாராட்டுக்கள் ரொம்பவும் ஸ்பெஷல் வை.கோ. ஸார்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More