நாட்டைக் கெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

மாதச்சம்பளம் ரூ.50,000, தினசரி படி ரூ,2000, அலுவலகப்படி ரூ,45,000, தொகுதிப்படி ரூ.45,000. இது போக இலவச பங்களா, இலவச ரயில், மற்றும் விமான போக்குவரத்து. இது போக ஆண்டுக்கு 50,000 யூனிட் இலவச மின்சாரம், 40,000 லிட்டர் மினரல் வாட்டர். இவையெல்லாம் போதாது என்று பென்ஷன் வேறு. இவையெல்லாம் யாருக்கு, நமது நாட்டு எம்.பிக்களுக்குதான்.

இவ்வளவு சம்பளமும், சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, நமது எம்.பிக்கள் செய்யும் வேலைகள் என்ன? நேற்று காலை செய்தித்தாள்களில் ஒரு செய்தி பார்த்தேன். பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது. கிட்டத்தட்ட 30 மசோதாக்கள் நிறைவேற இருந்த நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கூட நிறைவேறவில்லை. ஏனெனில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தன எதிர்க்கட்சிகள். 

லட்சக்கணக்கில் நமது எம்.பிக்கள் சம்பளம் பெற்றுக்கொண்டு,  நமக்கு அவர்கள் செய்தது,  மசோதாக்கள் நிறைவேறவிடாமல் தடுத்ததுதான்.  நிலக்கரி ஊழலில் நீதி விசாரணை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தையே ஒரு நாள் கூட நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனால் தோல்வி அடைந்ததோ ஆளுங்கட்சியோ, பிரதமரோ அல்ல. மக்கள் தான்.ஆளுங்கட்சியை ஆட்சியில் இருந்து இறக்குவதற்காக எதிர்கட்சிகள் போராடுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்கவிடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சி போராடுகிறது. ஆக மொத்தம் மக்களுக்காக யாரும் போராடவில்லை என்பதுதான் உண்மை.

அவ்வளவுதான், நாடாளுமன்றம் கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. இனிமேல் ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சிகளும், நிலக்கரி ஊழலை மட்டுமல்ல, மற்ற எல்லா ஊழலையும் மறந்துவிட்டு, அவரவர் வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். ஏமாறுவது மக்கள்தான்.

கற்பழிப்பு, கொலை குற்றங்கள் சாட்டப்பட்டவர்கள் எம்.பி ஆகிறார்கள். அடுத்த நாட்டின் அறிக்கைகளை ஐ.நா சபையில் படிக்கும் வெளியுறவு துறை அமைச்சர், அமெரிக்க பத்திரிகைகளால் கேவலமாக விமர்சனம் செய்யப்படும் பிரதமர், பிரதமரையே பொம்மலாட்டம் போல ஆட வைக்கும் அதிகாரம் மிக்க பெண், மதங்களின் பின்னால் மறைந்து கொண்டு அரசியல் செய்பவர்கள், இவர்கள்தான் இன்றைக்கு இருக்கும் எம்.பிக்கள். ஒரு சாதார கிளார்க் வேலைக்கு கூட தகுதித்தேர்வு, எழுத்துதேர்வு, நேர்காணல் முதலியவற்றை வைக்கும் நமது அரசு, நாட்டை ஆளும் எம்.பிக்களுக்கு ஏதாவது தகுதியை வைத்துள்ளதா? சரி இவர்தான் மோசமானவர் என நினைத்து, ஐந்து வருடம் கழித்து வேறொருவரை தேர்ந்தெடுத்தால், அவரும் அதையே செய்கிறார். இதற்கு என்னதான் தீர்வு.

ஒரு சாதாரண அரசு ஊழியர் தவறு செய்தால், மெமோ, சஸ்பெண்ட்,டிஸ்மிஸ் என நடவடிக்கை எடுக்கும் நமது அரசாங்கம், மிகப்பெரிய பதவியில் இருப்பவர்கள் கோடிக்கணக்கில் ஊழல் செய்தால், அதை முடிவு பெறாத ஒரு விசாரணை கமிஷனை வைத்து அமுக்கப்பார்ப்பது ஏன்? அந்த விசாரணைக்கமிஷனின் இறுதி அறிக்கை வருவதற்கு முன், விசாரிக்கப்படுபவரும், விசாரணை செய்பவரும் இறுதி யாத்திரைக்கு சென்றுவிடுவார்கள்.

பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்ததை கின்னஸ் சாதனை செய்ததைப் போல பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் எம்.பிக்கள், தாங்கள் செய்யவேண்டிய கடமைகளில் ஒரு பத்து சதவிகிதத்தை சரியாக செய்தால்கூட போதும் இந்தியா விரைவில் வல்லரசாகிவிடும். புரிந்து செயல்படுவார்களா நமது எம்.பிக்கள்?

4 comments:

பிஜேபியின் வாஜ்பாயியின் ஆட்சியில் பெரிய அளவில் எந்தக் கெடுதலும் நடந்துவிடவில்லை. நால்வழிச் சாலைகள் இங்கு அமைந்திட பிஜேபி மட்டுமே காரணம். அவர்கள் வடக்கு மாநிலங்கள் அனைத்துமாக 90 % சாலைகளை அவர்களின் ஆட்சியிலேயே போட்டுமுடிக்க முடிந்திருந்தது. மீதமுள்ள சாலைகளை போட காங் ஆல் 8 வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்து இவ்வளவு எதிர்ப்புகளுக்கே அசைந்து கொடுக்காதவர்கள், மொத்தமாக நாட்டையே சூறையாட நினைக்கும் இவர்கள், கோர்ட் தீர்ப்பு வரும்வரை என்ன செய்துவிடப் போகிறார்கள்.

தோலுரிப்பு, உண்மை தான், உரத்துறை அமைச்சர், உரத்தை விட்டு விட்டு கிரனைட் கல்லை தான் கவனிக்கிறார் போலும், தொடருங்கள், நன்றி

நல்ல பதிவு நண்பா...

தொடருங்கள்....

வாழ்த்துக்கள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More