வலைப்பதிவில் ஒரு புதிய பயணம்!சென்ற வார வலைபதிவர் விழாவிற்கு பிறகு ‘வலைப்பதிவு’ என்னும் சொல்லுக்கே ஒரு தனித்துவம் வந்துவிட்டது! எத்தனை வலைப்பதிவர்கள்! எத்தனை வலைப்பதிவுகள்!  யுவர்கள், யுவதிகள், நடுத்தர வயதுடையவர்கள், 50+, 60+, 70+, 80+ என்று வயதைக்கடந்த ஒரு சமூகத்தைப் பார்க்க முடிந்தது.

வந்திருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்த விழாவிற்கு முன்பாகவே சந்தித்து இருக்கிறார்கள். பலருக்கும் அவரவர் வலைத்தளத்தில் போட்டிருக்கும் புகைப்படம்தான் அடையாளம்!

இத்தனை பதிவர்களா என்று வியந்தாலும் இன்னும் பலருக்கு வலைப்பதிவு பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை.

அவர்களுக்காகவே இந்தப் பதிவு.

நம்மில் பலருக்கும் கதை எழுத வேண்டும், என்று வாழ்வில் எப்போதாவது சில முறை ஒரு உந்துதல் ஏற்படும், இல்லையா? உடனே ஒரு காகிதத்தையும், பேனாவையும் எடுத்து எழுதி அடுத்த தபாலிலேயே ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, காத்திருந்து..... காத்திருந்து.....பத்திரிகையில் பிரசுரம் ஆகாமல், நமக்கே திரும்பி வந்து....

வலைப்பதிவில் இந்த சங்கடங்கள் எதுவுமே இல்லை என்பதுதான் வலைப்பதிவு எழுதுவதில் இருக்கும் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
நீங்கள் எழுதுவதை நீங்களே வெளியிடலாம்.

எப்படி வலைத்தளம் தொடங்குவது?

கூகிள்  ப்ளாக்ஸ்பாட் (google – Blogspot.com) அல்லது வோர்ட்பிரஸ் (Wordpress.com) ஆகிய வலைதளங்களில் உங்கள் வலைத்தளம் ஆரம்பிக்கலாம். முதலில் கூகிள் ப்ளாக் ஸ்பாட்டுக்குப் போனால் ‘Create your Blog’ என்று போட்டிருக்கும். அதிலேயே உங்களுக்கு மிகச் சுலபமாக, படிப்படியாக வலைத்தளம் உருவாக்க வழிகாட்டுவார்கள். ஒருமுறைக்கு இருமுறை படித்தால் புரிந்து விடும்.

உங்களுக்கு தமிழில் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் பொதுவாக பதிவு இல்லத்தின் பெயர் ஆங்கிலத்தில் எழுதுவது நலம். உதாரணமாக ‘ ‘அட்ராசக்க’ என்ற தளத்தின் பெயரை adraasakka.blogspot என்று ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.

உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பிலிருந்து எல்லாமே உங்கள் விருப்பப்படி அமைக்கலாம்.

தமிழில் எழுத கூகிள் ட்ரான்ஸ்-லிடரேட் (google-transliterate) மூலம் நீங்கள் தமிழ் எழுத்து அமைப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் MS word – லேயே தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ‘அன்புள்ள’ என்று தட்டச்சு செய்ய வேண்டுமானால் ஆங்கிலத்தில் ‘anbulla’ என்று அடிக்க வேண்டும். நீங்கள் தட்டச்சு செய்யும்போதே தொடர்பான பல்வேறு வார்த்தைகள் கணனியின் திரையில் தோன்றும். தேவையான வார்த்தையை தேர்வு செய்து போடலாம்.

ப்ளாக்ஸ்பாட் போலவே வோர்ட்பிரஸ் – ஸிலும் வலைப்பதிவு செய்யலாம். ஆரம்பத்தில் சற்று புரியாததுபோல இருந்தாலும், போகப்போக பழகிவிடும். விடா முயற்சி வேண்டும், அவ்வளவுதான்!

தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் செய்ய பல மென்பொருட்கள் (software) இருக்கின்றன -  அழகி, இ-கலப்பை, முரசு, அ-தமிழ் எழுதி - என்று. எனக்கு எல்லாவற்றையும் விட கூகிள் மிகவும் சுலபம் என்று தோன்றுகிறது.

ஏன் வலைப்பதிவு செய்ய வேண்டும்?
நம் எண்ணங்களையும் யோசனைகளையும் பதிய இதைவிட சிறந்த சாதனம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த வசதி கணணித் தொழில்நுட்பம் நமக்குத் தந்திருக்கும் ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். மிக உயர்ந்த விஷயத்தைத்தான் வரம் என்று சொல்லுவோம், இல்லையா? இந்த வலைபதிவு செய்வதும் மிக உயர்ந்த விஷயம்.

நமக்குக் கிடைத்திருக்கும் வலைபதிவாளர் என்ற மிகப் பெரிய பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்ற  வேண்டும்.

நானே எழுதி நானே வெளியிடலாம் என்ற இந்தச் சுதந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நம் எழுத்து தான் நம்மை இந்த உலகுக்குக் காட்டும்  கண்ணாடி. அதனால்தான் பொறுப்பும் அதிகம்.

கண்டதையும் எழுதி நம்மையும் தாழ்த்திக்கொண்டு பிறரையும் கேவலப் படுத்தக் கூடாது. நம் எழுத்துக்கள் பிறருக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்பட வேண்டும்.

பத்திரிக்கையில் எழுதும் எழுத்தாளரை விட அதிகப் பொறுப்பு ஒரு வலைப்பதிவாளருக்கு. அங்கே நம் எழுத்துக்களை படித்து திருத்த உதவி ஆசிரியர்கள் உண்டு.  

இங்கே நமக்கு நாமே நாகரீகம் என்ற வேலியை போட்டுக் கொண்டு வரம்பு மீறாமல் எழுத வேண்டும்.

  • நம் எழுத்துக்கள் யாருடைய மனதையும் காயப் படுத்தக் கூடாது.
  • நம் சொந்த விருப்புவெறுப்புகளுக்கு நம் எழுத்துக்கள் பலியாகக் கூடாது.
  • எழுதுவதில் ஒரு உண்மை இருக்க வேண்டும்.
  • படிக்கிறவர்களின் ஆரோக்கியமான உணர்வுகளை தூண்டக் கூடியதாக இருக்க வேண்டும்.
  • தவறான விவரங்களைக் கொடுக்கக்கூடாது.
  • எழுத வேண்டிய தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துவிட்டு எழுத வேண்டும்.

மொத்தத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன், கருத்துக்கள் நிறைந்ததாக நம் எழுத்து அமைய வேண்டும்.
என்ன எழுதுவது? எதைப்பற்றி எழுதுவது? 
சரியான கேள்வி!
நிறைய எழுதலாம்....
எழுதும் தலைப்புகள் பற்றி நாளையிலிருந்து.......


13 comments:

சரிதான் அம்மா, . . இங்கே நாம் தான் ராஜா , அமைச்சர் எல்லாம், ஆனால் கடிவாளம் நம்மிடம் தான் இருக்க வேண்டும . நன்றி அம்மா

நன்றாக சொன்னீர்கள் அம்மா... புதியவர்களுக்கு மட்டுமல்ல... பதிவு எழுதுபவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது... நீங்கள் சொன்னது போல் :

நமக்கு நாமே நாகரீகம் என்ற வேலியை போட்டுக் கொண்டு வரம்பு மீறாமல் எழுத வேண்டும்...

// மிக உயர்ந்த விஷயத்தைத்தான் வரம் என்று சொல்லுவோம், இல்லையா? இந்த வலைபதிவு செய்வதும் மிக உயர்ந்த விஷயம். //

சத்தம் போட்டு ஒட்டு மொத்த குரல்களும் ஒலிக்க வேண்டிய வரி...

நன்றி அம்மா,,,

ஆமா ரொம்ப சரியா சொன்னிங்க

நன்றி திரு தனபாலன், திரு செழியன், திருமதி லட்சுமி, தொழிற்களம் குழு வினருக்கு!

குறிபீடு ஈட்ட ஆறு கருத்துக்களுக்கும் மிக முக்கியமானவை.எல்லா பதிவர்களும் பின்பற்றவேண்டியவை

நன்றி திரு ராஜா!

பதிவுகள் எழுதுவது பற்றி தனிப்பதிவே எழுதி இருக்கிறீர்கள்.நல்ல முயற்சி அம்மா! தொடருங்கள்.,வாழ்த்துக்கள்.

நன்றி விஜயன். பலருக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அதனால் தான் இந்த கட்டுரை.

திரு.செழியன் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் , மன்னிக்க: நான் கல்லூரி மாணவன் தான் அம்மா

//கண்டதையும் எழுதி நம்மையும் தாழ்த்திக்கொண்டு பிறரையும் கேவலப் படுத்தக் கூடாது. நம் எழுத்துக்கள் பிறருக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்பட வேண்டும்.//

//இங்கே நமக்கு நாமே நாகரீகம் என்ற வேலியை போட்டுக் கொண்டு வரம்பு மீறாமல் எழுத வேண்டும்.//

இதைச்சொன்ன தங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். ;))

அருமையான பயனுள்ள பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

vgk

இனிமேல் செழியன் என்று குறிப்பிடுகிறேன். சரியா?

பாராட்டுக்கு நன்றி வை.கோ. ஸார்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More