ஆசையே இன்பத்திற்கு காரணம். பேராசை பெரும் லாபம்.

புத்தர் போதிமரத்தடையில் ஞானம் பெற்று கண்டுபிடித்தாராம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று. ஆனால் இந்த நவீன காலத்தில் ஆசை என்பது இன்றியமையாதது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசை கொண்டால்தான், வெற்றி அடைய முடியும். 

நூறு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் ஒரு தொழிலதிபரிடம் போய் உங்களுக்கு மனநிறைவு வந்துவிட்டதா என்று கேட்டுப்பாருங்கள். கண்டிப்பாக இல்லை என்று தான் கூறுவார். ஏனெனில் போதும் என்ற மனநிறைவு ஒருவருக்கு வந்துவிட்டால், அவருடைய தொழில் தேக்கம் அடைந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தொழிலில் ஒரு நிலை வந்துவிட்டோமா? சரி அடுத்து என்ன நிலை என்று ஆசையோடு யோசிப்பதில்தான் நம்முடைய மற்றும் நம்மை சேர்ந்தவர்களுடைய வெற்றி இருக்கிறது.

நாம் வளர்ந்து கொண்டே இருந்தால், தானாக நம்மை சார்ந்திருப்பவர்களும், நம்மை சுற்றியிருப்பவர்களும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருப்பார்கள். நாம் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து, என நின்று விட்டோம் என்றால், நம்மை சுற்றி இருப்பவர்கள், நம்மை விட்டு விலகி சென்று விடுவார்கள். எனவே தொழில் வளர்ச்சியில் பேராசை பெருநஷ்டம் என்ற பழமொழி எல்லாம் எடுபடாது. 

தொழிலில் மட்டுமல்ல, கல்வி பயில்வதிலும் கூட ஒரு நிலையில் நிறுத்திவிடக்கூடாது. நாம் கல்வி பயில்வது ஒரு நல்ல வேலை வாய்ப்புக்காகதான். ஒரு நிரந்தரமான நல்ல வேலை கிடைத்தவுடன், கற்பதை மட்டும் நிறுத்திவிடக்கூடாது. வேலையை பார்த்துக் கொண்டே மீண்டும் ஏதாவது ஒன்றை நாம் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். கற்றுக்கொள்ளும் மனப்பான்மை, தொழில் வளர்ச்சி இவை இரண்டும் நாம் உயிர் நின்றால்தான் நிற்க வேண்டும். அதுவரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற பாடல் தற்காலத்திற்கு பொருந்தாது. உனக்கும் மேலே உள்ளவர் கோடி, அவர்களைப் போல நீயும் ஓடு என்பதுதான் இந்த காலத்திற்கு பொருந்தும்.

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், வளர்ச்சியில் திருப்தியடைந்து நாம் நின்றுவிட்டால், அது நம்மை கீழ்நோக்கி இழுத்து, பின் நம்மை எங்கே நிறுத்தும் என்பதே நமக்கு தெரியாமல் போய்விடும்., எந்த நிலையிலும் நம்முடைய வளர்ச்சி சதவிகிதம் ஏற்றத்தில் இருக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் நின்று விடவோ அல்லது இறக்கத்திலோ இருக்க கூடாது.

6 comments:

உண்மைதான்...

போதும் என்ற மனமே பொன் செய் மனம் என்று ஒரு பழமொழி உண்டு, ஆனால் இன்றைய நாளில் யாருக்கும் போதும் என்ற மனமே வருவதில்லை..

தன் நிலையில் மேலும் ஒரு படி செல்லதான் விரும்புகிறார்கள்...

நம் தாத்தா - பாட்டி காலத்தில் அத்தியவசிய தேவை மட்டும் இருந்தது ஆனால் நம் காலத்தில் ஆடம்பர தேவையாக மாறி விட்டது. இதை திருப்தி படுத்துவது மிக கடினம்...

பந்தயத்தில் இருக்கிறோம் நின்றோமானால், காணாமல் போய்விடுவோம்...

நல்ல பகிர்வு...

வாழ்த்துக்கள்...

திரு.சீனிவாசன்...
தொழிற்களம் குழு...

ஒரு தொழிலில் மனநிறைவு அடையாதவர்களால்... அடுத்த தொழில்... எப்படி...?

தொழில் வேறு... மனநிறைவு வேறு...

/// கற்றுக்கொள்ளும் மனப்பான்மை, தொழில் வளர்ச்சி இவை இரண்டும் நாம் உயிர் நின்றால்தான் நிற்க வேண்டும்.///

நல்ல கருத்து... நன்றி...

தொழிலில் மட்டுமல்ல, கல்வி பயில்வதிலும் கூட ஒரு நிலையில் நிறுத்திவிடக்கூடாது. நாம் கல்வி பயில்வது ஒரு நல்ல வேலை வாய்ப்புக்காகதான். ஒரு நிரந்தரமான நல்ல வேலை கிடைத்தவுடன், கற்பதை மட்டும் நிறுத்திவிடக்கூடாது.

கல்வி என்பதை வெறும் பட்டம் பெறுவது என்று நினைப்பவர்கள் தான் அதிகம். கற்பதை பணம் பண்ணும் முயற்சியாக மட்டுமே நினைப்பது தான் இன்று கல்வி என்று சொல்கிறார்கள்

நல்ல பதிவு

//உனக்கும் மேலே உள்ளவர் கோடி, அவர்களைப் போல நீயும் ஓடு//

ரெம்ப இரைக்குமே !

நமக்கு மேல உள்ளவுகளையும்,கீழே உள்ளவுகளையும் நினைச்சு ரெம்ப அலைஞ்சு பறை சாத்தாம ஒரு அந்தாசான வேகத்துல ஓடறது தான் பெட்டர்.

இல்லாட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகளுக்கு ஓட வேண்டி வந்துரும்.

நீங்கள் சொல்வது ஆரோக்கியமானதாக தற்பொழுது காணப்படவில்லை, மன நிறைவு இல்லாத ஒருவன் எந்த காரியத்தையும் சரியாக செய்யமுடியாதே.. நன்றி

உங்கள் கருத்து கொஞ்சம் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

தொழிலதிபர் இன்னும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை!

கல்வியில், நாம் செய்யும் தொழிலில் மேலும் பல படிகளை ஏற வேண்டும் என்று நினைப்பது ஆரோக்கியமான மன நிலை.

நான் மட்டுமே முன்னேற வேண்டும் என்று நினைப்பது துராசை!

நாம் செய்யும் தொழிலில் மன நிறைவு நிச்சயம் வேண்டும். பேராசை, துராசை நம்மை முன்னேற விடாது.

உங்களைச் சொல்லிவிட்டு நானே குழப்பி விட்டேனோ?

மனநிறைவு வேறு; சாதிக்கத் துடிப்பது வேறு!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More