Latest News

படித்து ‘முடிக்க’ வேண்டாம்!சென்ற பதிவில் 'தினங்களை' பற்றி எழுதுவதைப் பார்த்தோம்.
இன்று படித்தல் என்பதைப் பற்றிய ஒரு பதிவு.

படித்தல் என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல; வலைபதிவர்களுக்கும் அவசியம் என்பதை சொல்லவே இந்தப் பதிவு.

‘படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு....’

‘படிக்காமலேயே நான் மேதை ஆகிவிடுவேன்....ஏன் படி படி என்று கழுத்தை அறுக்கிறாய்’ என்று இந்தத் தலை முறையினர்  பலர் கேட்கிறார்கள். படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது என்று கூட ஒரு சாரார் சொல்லுகிறார்கள்.

‘மனிதனும் ஒரு சமூக விலங்கு’ என்று சமூகவியலில் ஒரு குறிப்பு உண்டு. எப்படி சிரிப்பு என்பது மனிதனை விலங்குகளில் இருந்து தனித்துக் காட்டுகிறதோ, அதேபோல படிப்பு என்பதும் மனிதனுக்கே உரித்தான ஒன்று.

எந்த ஒரு மொழியில் வல்லவனாக வேண்டும் என்றாலும் 3 R கள் முக்கியமானவை. அது என்ன மூன்று R கள்?

Reading – படித்தல்,
Retaining – படித்தவற்றை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுதல் 
Recalling – நினைவு படுத்திக் கொள்ளுதல்

முதலில் நிறையப் படிக்க வேண்டும். படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நினைவில் வைத்துக்கொண்டவற்றை தேவைப்பட்ட சமயத்தில் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் – தானாகவே வரும்!

இவையெல்லாம் ஒரே சமயத்தில் நடைபெறுபவை, எப்படி? படிக்கும்போதே மனம் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும். நினைவில் நின்றவற்றை எழுதும்போதும், பேசும்போதும்  பிறரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

இங்கு நான் படிப்பது என்று சொல்லுவது பாடப் புத்தகங்களை தவிர்த்த பிற புத்தகங்களை படிப்பது. அதாவது நமது அறிவை விசாலப்படுத்திக் கொள்ள; உலகத்தை இன்னும் நன்றாகப் பார்க்க (பார்ப்பது என்பது வெற்றுப் பார்வை அல்ல) மனிதர்களைப் புரிந்து கொள்ள; எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை நாமே துல்லியமாக அறிய. நமது நிறை குறைகளை அறிய. குறைகளைக் களைய, நிறைகளை அதிகரிக்க!


இதற்கு நீங்கள் ரொம்பவும் சிரமப் படத் தேவையில்லை. முதலாவதை செய்ய ஆரம்பித்தால் தானாகவே மற்ற இரண்டும் நடந்து விடும்!
படியுங்கள் – கவனமாக, நிறுத்தி, நிதானமாக, ஆழ்ந்து. ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிக்கொண்டு படியுங்கள். உங்களை அறியாமல் நீங்கள் படித்தவை மனதில் படிந்து விடும். மனதில் படிந்தவை சரியான சமயத்தில் பகிர்தலாக வெளி வரும்.


என்னிடம் வரும் மாணவர்கள் நிறையப்பேர் சொல்லுவார்கள்: மேடம்! எனக்கு ஆங்கிலம் எழுத வரும்; படிக்க வரும் ஆனால் பேச வராது’ என்று.


எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்வது படிப்பது அல்ல. அதைபோல எழுத்துக்கள் தெரியும் என்று எழுதுவது எழுத்தல்ல; படிக்கும்போதும் எழுதும்போதும் என்ன எழுதுகிறோம், என்ன படிக்கிறோம் என்று உணர்ந்து எழுதுவது படிப்பதுதான் நிஜமான எழுத்து, படிப்பு. அப்படிப் படித்து, அப்படி எழுதினால் தானாகவே பேசவும் வரும்.


வலைப்பதிவர்களுக்கு இந்தப் படிப்பு இன்றியமையாதது. படிப்பு உங்களது எண்ணங்களை மெருகூட்டும். நல்ல எழுத்துக்களை அடையாளம் காட்டும். இன்னவற்றை எழுதலாம் என்று உங்களுக்கு வழி காட்டும்.


உங்களது எழுத்துக்கள் உங்கள் ரசனையைக் காட்டும். படிப்பு உங்கள் ரசனையை அதிகரிக்கும்.


இன்னொரு விஷயமும் சொல்ல விரும்புகிறேன்:
சென்ற முறை சென்னை சென்றிருந்தபோது என் தோழி வீட்டில் ஒரு புத்தகம் பார்த்தேன். ‘ஸ்ரீ வைஷ்ணவக் கட்டுரைகள்’ என்று. நான் படித்துவிட்டுத் தரவா என்றேன் தோழியிடம். ‘ம்! 80 கட்டுரைகள் இருக்கின்றன. பெங்களூர் போவதற்குள் நீ முடித்து விடலாம்’ என்றாள். ‘படித்து முடிப்பதா?’ என்றேன். ‘உன்னைப் பற்றி தெரியும். நீ எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து விட்டுக் கொடு’ என்றாள் தோழி.


எந்த ஒரு புத்தகத்தையும் ஒரே முறை படித்து விட்டு ‘படித்து விட்டேன்’ என்பது சரியல்ல. திரும்பத்திரும்ப படிக்க வேண்டும். ஒவ்வொருமுறையும் ஒரு புதிய விஷயம் கவனத்திற்கு வரும். இதைக் கவனிக்கவே இல்லையே என்று திரும்ப படிக்கத் தூண்டும். புத்தகங்களுக்கு, அவற்றில் இருக்கும் எழுத்துக்களுக்கு  நம்மை கவரும் சக்தி உண்டு. அந்த சக்தி அதிக காலம் நம்மை ஆளும்.


குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே புத்தகங்களை அறிமுகப் படுத்துங்கள். பிற்காலத்தில் புத்தகங்கள் அவர்களை வழி நடத்தும். அவர்களை எழுதத் தூண்டுங்கள். நாளை அவர்கள் உலகுக்கு வழிகாட்டியாக மாறுவார்கள்.


குழந்தைகளின் மனம் மிகவும் மென்மையானது. அவர்களின் உலகம் தனி. யாராலும் அவ்வளவு சீக்கிரம் அங்கு நுழைய முடியாது. ஆனால் நல்ல புத்தகங்கள் எளிதாக அவர்கள் மனதில் இடம் பெறும்.


நிறையப் படியுங்கள்; திரும்பத்திரும்பப் படியுங்கள்; நீங்கள் பெற்ற அனுபவத்தை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

திரு தனபாலனின் தூண்டுதலால் தான் இந்தப் பதிவு. அவருக்கு நன்றி!

முதல் முறையாக வருபவர்களுக்கும் போன பதிவுகளை படிக்காதவர்களுக்கும்: 

Follow by Email

Recent Post