Latest News

வாழ்க்கைப் பாதையின் முக்கியத் திருப்பம்

அந்தநாட்கள் அவனுக்கு மிகவும் கணத்தனாட்கள் ஆகிவிட்டிருந்தன. அவனின் காதல் வாழ்க்கை முடிவுபெற்ற சோகமான காலங்கள். தொழிலில் சரியான கவனம் செலுத்தமுடியாமல், வெறுப்பான அந்த 4 மாதங்கள். சாப்பாடு கொள்ளாமல், தூக்கம் மறந்த நிலையில், துக்கம் தொண்டையில் நிற்க துவண்டு கிடந்த அந்த மாதங்கள். ஏதாவது முடிவு செய்தாக வேண்டும். அவளிடம் மறுபடியும் கெஞ்ச வேண்டுமென்று மனம் கூறினாலும், கணத்த நெஞ்சு கண்மூடிநின்றது. மறு தோல்வியை அனுமதிக்க முடியாது.


அன்று விநாயகர் சதுர்த்தி. கடை மதியம் விடுமுறை. வீட்டில் புரண்டுகொண்டு படுக்கையில் கிடந்தபோழுது, சட்டென கன்னியாகுமரி சென்றுவரலாம்போல் தோன்றியது. கிளம்பிவிட்டேன், 

     தனியாகவே பஸ்ஸில். 2 டீச்சர்ஸ் (ஆம் அப்பொழுதும் அதுதான் பிடித்திருந்தது.) விஸ்கி புல் பாட்டிலை எடுத்து பெட்டியினுள் செருகிக்கொண்டேன். அந்த சமயம் நான் குடிப்பது யாருக்குமே தெரியாது. எங்களின் வீட்டுப் பெரியவர்கள், "குடிப்பது", என்பதை ஒரு பெரிய பாவச் செயலாய் ஏற்படுத்தியிருந்தார்கள். அதாவது என் தந்தை குடிப்பவர். அது எனக்குத் தெரியாதவாறு எந்தாய் பார்த்துக்கொண்டார்கள். எல்லை மீறிய பின் ஒருநாள் என் தந்தையை  அவரின் நண்பர்கள் நடுநிசியில் கைத்தாங்கலாய் தூக்கிவந்து வீட்டில் போட்டனர். மறுநாள் என் தாய் அழுததைப் பார்த்ததும்தான் உண்மை தெரிந்தது. கடைசியில் என் தாய் சந்தோசமாய், நல்லவேளை நீ ஒருவனாவது குடிப்பழக்கம் இல்லாமல் இருக்கிறாயே அதுவே போதும், என்றுவேறு சொல்லிவிட்டார்கள். ஆகா என்ன ஒரு சர்டிபிகேட். அதைக் காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது. ஆக என்னின் இந்தப்பழக்கம் முற்றிலுமாக மறைக்கப்பட்டே குடிகொண்டு ஓடிக்கொண்டிருந்தது. 


சனிக்கிழமை ஆனதால் பஸ்ஸில் நல்ல கூட்டம். 2 விடுமுறை நாட்கள்.  குமரியில் ரூம்போட்டு பாட்டிலை திறந்தபொழுது மணி 11. இரவு முழுவதும் அவளின் சிந்தனை. போதை குறையாமல் மேலும்மேலும் ஸ்காட்ச். 2 இட்லிகள் இரவு உணவு. கையடக்க டிரான்சிஸ்டரில் பாட்டு. "ஈரமான ரோஜாவே, என்னைப்பார்த்து மூடாதே" காலம். இப்படியே அசைந்து ஓடியது இரவு, கன்னங்களில் கண்ணீரை நனைத்து.

    அதிகாலையில் சூரிய உதயம், குமரியில் ஒரு கண்கொள்ளாக் காட்சிதான். எவ்வளவு அருமை. ஒரு நிமிடம் மனம் நிறைந்திருந்தது. டீயில்லை, அதற்குப்பதில் ஸ்காட்ச்தான். காலை உணவு 4 வடைகள். பின்னர் ஒரு 11 க்குக் கிளம்பி, ஒரு பாட்டிலில் மிக்சிங்க்போட்டு எடுத்துக்கொண்டு விவேகானந்தர் பாறை. அருமையான இடம். வாழ்வில் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய இடமது. அந்தப்பாறையில்தான் அவர் தவம் செய்திருக்கிறார். நானும் அதுபோல இருந்துபார்த்தேன். ஒன்றும் என்னுள் நடக்கவில்லை. விதவிதமான இந்திய மக்களைக் காணமுடிந்தது. மண்டபத்தின் குளிர்ந்த காற்றால் அமர்ந்தவாறே சிறிது கண்ணயர்ந்தேன். மதியவுணவில் அக்கறையில்லை.

மாலையில் கொஞ்சம் தட்டுத்தடுமாறி கடற்கரை மணல்வெளியில் கடலிலிருந்து கொஞ்சம் தள்ளி சாய்ந்து அமர்ந்துகொண்டேன். கடலலைகளின் தொடர்ந்த அணிவகுப்புகள், நீலத்தில் வெள்ளியைக் கரைத்து ஆடவிட்டதுபோல் ஓர் அழகு. அமைதியான இன்பச் சூழல். நெஞ்சில் மட்டும் ஒரு முள். அதற்கு என்னால் முடிந்தமட்டும் ஸ்காட்சை ஊற்றி, ஆற்றிக் கொண்டிருந்தேன். 

    இதமான அந்த குளிர்ந்த காற்று. அதைக் குடும்பம் குடும்பமாய் அமர்ந்து அனுபவிக்கும் மக்கள். சில கடலலைகள் பாறையில் மோதி 15 அடியுயரம் வரையிலும்  எழும்பின. குமரியில் நான் குளித்ததில்லை. அது பொங்குகடல். நீச்சல் தெரிந்திருந்தாலும் பலனில்லையாம். அந்தக்கடலின் மீனவர்கள் மட்டும் அதில் தேர்ந்தவர்கள் என்பதை உண்மையாக்கி சில மீனவ இளம் வாலிபர்கள் குளித்துக்கொண்டும் குதித்து ஆடிக்கொண்டும் இருந்தனர். அந்தநேரம்தான் அவனருகில் இளம் காதலர்கள் இருவர் வந்தமர்ந்தனர். அவர்களின் பேச்சு நடவடிக்கை அவர்கள் காதலர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருந்தது. சந்தோசமாக இருந்தனர். அந்த இடத்தையும் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தது.

     அவர்களுடன் மேலும் இரண்டு பெண்கள் வந்து சேர்ந்துகொண்டனர் இப்பொழுது. ஒன்றாக கல்லூரியில் படிப்பவர்கள்போலும். உரிமையோடு கேலியும் கிண்டலுமாய் அரட்டையடித்தனர். சட்டெனக் கிளம்பி கடலைநோக்கிச் சென்று கடலில் காலைநனைத்து விளையாடத் துவங்கினர் ஒருவர்கையை ஒருவர் பிடித்துக்கொண்டே. ஒரு பெரிய அலை கண்முன்னே வந்துகொண்டிருப்பது தெரிந்தது. பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். திடீரென அந்த நால்வரையும் காணவில்லை. கடல் உள்ளிழுத்துவிட்டது. 

அந்தப்பையன் மட்டும் வேறொரு பெண்ணை தட்டுத் தடுமாறி இழுத்துக்கொண்டு வெளிவருவது தெரிகிறது, பெரிய அலறலுடன். மற்ற இருபெண்கள், அலைகள் மட்டுமே மேலும்மேலும் கரையை மோதுகின்றன. மீனவ நண்பர்கள் பாய்ந்தனர். நானும் சத்தம் வந்த திசைநோக்கி பாய்ந்தேன். கடலுக்குள் ஒரு பத்தடி சென்று தேடினேன், அதுவே கழுத்தளவு ஆழம். ஒருபெண்ணை முடியைப்பிடித்து ஒரு மீனவன் கரைக்கு  இழுத்துப்போட்டான். கூட்டமும் நன்றாக கூடிவிட்டது. நல்லவேளையாக அதில் ஒரு டாக்டர் இருந்தார். ஓடிவந்து முதலுதவிகள் கொடுத்துப்பார்த்தார். அவருக்கே நம்பிக்கையில்லை. 

அவள் இறந்துவிட்டிருந்தாள். அடுத்த பெண்ணையும் இரு மீனவர்கள் இழுத்துவந்தனர். அவளும் இறந்தேயிருந்தாள். ஒரே மரண ஓலம்தான். அவனின் காதலியும் மற்றுமொரு தோழியும் இறந்து கிடந்தனர். சில நிமிட அவர்களின் சந்தோஷ ஆட்டங்கள் கண்முன்னே வந்து சென்றது. காதலி மும்பைப் பெண்ணாம். மற்றவள் நாகேர்கோயில்காரி.

  என்ன உலகமடா இது, ஆண்டவா அந்தக் காதலிப் பெண்ணையாவது நீ காப்பாற்றிவிடக்கூடாதா? மனம் வேண்டியது. அவன் செவிசாய்க்கவில்லை.

காட்டாற்று வெள்ளம் ஓடுவதுபோல் நம்மையும் அவனே வளைந்துநெளிந்து வாழ்க்கைப் பாதையில் ஓடவைக்கிறான். இதில் நம் பங்கு என்ன. ஒன்றுமேயில்லை. அங்கு ஒருத்தி வேண்டாம் என்று ஒதுங்கினாள். இங்கு ஒருத்தி துடிக்கத்துடிக்க இன்பம் அனுபவித்து, ஒரு நொடியில் இறந்துபோனாள்.

இதுதான் உலகம். அதனோடு இயைந்து வாழ்வதே உன் கடமை, என்பது ஆழமாக மனதில் பதிந்தது. கொஞ்சம் தெளிந்தது. ஒரு நாள், இரு இரவுகள், 2 ஸ்காட்சும் காலியாகி மனதை நிறைத்துவிட்டது.

Follow by Email

Recent Post