49 ஒ : வாக்களிக்க விருப்பம் இல்லை





பல நாட்களுக்கு இன்று ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என எண்ணிய போது என் நண்பன்   தனக்கான வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை என்னிடம் நிரப்பி தரும்படி கேட்டான்.அப்போதே தெரிந்துவிட்டது இன்றைய தலைப்பு...




ஏனெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இதை பற்றி கருத்துக்களை பரப்ப தமிழகத்தில் முன்னனியில் இருக்கும் ஒரு வார இதழுக்கு என் கருத்துக்களை எழுதி அனுப்பினேன்.ஆனால் பதிலும் இல்லை பதிவும் இல்லை.




இப்போதுதான் நம் தொழிற்களம் உள்ளதே...! அதனால் தான் நம்பி என் பதிவை இடுகிறேன்.என் இன்றைய தலைப்பு 49-ஒ...



                                                 



49-O என்பது தனி நபர் ஒருவர் தேர்தலை சட்டரீதியாக புறக்கணிக்கவும்,தேர்தலில் கள்ள ஓட்டு போடும் ஏமாற்றுவேலையை தடுப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961ல் (The Conduct of Elections Rules, 1961) உள்ள ஒரு விதிமுறையே...!




ஒரு வாக்காளருக்கு தான் வசிக்கும் தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருந்துகொள்வார். ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரேனும் தங்கள் விருப்ப கட்சியின் வேட்பாளருக்கு போட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடக்கும் நம் தேர்தல் சம்பிரதாயம், கலாச்சாரம்! ஆனால் அதைத் தடுப்பதற்காகத்தான் 49-O என்று ஒன்று உள்ளது.இது 1961 முதலே அமலில் இருந்தாலும் தற்போது ஊடகங்களில் புரட்சியால் நம் வாயில் மாட்டிய அவலாக அகப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.




தேர்தல் விதி 49-ஓ:




நாம் 49-Oவில் நம் ஓட்டைப் பதிவு செய்ய வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட தேர்தல் அலுவலக அதிகாரியை அணுகி நம் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர் வழக்கமாக ஒரு ஓட்டு பதியப்படும் முன் நடத்தப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சரிபார்ப்பு வேலைகளையும் செய்து முடித்து நமக்கு ஒரு விண்ணப்பம் அளிப்பார். 




அதில்  அந்த அதிகாரியின் மேற்பார்வையில் வாக்களரின் பதிவு எண் குறிக்கப்பட்டு அவர் பெயருக்கு நேராக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று எழுதப்பட்டு அலுவலர் முன்னிலையில் அதற்கு நேராக வாக்காளரின் கையெழுத்தோ அல்லது கைரேகையோ பதியப்பட வேண்டும் அந்த விண்ணப்பம் 17A (வாக்களர் அட்டவணை புத்தகம்) என்ற பெயரில் இருக்கும்.இப்படி செய்வதால் நாம் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போடவில்லையென்றாலும் நாம் ஓட்டுப் போட்டதாகப் பதிவாகிவிடும். அதனால் நம் ஓட்டை வேறு யாராலும் கள்ள ஓட்டாகப் போட முடியாது!




ஆனால் இம்முறையில் ரகசியங்கள் காக்கப்படாது. நாம் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கும் விஷயம் தெள்ளத்தெளிவாக, கிட்டத்தட்ட அந்த 'பூத்'தில் உள்ள எல்லொருக்குமே தெரியும். 




இதை மாற்றத்தான் 2004ஆம் ஆண்டும் நம் தேர்தல் ஆணையம், அதற்கு பல பேரிடமும், சமூக அமைப்புகளிடமும் இருந்து வந்த '49-Oவிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும்' என்று சொன்ன மனுக்களை மதித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சில மாற்றுகளை செயல்படுத்துமாறு சிபாரிசு செய்ததது. அதாவது ஓட்டுப் போடும் இயந்திரத்தில் எல்லா வேட்பாளர்களின் பெயருக்குப் பின் கடைசியாக "மேற்கண்ட எவருக்கும் இல்லை" (None of the above) என்ற பட்டனையும் வைக்க வேண்டுமென சிபாரிசு செய்திருந்தது. இதைச் செய்வதன் மூலம் ரகசியம் முழுமையாகக் காக்கப்படும். ரஷ்யா போன்ற நாடுகளில்  இந்த நடைமுறை உள்ளது. ஆனால் இந்த சிபாரிசு மீதான நடவடிக்கை என்ன ஆனது என இந்த நொடி வரைக்கும் செய்தி இல்லை. அதனால் இந்தத் தேர்தலிலும் பழைய விண்ணப்பம் முறையே பயன்பாட்டில் இருக்கும்!





புரளி என்னவெனில்,




இப்போதுதான் மிகவும் முக்கியமான விஷயம். எதனால் பலர் "49-O போடப்போறேன்", அல்லது "49-O போடுங்க"னு சொல்கிறார்கள் என்றால், ஒரு தொகுதியின் வெற்றி வேட்பாளர் பெரும் வாக்குகளை விட அத்தொகுதியில் 49-O வாக்குகள் அதிகம் பதிவாகியிருந்தால், அந்த வேட்பாளரின் வெற்றி தள்ளுபடி செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் என நினைக்கிறார்கள்! இது முற்றிலும் தவறு. இப்படி நடக்க எந்த சட்டமும் கிடையாது. வெற்றி வேட்பாளர் 49-Oவை விட குறைவாய் ஓட்டு வாங்கியிருந்தாலும் அவரே வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுவார். 




இன்னும் கற்பனை வளம் அதிகம் உள்ல சிலர் 49-Oவில் விழும் வாக்குகள் வெற்றி வேட்பாளரை விட அதிகமாய் இருந்தால் அந்தத் தேர்தலில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் வாழ்க்கை முழுதும் தேர்தலில் நிற்க முடியாதபடி செய்யப்படுவார்கள் என்று நம்புகிறார்கள்! இது முழுக்க முழுக்க தவறு. இப்படியும் எந்த விதிமுறையும் கிடையாது!




வெற்றி வேட்பாளரின் வாக்குகளை விட ஒரு தொகுதியில் 49-O அதிகமாக விழுந்திருந்தால் கூட (உங்கள் வாக்கு பதிவாகியிருந்தாலும் )அது கணக்கில் வராத வாக்கே. நீங்கள் 49-Oவில் உங்கள் வாக்கைப் பதிவு செய்வதால் உங்கள் வாக்கு முறைகேடாகப் பயன்படவிருந்ததை தடுத்திருக்கிறீர்கள், அவ்வளவே! 



எத்தனை பேர் 49-Oவில் வாக்கைப் பதிந்தார்கள் என்பதை வாக்கு எண்ணிக்கை அறிவிக்கும் போது அறிவிப்பார்கள் . அவ்விவரத்தை நாம் 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியே அறிய முடியும். உங்கள் வாக்கு தவறாகப் பயன்படுத்துவதை விரும்பவில்லையெனில் கண்டிப்பாக 49-Oவைப் பயன்படுத்தி உங்கள் வாக்கைப் பதியுங்கள். அல்லது காலம் காலமாக ஜனநாயகத்தின் வேதவாக்கான 'select the better candidate' என்ற வழக்கத்தின் படி உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.வேறு என்ன செய்வது...?



வேதனை: 




நிகழ்வு 1:




இந்தியாவின் ஓர் மூலையில் வாக்குச்சாவடிக்கு சென்ற ஓர் இளைஞன் அங்குள்ள அலுவலரிடம் 49-O விதியின் படி தனக்கு வாக்களிக்க விரும்பும்  இல்லை என்று பதிவு செய்ய 17A படிவத்தினை தருமாறு கேட்டிருக்கின்றான்.  அங்குள்ளவர்களுக்கு அது என்ன வென்றே தெரியவில்லை, அவ்வாறு செய்வதற்கான சட்ட விதிகள் ஏதும் எதுவும் இல்லை என்று மறுத்திருக்கின்றனர்.  இளைஞனோ விடாமல் வற்புறுத்தவே அரை மணி நேர விவாதத்திற்கு பிறகு அவர்களுக்கு வழங்கப் பட்ட தேர்தலில் வாக்கு அளிப்பதற்கான சட்ட வழிமுறைகள் அடங்கிய கையேட்டினை அரைமணிநேரம் அலசிய பிறகு அந்த இளைஞனை 49ஒ விதியின் படி யாருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை என்று பதிவு செய்ய அனுமத்தித்துள்ளனர்.




நிகழ்வு 2:




இதே தேசத்தின் இன்னோர் மூலையில் இதே விருப்பத்துடன் சென்ற மற்றோர் இளைஞனக்கோ ஓட்டு போட விரும்பமில்லையென்றால் வந்த வழியே திரும்பிவிடு, இல்லையென்றால் கருப்பு நிற கம்பிக்களுக்கு பின்னால் நிற்க வேண்டியிருக்கும் என்று மிரட்டப்பட்டு இருக்கின்றார், இளைஞனோ வேறு வழியில்லாமல் யாரோ ஒருவருக்கு ஓட்டு போட்டுவிட்டு இந்திய ஜ்னநாயகத்தை தூக்கி நிறுத்தி விட்டு வந்தாராம்.அந்த இளைஞன் வேறுயாரும் இல்லை நான் தான்.




நிகழ்வு 3:




இன்னும் ஒன்று இங்கு இளைஞி, அவருக்கு வாக்குச்சாவடியின் மூத்த அலுவலர் சொன்னாராம், அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவே இல்லையென்று.தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அவர் வெளியேறினாறாம்.




இங்கு நாம் கவனிக்க வேண்டியது அரசு அலுவலர்களைத்தான். ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்கள் வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  மேலே உள்ள சம்பவங்களின் வழி நாம் அறிய முடிவது மூன்று நாளும் இவர்களுக்கு சம்பளத்துடன் கொடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் என்ன நடக்கின்றதா? அங்கு என்ன சொல்லித்தரப்படுகின்றது? இல்லை பூத் ஏஜெண்ட்களின் அறிவுரையின் அடிப்படையில் இவர்கள் இவ்வாரு செயல்படுகின்றார்களா என்ற ஐயப்பாடும் எழுகின்றது.




 இங்கு அனைவரையும் குற்றம் சாட்டவில்லை... நிறைகள் இருந்தாலும் குறைகள் நிறைகளை நீர்த்துவிடச்செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைந்து இருக்கின்றது.




அதைவிட தற்போது மக்களிடம் ஓட்டுப் போடச் சொல்லி விளம்பரம் செய்யும் தேர்தல் ஆணையம் அவ்விளம்பரத்தில் "உங்கள் விருப்ப கட்சிக்கு வாக்களியுங்கள்" என விளம்பரம் செய்கிறது. "உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள்" என்றல்லவா இருக்க வேண்டும். சுயேட்சைகளையெல்லாம் தேர்தல் ஆணையம் புறக்கணிக்க சொல்கிறதா?


4 comments:

பயன்படும் பதிவு நன்றி நண்பனுக்கு

தகவலுக்கு நன்றி....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More