Latest News

ஒழுக்கம் விழுப்பம் தரலான்...

வள்ளுவரைத் தெரியாத தமிழர் இருக்க முடியாது. எந்தத் தலைப்பில் பேசுவதாயினும், பேச்சாளர்கள் திருவள்ளுவரை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். அப்படித் தான் இங்கு நானும் துணைக்கு அழைத்துள்ளேன்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இதன் பொருள் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இன்று நாம் எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறோம்? ஒழுக்கம் நமக்கு எப்படிக் கற்பிக்கப் படுகிறது?! (ஒழுக்கம் கற்பிக்கக் கூடியதா?)

ஒழுக்கம் என்று நாம் எதைச் சொல்கிறோம்?
நல்லவராக இருப்பதையா? எதை ஒழுக்கம் என்று சொல்கிறோம்?

நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வதைத் தான் ஒழுக்கம் என்கிறோம்.
அதாவது, ஏதேனும் தீய செயல் செய்ய வேண்டும் போல் தோன்றுகிறது, ஆனால், அது தவறு, இதனால் நமக்கும் பிறருக்கும் என்ன தீமை ஏற்படும் என்று யோசித்து அதைச் செய்யாமல் இருப்பது.

ஆனால், இன்று ஒழுக்கம் நம்மிடயே எப்படி இருக்கிறது? பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஒழுக்கம் எப்படி கற்றுத் தரப்படுகிறது?

பெரும்பாலும் இங்கு (பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்) நாம் ஒழுக்கமாக இருக்க வற்புறுத்தப்படுகிறோம்.

கல்லூரியிலோ, பள்ளியிலோ, அல்லது பொது இடங்களிலோ, ஒரு தவறு செய்தால் தண்டனை என்று சொல்வதால் தான் பெரும்பாலானோர் ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள், இல்லை, ஒழுக்கமாக நடிக்கிறார்கள் எனலாம்.

இது நம்மை எந்த விதத்திலும் வளர்த்தெடுக்காது. சரிதானே?

ஒழுக்கம் என்பது நம்முள் விதைக்கப்பட வேண்டிய ஒன்று.

"சுய கட்டுப்பாடு" இது தான் ஒழுக்கத்தின் அஸ்திவாரம். ஒரு தவறை பலரும் இருக்கும் இடத்தில் செய்யாமல் இருப்பது ஒழுக்கமாகாது. யாரும் இல்லாத தனிமையில் கூட தீயவை செய்யாது இருப்பதே ஒழுக்கம்.

இன்று இந்த "சுய கட்டுப்பாடு" எழுதுபவர்களுக்கும் மிக அவசியமான ஒன்று என்று நினைக்கிறேன். இன்று வலைப்பூ எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், முகப்புத்தகம் போன்ற சமூக வலை தளங்களில் கணக்கு இல்லாதவர்களே இல்லை எனலாம்.

போலியான கணக்கு வைத்துக் கொண்டு தாறுமாறாக எழுதுபவர்கள் எத்தனையோ பேர். யாருடைய கருத்தாவது பிடிக்கவில்லை என்றால், "கன்னாபின்னா" என்று "கமெண்ட்" போடுபவர்கள் நிறைய பேர்.

எழுத்து சுதந்திரம் இருக்கிறது தான், அதற்காக ஒழுக்கம் இல்லாமல் எழுதுவது எத்தனை தவறானது? "சுய கட்டுப்பாடு" இல்லாமல் எழுதுவது எவ்வளவு ஒழுங்கீனமான செயல்?

ஒருவரைச் சாடுவது என்றாலும், புகழ்வது என்றாலும் கனிவாகச் செய்யுங்களேன்? கோபம் வரத்தான் செய்யும் சில சமயம் சிலர் மீது, அதற்காக பொதுவாக ஒருவரைப் பற்றி தரக் குறைவாக மோசமான வார்த்தைகளால் திட்டுவது, பலிப்பது, எத்தனை மோசமான செயல்?

இதனால் முதலில் நமது சுய மரியாதையை தான் இழக்க நேரிடும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழின் இனிமையை கொச்சைச் சொற்களால் கெடுக்க வேண்டாம்.
நிறைய எழுதுவோம், சமூக அவலங்கள் பற்றி எழுதுவோம், என்ன எழுதினாலும், அதில் ஒரு சுய கட்டுப்பாடு இருக்கட்டும்.

ஒழுக்கம் உயிரினும் மேலானது?! உண்மை தானே?

எழுதுவதிலும், ஒழுக்கம் அவசியமே!


-----------

கண்மணி அன்போடு!

Follow by Email

Recent Post