Latest News

வெள்ளிங்கிரி மலையேற்றம்

 

 

 
வெள்ளிங்கிரி மலை கோவையில் இருந்து 40  கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.       மலைகளின் உச்சியில் ஒரு சிவ லிங்கம் இருக்கிறது. அதைத் தரிசிக்க கால் நடையாகத்தான் மலைப் பாதையில் போக வேண்டும் இங்கே சின்ன வயதில் பள்ளி மாணவனாக இருக்கும் போது போனது. அதன் பிறகு நான் விருப்ப ஓய்வு வாங்கிய பிறகு வந்தேன். என்னுடன் இன்னும் கல்யாணம் ஆகாத சிறு வயது நண்பர் ஒருவர் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே மலை அடிவாரம் போய் சேர்ந்த நாங்கள்   ஒருஆசிரமத்தில் தங்கி விட்டோம்.

காலை எழுந்து காலை கடன் முடிந்து குளித்து அடிவாரத்தில் இருந்த கடையில் சிற்றுண்டி அருந்தி விட்டு மலையேற தயாரானோம். கொண்டு வந்த பிரயாணப் பைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து விட்டு மலைப் படிகளின் ஆரம்பத்திற்கு வந்தோம். அதில் இந்த குறிப்பிட்ட வயதானவர்களுக்கு மேல் மலையேறக் கூடாது என்று அறிவிப்புப் பலகையில் இருந்தது. கூட வந்தவருக்கு அந்த வயதுக்கு கீழேதான் . எனக்குதான் அதை தாண்டி விட்டது. அதை மனதில் வைக்காமல் ஏறத் தொடங்கிய போது மணி காலை 9

வெயில் இல்லை. மேக மூட்டமாக இருந்தது நடக்க இதமாக இருந்தது. கையில் இருந்த கைபேசி மலையில் கொஞ்ச தொலைவு வரை எடுத்தது. வழியில் படிக்கட்டுகளுக்கு அருகே மரங்களும் செடி கொடிகளில் தக்காளி, நெல்லிக்காய் எல்லாம் இருந்தன. பறித்து சாப்பிட்டுக் கொண்டே ஏறினோம். ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு போகும் போது சமன் ஆன பாதை இருந்தது.

ஏறும் போது குரங்குகள் மலை பறவைகள் எல்லாம் பார்த்தோம்,
ஏற ஏற கொஞ்சம் அங்கங்கே உட்கார்ந்து களைப்பாறி விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.படிகள் இருந்தாலும் மேலே மேலே போக போக படிகள் இல்லாத இடங்களும் வந்தன. சில இடங்களில் செங்குத்தாக இருந்தது. அங்கே பாதையை ஓட்டிப் படுத்தவாறே தவழ்ந்து தவழ்ந்து ஏறினோம். சில இடங்களில் களைப்பில் பாறை மீதே தூங்கி விட்டோம். மலையின் வேறு பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது . ஒரு இடத்தில சுனை ஒன்றை பார்த்தோம். தண்ணீர் எந்த கலப்படமும் இல்லாததால் கண்ணாடிப் படிகம் போல் அவ்வளவு துல்லியமாகவும்  குடிக்க அவ்வளவு சுவையாகவும் இருந்தது. இந்த தண்ணீரை வாழ் நாள் முழுவதும் குடிக்க முடிந்தால் பரவாயில்லை என்று தோன்றியது.


ஒரு வழியாக ஏறி உச்சியை அடைந்து விட்டோம். ஏறி  முடிக்கும் போது மாலை மணி 3 . மேல் இருந்த சிவ லிங்கம் ஒரு மேடையில் இருந்ததைப் பார்த்தோம். அதற்க்கு கொஞ்சம் பக்கத்திலேயே ஒரு அறை மலை ஏறியவர்கள் தங்க என்று இருந்தது. அதற்குள் போய் சேர்ந்ததும் மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் குளிர் ஏற்படத் தொடங்கியது.அறைக்குள், வெளியே எங்கள் இரண்டு பேரைத் தவிர ஒருவருமே இல்லை! அறைக்குள் சமையல் செய்ய பாத்திரங்கள் , அரிசி,பருப்பு ,  மஞ்சள், மிளகாய், சுக்குக் காப்பி பொடி, சர்க்கரை, ஒரு அடுப்பு, தீ மூட்ட விறகு கெரசின் எல்லாம் இருந்தது.

கூட வந்த நண்பர் சர்க்கரை பொங்கல் செய்தார், சாப்பிட்டால் தேவாமிர்தம் போல இருந்தது. கொஞ்சம் அடுப்பருகில் இருந்து குளிர் காய்ந்தோம். நல்ல களைப்பில் அங்கிருந்த கிதான் சாக்குப் பைகளை விரித்து அதையே போர்வையாக்கி கொண்டு படுத்தோம். நல்ல தூக்கம். இருந்தாலும் இடையில் எழுந்து என்னிடம் இருந்த பாம்பு விஷ  முறிவுப் பொடியை சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்து விட்டேன். காலையில் எழுந்தால் நண்பர் அவரிடம் ஒரு பாம்பு வந்ததாகவும் அதை ஷ் என்றதும் போய் விட்டதாகவும் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் நான் பாம்பு விஷ முறிவு பொடி சாப்பிட்டது என் நினைவுக்கு வந்தது.என்னிடம் ஏனோ அது வரவில்லை

முந்தைய இரவு செய்த சர்க்கரைப் பொங்கலை மறுபடி சாப்பிட்டு விட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். மழையில்லை. ஏறியதை விட சீக்கிரமே விடு விடு என்று இறங்கி விட்டோம். கீழே வருவதற்கு கொஞ்சம் தள்ளி ஒரு சாமியார் அவர் இருந்த இடத்திலேயே காஞ்சி வடித்து ஊறுகாயுடன் கொடுத்தார். அதையும் ருசித்து சாப்பிட்டு விட்டு கீழே இறங்கி அடிவராத்தைத் தொட்டோம். இறங்கி முடிக்கும் போது மாலை மணி 3.கோவில் பூசாரியிடம் பிரயாணப் பைகளை வாங்கிக் கொண்டு அடிவாரத்தில் இருந்த கடையில் கொசு பூச்சிகள் விரட்டும் கட்டை  எல்லாம் வாங்கிக் கொண்டு வெள்ளிங்கிரி மலையிடம் இருந்து விடை பெற்றோம்

என் வயதில் ஏறக் கூடாது என்றதையும் தாண்டி திடகாத்திரமாக ஏறி விட்டு வந்தது தெம்பாக இருந்தது. இந்த மலையேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் மலையேறுபவர்கள் குச்சி ஒன்றை பயன் படுத்துவார்கள். நாங்கள் வெறும் கையுடன் சென்றோம். திரும்பினோம்
Follow by Email

Recent Post