படித்ததில் பிடித்தது - கவலையை எதிர் கொள்வது எப்படி???


படித்ததில் பிடித்தது...
   
கவலையை   எதிர்கொள்வது   எப்படி?
(வேதாத்திரி மகிரிஷி அவர்கள் பதிப்பிலிருந்து)

     ஒருவரது  கவலை  அடுத்தவருக்கு கவலையாக தெரிவது  இல்லை. இது  ஏன்? உண்மையில்  அது கவலையாயின் அடுத்தவருக்கும்,ஏன்  எல்லோருக்குமல்லவா அது  கவலையாக  இருக்க  வேண்டும்.  அவ்வளவு  ஏன்?  கவலை  எவ்வளவு   காலம்   ஒருவருக்கு  நீடிக்கிறது? சென்ற வருடம்  ஒரு  சிக்கலைச்  சந்தித்தபோது  பட்ட  கவலை, அந்தச்  சிக்கல்  இன்னும்   அப்படியே  இருக்கும்போது   இன்று  ஏன்  அதற்காகக்  கவலைப்படுவதில்லை? இப்போது  கவலையற்றிருப்பது  போல்,ஏன் அப்போதே அந்தக்  கவலைப்படாமல்  இருந்திருக்க  கூடாது?  அப்படி மட்டும்  இருந்துவிட்டால்  எவ்வளவு  நன்மையாக  இருந்திருக்கும்.எவ்வளவு  நட்டத்தை  தவிர்த்திருக்கலாம்.

                                           Sad_face : Closeup portrait of depressed teenager girl.

சின்ன  சிக்கலைக்  கூடக் கவலை  என்னும்  பூதக்கண்ணாடியால்  பார்த்து  ஈ, கொசுவைக்  கூட  யானையாக்கிக்   கொள்வார்கள்  சிலர். இப்படி  நாமாகக்  கவலையை  உருவாக்கிக்  கொள்ளலாம்? ஒரு  பெரிய  கவலை  தானாகத்  தீர்ந்தாலோ  அல்லது  நாமாகத்  தீர்த்தாலோ  பெரிய  சிக்கல்  இருந்த  வரை நாம்  பொருட்படுத்தாத  வேறு  ஒரு  சிறிய  சிக்கலை  எடுத்துக்  கொண்டு, நாம்  கவலைப்  படுவதும்  உண்டு.கவலையே  ஒரு  பழக்கமாகவும்,ஒரு  தேவையாகவும், ஒரு  சுவையாகவும்  ஆகிவிட்ட  ஒரு  பரிதாபமான  நிலையே  இதற்குக்  காரணம்.

ஏதோ  பிறந்து  விட்டோம். ஆனால் இப்படித்தான்  வாழ  வேண்டுமெனத்  தெரிந்து  வாழ வேண்டும்; தைரியமாக  வாழ  வேண்டும். சிக்கல்கள்  வெள்ளம்  போல்  வந்தாலும்  அறிவெனும்  தோணியில்  ஏறி அவ்வெள்ளத்தில்  மிதக்க  வேண்டும்; மூழ்கிவிடக்கூடாது.

      ''வெள்ளத்  தனைய  இடும்பை  அறிவுடையான
உள்ளத்தின்  உள்ளக்  கெடும்''
                                                                  (குறள்-622)

என்கிறார் வள்ளுவர்.அத்தகைய அறிவுடைமையை  நாம்  பெற்றாக  வேண்டும். கவலை   வேறு,   பொறுப்புணர்ச்சி  வேறு, கவலைப்படக்கூடாது  என்பதற்காக, வந்து  விட்ட  சிக்கலை  மறுத்துவிடலாகாது. சிக்கலை  ஏற்கத்  தான்  வேண்டும்; எதிர்கொள்ளத்தான் வேண்டும; ஆராயவேண்டும். அதை  விடுத்து;''அழுவதிலோ'',''இனி  என்ன  செய்யப்  போகிறேன்?''என்று  ஏங்குவதிலோ  என்ன  பயன்?  அன்றாட  வாழ்க்கையிலேயே  இதுபோல்   கவலைப்பட்டதனால்   சிக்கலைத்   தீர்க்க   முடிந்ததா?  இல்லையே, கவலைப்படுவதால்  சிக்கலின்   தன்மையை  கணிக்க  முடியாமல்  போகும். சிக்கல்  பெரிதாகத்  தோன்றும். சிக்கலை  அதன் நுட்பம்  தெரிந்து    அவிழ்க்கும்  திறமை  குறைந்து  போகும்.


சினத்தினால்  உயிராற்றல்  விரயமாகும்   என்றும், நோய்கள்  பலவும்  வரும்  என்றும்  முன்னர்  பார்த்தோமல்லவா? அவ்வகையில்  இந்தக்  கவலையும்  சினத்திற்கு  இளைத்ததன்று.கவலையினால்  உயிராற்றல்  வேகமான  எண்ண   அலைகளாக   அழிந்து   விரயமாகிறது. கவலையினால்   இரத்த  அழுத்தம்  மற்றும்  அசீரணம், குடல்புண், தலைவலி, சுவாச  நோய்கள்  போன்றவை   வருகின்றன; மிகுகின்றன. இந்தக் கவலை தேவைதானா?

Sad_face : beauty girl cry


'கவலை' என்ற  சொல்லுக்கு  'ஏற்றம்' (தண்ணீர்  இறைக்கும்  சாதனம்) என்று ஒரு   பொருளும்  உண்டு. எனவே நாம்  இப்போது  ஆராயும்  கவலையானது உவமை   ஆகு  பெயர்   எனலாம். மற்றவகை  ஏற்றத்தைவிடக்  கவலை  விரைவாகத்   தண்ணீரைக்   கிணற்றிலிருந்து  வெளியேற்றிவிடும். அதே  போல் இந்த மனக்கவலையும் வெகு வேகத்தில்  உயிராற்றலை   உடலிலிருந்து     வெளியேற்றி   விடும்.


கருத்தொடராக வரும்   தீவினைகளான பாவப்பதிவுகள் கூட்டுவிக்கும்   சிக்கல்களாயினும்,தன்னை உணர்ந்த தெளிவினால் நீங்கிவிடும்   ஞானியர்க்கு    முன்வினைப்   பயமுமில்லை, தவறிழைத்துச்  சிக்கல்களை   உருவாக்கிக் கொள்ளும் பின்வினை பயமும் இல்லை.இதைத் தான்  திருமூலர்,

        ''தன்னை  அறிந்த  தத்துவ     ஞானிகள்
          முன்னை   வினையின்   முடிச்சை   அவிழ்ப்பர்
            பின்னை  வினையைப்   பிடித்துப்   பிசைவர்
             சென்னியில்  வைத்த   சிவனருளாலே''

என்றார்.இனி,தன்னாலோ,பிறராலோ விளையும் சிக்கலை என்ன    செய்வதன்று, எப்படி எதிர்கொள்வதென்று  ஆராய்வோம். சிக்கல்களைக்  கொண்டு மிரள்வது கூடாது.கவலைப்படுவதாலும்  ஆவதொன்றில்லை.கவலையினால்   எல்லா  வகையிலும்   இன்னல்தான். இதை  முதலில்   தெரிந்து   கொள்கிறோம்.

இப்போது கவலையாக  உருக்கொண்டிருக்கும்   இந்தச்    சிக்கல்   ஏன்   வந்த்து?யார்   காரணம்? இந்தச்  சிக்கலின்   தன்மை  என்ன?  இந்தச் சிக்கலினால் நமக்கு  என்ன  துன்பம்  வர   இருக்கிறது ?  என்பதை   ஆராயந்தாக   வேண்டும்.

எனவே, கவலை கொண்டு நம் உடல் நலனை கெடுத்துக்கொள்வதை விட, அதை எளிதில் கையாளுவதில் தான் நம் திறன் மறைந்து கிடக்கிறது...

பிரச்சனைகளை கண்டு பயந்து கொள்வதை விட, அதை தீர்க்க முற்படுவதே நம் மனத்திற்கும், உடல் நலத்திற்கும் நல்லது...

நன்றி,

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா... 

3 comments:

படித்ததுண்டு...

பலர் அறிய பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

நல்ல தகவல் .... கவலையை கண்டு அஞ்சவேண்டாம் ......பகிர்ந்தமைக்கு நன்றி.

தங்கள் பெயரைப் போன்றே பகிர்வுகவும் இனிமையாஹ உள்ளது. தொடரவும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More