உணவே மருந்து- நெல்லிக்காய்.


உணவே மருந்து - நெல்லிக்காய்.

    உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்னோர்கள்.  அதன் மூலம் சக்தியையும், உயிர் ஆற்றலையும் பெற்றனர். ஆரோக்கியமான உடலையும் நீண்ட ஆயுளையும் அனுபவத்தில் பெற்றவர்கள். எனவேதான்


 ''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்று சொல்லிச் சென்றனர். ஆனால் கால மாற்றத்தால், நாகரீக வளர்ச்சியால் இயற்கை உணவை மறக்க வைத்தது நம் இயந்திர வாழ்க்கை. வறுத்த, பொரித்த உணவுகள், பீட்ஸா, பர்கர் என உணவுடன் நோயையும் விலை கொடுத்து நாம் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
  நோய் வருமுன் தடுக்கவும், வந்தபின் நோயை போக்கவும் பயன்படும் பொருட்கள் இயற்கையிலேயே நம்மைச் சுற்றி நிறைய உள்ளன. நாம் மறந்துவிட்ட இயற்கை உணவை நினைவூட்டவே இந்த பதிவு.

      முதலில் மிகவும் எளிய கனி. பார்த்த உடன் நாவில் நீர் ஊறவைக்கும் கனி. இளமையை தரும் கனி. நீரழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படும் கனி. ஒரு ஆப்பிள் பழத்திற்கு இணையான சத்துக்களைக் கொண்ட கனி. ஏழைகளின் ஆப்பிள் என செல்லமாக அழைக்கப்படும்
நெல்லிக்கனியின் மருத்துவ பயன்களைப் பார்க்கலாம். வெவ்வேறு மொழிகளில் நெல்லிக்கனிக்கு வழங்கப்படும் பெயர்கள்.

தாவரவியல் பெயர் -             எம்பிளிகாஅபியன்லிஸ்

 தமிழ்                   -நெல்லிக்காய்

 சமஸ்கிருதம் -அமலிகா

 ஹிந்தி                -ஆம்லா

  குஜராத்தி          -ஆம்லா

  மலையாளம்   -நெல்லிக்கா 
                                      
 கன்னடம்            -நெல்லி


நெல்லிக்காயின் சிறப்பு குணம்;

   விட்டமின் 'சி' சத்து அதிக அளவில் உள்ளது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கும், கண்களை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் லெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. எனவே இதனை வெயிலில் காயவைத்தாலும் இதிலுள்ள விட்டமின் சத்து குறையாது. மாறாகக் கூடவே செய்யும்.  நம் உடலில் தினந்தோறும் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் அத்தியாவசியமான காரணிகளுடன் இணைந்து நோயைத்தரக் கூடிய ஆக்சிஜன் அயனிகள் ஃப்ரீரேடிக்கல்ஸ் எனப்படுகின்றன.இவை உடலில் தேங்கினால் மாரடைப்பைஉருவாக்கும் தன்மை உடையவை. மேலும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும்ஆற்றல் படைத்தவை.முதுமைக்கும் சில நேரங்களில் புற்று நோய்க்கும் வழிவகுக்கிறது. இந்த ஃப்ரீ ரேடிகல்ஸை  உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு.
                                                     

மருத்துவ  பயன்கள்;

1.தலைமுடி கருத்து நீண்டு வளர உதவுகிறது.
                           
2.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

3.கல்லீரல் வேலை செய்ய உதவுகிறது.

4.ஞாபக சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.

5.இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

6.நகம், பல் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.

7.முகச்சுருக்கத்தைக் குறைத்து இளமைத்தோற்றத்தைத் தருகிறது.

8.இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக்

குறைக்கிறது. இதன் மூலம் நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

                                  இலக்கியத் தொடர்பு;

     சங்ககாலத் தமிழ் புலவர் ஔவையாருக்கு ஒரு முறை நீண்டநாள் உயிர்வாழும் சிறப்புடைய நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அதன் சிறப்பை அறிந்து.அதனைத் தான் உண்ணாமல் மன்னன் அதியமான் நெடுநாள் வாழ வேண்டி மன்ன்னுக்கு அக்கனியைக் கொடுத்த்தாகத் தமிழ் இலக்கியம் கூறுகிறது.

             ஆதிசங்கரர்  ஒரு நாள் பிச்சை பிச்சை கேட்டு சென்றபோது ஒரு ஏழைத்தாய் அவருக்குக் கொடுக்கத் தன்னிடம் உணவு எதுவும் இல்லையே என்று வருந்தினார். அப்போது வீட்டில் ஒரு நெல்லிக்கனி இருப்பது நினைவிற்கு வர அதனை ஆதிசங்கரருக்குக் கொடுத்தார். ஆதிசங்கரரும் அந்த ஏழைப்பெண்ணுக்கு இரங்கி மகாலஷ்மியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாட, ஏழைத்தாயின் வீட்டில் தங்கமழை பொழிந்த்தாகக் கூறப்படுகிறது. 

                      இத்தகைய சிறப்புகளுக்காகவே நெல்லிக்கனி அமிர்தக்கனி எனப்போற்றப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும். நமக்குத் தேவையான விட்டமின் 'சி' சத்து கிடைத்துவிடும். எனவே நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் பச்சையாகவும், கிடைக்காத காலத்தில் காயவைத்து உலர்த்திய காயையும் சாப்பிட்டு சத்துக்களைப் பெறலாம்.

                        ''உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
                          உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே''

   என்ற திருமூலரின் உண்மை மொழியைப் பின்பற்றுவோம்;நீண்ட ஆரோக்கிய வாழ்வை  வாழ்வோம். மேலும் அடுத்த வாரம் வாழைப்பூவின் மகத்துவத்தைப் பற்றி பார்க்கலாம்.


அன்புடன்
நாஞ்சில் மதி
3 comments:

நெல்லிக்காயின் சிறப்புகள் - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

நன்றி...

இத்தகைய சிறப்புகளுக்காகவே நெல்லிக்கனி அமிர்தக்கனி எனப்போற்றப்படுகிறது

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More