உணவைத் தேடி..


விளைநிலங்களை காப்பாற்றுங்கள்
                              
உணவு தேவைக்காக காடுகளை வெட்டி சமன்செய்து உழவுத்தொழில் செய்தார்கள் அன்று. இன்றோ அதற்கு தலைக்கீழாகி விட்டது உணவுத்தேவையைப் பற்றி பெரும்பாலான மக்களுக்கோ அரசாங்கத்திற்கோ கவலை இருப்பதாகத் தெரியவில்லை. கழனிக்காடுகளெல்லாம் பச்சைபசேலென்று கண்களைக் கவர்ந்த காலமெல்லாம் கனவாகிப் போய்விட்டது. எதிர்காலத்தை நினைத்தால்! கலக்கமாக இருக்கிறது. அதைவிட எதிர்கால நம் சந்ததிகளின் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ‘அரிசி எந்த மரத்தில் விளைகிறது’ என்று அவர்கள் கேட்கும் நிலை வந்தால் என்னவாகும்?

தண்ணீர் இல்லாமல் காய்ந்துப் போன நமது தஞ்சை நெல்வயல்களின் நிலையை எண்ணிப்பார்க்கும்போது நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்றே புரியவில்லை. பாடப்புத்தகத்தில் நாட்டில் ஒற்றுமையை வளர்ப்போம் என்று வலியுறுத்திவிட்டு, ஒற்றுமை என்றால் என்ன என்பதையே மறந்து அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் காய்ந்துப்போன நெற்பயிர்களின் நிலையைப்பார்த்து விவசாயிகள் தற்கொலையை தீர்வாக எடுத்துக் கொண்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

நம்நாடு விவசாயத்தை நம்பி இருக்கும் நாடு. இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் நாட்டில் இயற்கை வளத்தை அழித்து, கழனிக்காடுகளை அழித்து காண்கிரீட் பூங்காவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏரிகளெல்லாம் மேடாக மாறி வீடுகளாகி விட்டன. ஆற்றங்கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு சிறிய ஓடைகளாகிவிட்டன. எதற்காக இந்த மாற்றம். எதை நோக்கி இந்த ஓட்டம். மாற்றம்தான் மாறக்கூடியது என்கிறார்கள். இந்த மாற்றத்தினால் என்ன ஏற்றம் ஏற்படும் என்று விளங்கவில்லை.

இப்போதாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும். உடனடியாக தண்ணீருக்கான தீர்வை நாம் ஏற்படுத்தியாக வேண்டும். முக்கியமாக மழைநீரை பெருமளவில் தேக்கி வைப்பதே முதலாவது தீர்வாக இருக்கும்.அண்டை மாநிலத்தை எதிர்ப்பார்த்திருக்காமல் மீதம் இருக்கும் ஏரி குளங்களை மீட்டெடுத்து அகலப்படுத்தி ஆழப்படுத்தி மழை காலத்திற்கு முன்னதாக தயாராக இருக்கலாம். இன்னும் வேறு ஏதேனும் தண்ணீர் சேமிக்கும் வழிகள் இருக்குமென்றால் அதைப் பற்றியும் ஆராயலாம்.
முக்கியமாக விவசாயம் பெருமளவில் குறைந்து விளைநிலங்களை குடியிருப்புகளாக மாற்ற அவற்றை கூவிக்கூவி விற்பனை செய்வதைத் தடுத்து விவசாயிகள் அவர்கள் நிலத்தில் சிறந்த முறையில் விவசாயம் செய்வதற்கு உகந்த உதவிகளை அரசு முன்னின்று செய்தால் உணவு உற்பத்தி பெருகும். மாறிவரும் இயற்கைசூழல் காப்பாற்றப்படும்.

மக்களுக்கு இயற்கை பாதுகாப்பில் முக்கிய பங்கு இருக்கிறது. நிலங்களை விற்று உடனடித் தேவைகளைத் தீர்த்துக் கொள்வது சிறப்பானதாகாது. பண்பட்ட விளைநிலங்கள் கான்கிரீட்டுகளாக மாறிப் போவதால் என்ன நன்மை இருக்கிறது. நாட்டில் உழவுக்குப் பயன்படாத களர்நிலங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அந்த நிலங்கள் குடியிருப்புகள் அமைப்பதற்கும் தொழிற்சாலைகள் கட்டுவதற்கும் ஏற்ற இடங்களாக இருக்கும். விளைநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். நம் நாட்டின் உணவு உற்பத்தி பெருக வேண்டும்.  -    மோகனாஸ்ரீ.                  


1 comments:

விவசாயம் செய்ய வேண்டாமென அரசாங்கமே சொல்லும்போது நீங்கள் சொல்வதுபற்றி யோசிக்கவே முடியவில்லையே?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More