Latest News

நாளைய எதிர்காலம் தயாராகி வருகிறது !! - குழந்தைகளுடன் ஒரு சந்திப்பு



      இந்த பொங்கலை திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் எமது சக தொழிற்களம் நண்பர்களுடன் கொண்டாட சென்றிருந்தோம்.

      மன்னிக்கவும் அவர்களை ஆதரவற்றோர் என்று சொன்னதற்கு. அங்காங்கே இன்னும் மனிதத்துவம் வாழ்ந்து தான் வருகிறது. கடந்த ஆறு வருடங்களாக தனது சொந்த பணத்தை மிச்சப்படுத்தி அந்த இருபத்தி ஆறு பிஞ்சுகளையும் ஒரு குறையும் இல்லாமல் பார்த்து வருகிறார் நண்பர் சரவணனும் அவரது தந்தையும்.



      முதலில் நாங்கள் உள்ளே செல்லும் போதே ஒரு ஒரு குழந்தையும் நம் அருகில் அவர்களாகவே வந்து "நமஸ்காரம்" என்று இரு கரங்களையும் கூப்பி சொன்னார்கள். அந்த நிமிடமே எம்முள் ஏதோ ஒரு வித தயக்கமும், அவமானமும் வந்துவிட்டது. ஆம், அவர்களுக்கு தெரிந்த அந்த வணக்கம் சொல்லி வரவேற்கும் முறை எத்தனை பேர் இன்று செய்கிறார்கள்? உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தாலும் இன்னும் பல வீடுகளில் டீ.வி. ரிமோட்டை விட்டுக்கொடுக்காத கரங்கள் தானே அதிகமாக இருக்கிறது இன்றைய மாடர்ன் சமூகத்தில்?

   கொண்டுபோயிருந்த  இனிப்புகளை கொடுத்தோம். அவர்களாகவே வரிசையில் சென்று அமர்ந்து பொறுமையாக சாப்பிட்டார்கள்.

அவர்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. எந்த முகத்திலும் அங்கே சோர்வோ, ஏக்கமோ தெரியவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்கு வெளியீல் இருந்தோ அல்லது அவர்களாகவோ பெரிய வசதிகளை செய்துகொள்ளும் சூழ்நிலையும் இல்லை. அப்படி இருக்க அவர்களுக்குள் எப்படி இவ்வளவு அமைதி? எப்படி இவ்வளவு நிறைவு?



நண்பர் சரவணனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது பல தகவல்களையும், உண்மைகளையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

"இயற்கையுடன் வாழும்  வாழ்கையே மன நிறைவை தரும்" என்பதே  இவர்களின் எண்ணம்.

போதிய இட வசதி இல்லை என்றாலும் இவர் யாரிடமும் இதுக்காக  நிதி திரட்ட  போய் நிற்பது இல்லை. தானாக அறிந்து கொண்டு உதவ முன்வந்தால் மறுப்பதும் இல்லை.

தமிழ், மலையாளம், இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தை வேதங்களை சொல்ல குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறார்கள்.

நமக்கு கொஞ்சம் நெருடலாக பாட்டாலும், அவர் சொல்லும் காரணமும் கொஞ்சம் சரியானதாகத் தான் படுகிறது.

தமிழன் தமிழன் என்று கூறிக்கொண்டு அரசியல் செய்யும் பலர் தமிழுக்கென்று எதுவும் செய்யவில்லையே என்று ஆதங்கம் காட்டினார்.

சில அரசு அலுவலர்கள் கூட இலஞ்சம் எதிர்பார்பதை  மன வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.



அனைத்தையும் தாண்டி நம்முடன் அவர் தன் குழந்தைகளுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இங்குள்ள இருபத்தி ஆறு குழந்தைகளில் பெரும்பாலனோர் காவல் நிலையங்களில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டவர்களே!!

சில குழந்தைகளின் பெற்றோர்களே தங்களால் முடியவில்லை என்று வருமையின் காரணாமாக இங்கே விட்டு விட்டனராம். அதிலும் குடியினால் கெட்ட குடும்பங்களே அதிகம் என்று அறியாமையின் விபரீதத்தின் விளைவுகளை சுட்டிக்காட்டினார்.



(அவருடன் பேசியதை தனியாய் இன்னொரு முறை பதிவிடுகிறேன். தனிப்பட்ட முறையிலும், சமூக வாழ்க்கையிலும் தமிழர்களாய் நாம் தவறவிட்ட தருணங்களை அந்த நிமிடங்களில் பகிர்கிறேன் )

குழந்தைகளுடன் இந்த பொங்கலை மன நிறைவுடன் கழித்தோம்.

Follow by Email

Recent Post