நாட்டிலேயே ஏழை முதல்வர்!!!!

அகர்தலா: மூன்றாவது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்துள்ள திரிபுரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் மாணிக் சர்க்காரின் மொத்த சொத்து ரூ. 13,900 மட்டுமே.
கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் முதல்வரான இவர் அதன் பின்னர் இறங்கவே இல்லை. அடு்த்தடுத்த தேர்தலில் வென்று வரும் இவருக்கு சொந்த நிலமோ, வீடோ, காரோ இல்லை.
59 வயதான சர்க்காருக்கு முதல்வர் என்ற முறையில் மாத ஊதியம் ரூ. 9,200ம், அலவன்சாக ரூ. 1,200 கிடைக்கிறது. அதை அப்படியே கட்சிக்கு தந்துவிடுகிறார்.
இவரது மனைவி பஞ்சலி பட்டாச்சார்ஜி மத்திய சமூக நலத்துறையில் பணியாற்றுகிறார். இவரது வருமானத்தில் தான் முதலமைச்சரின் குடும்பமே ஓடுகிறது.
வேலைக்குச் செல்ல பஞ்சலி, அரசு காரைக் கூட பயன்படுத்துவதில்லை. ரிக்ஷாவில் தான் போய் வருகிறார்.
மாணிக் சர்க்கார் மட்டுமே அரசின் காரை பயன்படுத்துவாராம். குடும்பத்தினர் யாரும் அதன் பக்கமே வருவதில்லை. ஒரே நிகழ்ச்சிக்குப் போனாலும் மனைவியை தனது காரில் ஏற்ற மாட்டார். அவரை ஆட்டோவில் வரச் சொல்லிவிடுவாராம் அரசு சொத்தை மிஸ்யூஸ் செய்யக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் சர்க்கார்.
மாணிக் சர்க்காரின் அரசியல் ஆசான் முன்னாள் திரிபுரா முதல்வரான நிரூபன் சக்கரபர்த்தி. நிரூபனும் மிக மிக எளிமைக்குப் பேர் போனவர் தான். முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின் ஒரே ஒரு டிரங்க் பெட்டியோடு முதல்வர் இல்லத்தை காலி செய்து கொண்டு கிளம்பியவர் நிரூபன்.
அவரிடம் அந்தப் பெட்டியில் இருந்த புத்தகங்கள், உடைகள் தவிர வேறு எந்த சொத்தும் இருக்கவில்லை. அவரது வழியில் வந்தவரான மாணிக் சர்க்காரும் ஆசானின் வழியிலேயே நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
நம் ஊரில் பதவிக்கு வந்த ஒரே வருடத்தில் கவுன்சிலர்கள் கூட ஸ்கார்பியோ காரில் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு வலம் வரும் கண்கொள்ளாக் காட்சி நினைவுக்கு வருகிறதா?.
நொந்து கொள்ளுங்கள்.. வேறு எதுவும் செய்ய முடியாது...


நன்றி : தோழர் ந. தீபக்குமார்
படங்கள் : கூகுள் வலைதளம்

1 comments:

ஆம், நொந்து கொள்வதை தவிர நம்மால் வேறு ஒன்றும் செய்ய முடியாது தான் தோழா!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More