Latest News

முல்லைபுரத்து மனிதர்கள்!!!

White Man Falling என்ற நாவலை வாசித்தேன். Mike Stock என்ற பிரிட்டீஷ் இளம் எழுத்தாளர் எழுதிய இந்த நாவல் தமிழ் குடும்பத்தின் கதையை விவரிக்கிறது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ்வாழ்க்கையைப்  பற்றிய நாவல் என்பதால் படு சுவாரஸ்யமாக இருக்கிறது, 2006ல் வெளியான இந்நாவலுக்கு சிறந்த முதல்நாவலுக்கான Goss Award  பெற்றிருக்கிறார் மைக் ஸ்டாக்ஸ்
இந்திய ஆங்கில நாவல்களின் கதை சொல்லும் முறையை ஒத்த கதைசொல்லலே மைக் ஸ்டாகிஸிடம் உள்ளது, ஆனால் இந்திய ஆங்கில எழுத்தாளர் பலரிடமும் காணமுடியாத இயல்பான நகைச்சுவையும் கிண்டலும் இவரிடம் அற்புதமாக கைகூடியுள்ளது,
இந்த நாவலை சிறந்த நாவல் என்று என்னால் வகைப்படுத்த முடியாது, ஆனால் சுவாரஸ்யமான நாவல் என்று சொல்வேன்
நாவல் முழுவதும் தமிழ் வாழ்க்கையின் பல்வேறு இரட்டை நிலைகளை, பொய்யான கலாச்சார மூடுதிரைகளை பகடி செய்து தள்ளுகிறார் மைக் ஸ்டாக், அசோகமித்ரன் கதைகளில் காணப்படுவது போன்ற எள்ளலும், மத்திய தர  வாழ்க்கையின் பிரச்சனைகளை விவரிக்கும் நுட்பமும் மைக் ஸ்டாகிடம் உள்ளது, ஆனால் அசோகமித்ரனின் எழுத்துகளில் காணப்படும் உள்ளார்ந்த வலியும் தனிமையும் இவரிடமில்லை,  தமிழ்வாழ்க்கையை மிக நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறார் என்பது மைக்கின் தனிப்பலம்
முல்லைப்புரம் என்ற ஊரில் வசிக்கும் ஒய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனுக்கு ஜோதி, புஷ்பா, கமலா, சுகன்யா அனிதா லீலா என ஆறு பெண்பிள்ளைகள், ஆண் வாரிசு இல்லையே என்று ஆதங்கப்படுகிறார், அவரது மூத்தமகள் ஜோதிக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு மாப்பிள்ளை தேடுகிறார், சொந்த சாதியில் படித்த, தங்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கிற, அதிகம் வரதட்சணை வாங்காத , குடிக்காத, வெள்ளை நிறமான மாப்பிள்ளை வேண்டும் என்று குடும்பமே தேடுகிறது,
அப்படி தேடும் போது மனைவியின் உறவினர்கள், தெரிந்த டீக்கடை காரரின் ஒன்றுவிட்ட சித்தப்பா வகையில் சொந்தம், தூரத்து உறவினரின் நெருங்கிய நண்பரின் மாமா பையன் என்று தேடும் விதம் பற்றி சரியாக நையாண்டி செய்திருக்கிறார்
சுவாமிநாதனின் பணிக்காலத்தில் ஒரு கைதி சிறையில் அடிபட்டு இறந்துபோய்விடுகிறான், அது தன்னுடைய தவறு என்று கருதி பதற்றம் அடைந்த அவருக்கு பக்கவாதம் வந்துவிடுகிறது, அதனால் பேச்சுவராமல் போனதுடன் அதிகம் நடமாட முடியாமல் வீட்டிலே சக்கர நாற்காலியில் முடங்கி கிடக்கிறார், இது அவரது போதாத காலம் என்று மனைவி ஆறுதல் சொல்கிறாள், வீட்டிற்குள்ளாக  இருந்தபடியே மதுரை செல்லும் சாலையை வேடிக்கை பார்ப்பதும், மகள்களின் திறமைகளை நினைத்து கண்ணீர்விடுவதுமாக பொறுப்பான தந்தையாக நடந்து கொள்கிறார் சாமிநாதன்
வீட்டிற்குள் பெண்கள் அறைகுறையாக பரதநாட்டியம் ஆடுவது, சினிமா பாடல்களைக் கூடவே பாடுவது, மல்லிகைப் பூ சூடிக்கொள்வது,  இளம்பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்பதில் ஆர்வம் காட்டுவது, கல்கி நாவல்கள் படிப்பது, திருக்குறளைச் சொல்லி சொல்லி அம்மா பெண்களை ஒழுக்கமாக வளர்ப்பது, ஒய்வு பெற்ற நிலையில் தமிழ் மீது தாளாத ஆர்வம் கொண்டு எட்டுதொகை அகநானூறு என்று தேடி படிக்கும் இன்ஸ்பெக்டரின் இலக்கிய ஈடுபாடு, தினமும் போலீஸ்காரர்கள் சாலையோரம் இயல்பாக ஒண்ணுக்கு இருப்பது, சாலையோரமுள்ள திறந்துகிடக்கும் சாக்கடை குழியில் ஆட்கள் மாட்டிக் கொள்வது, குடும்பமே தன்பிள்ளைகளின் திறமைகளை போற்றிப் பாடுவது, ஒவ்வொரு ஊரும் தன் வரலாற்றுப் பெருமைகளை வாய் ஒயாமல் சொல்லிக் கொண்டிருப்பது ,வெள்ளிகிழமை தவறாமல் பெண்கள் கோவிலுக்கு போவது, முப்பது நாட்களில் பெண்களை கவர்வது எப்படி என புத்தகம் படிக்கும் ஆள், என்று தமிழ்வாழ்வின் முக்கியக் கூறுகள் அத்தனையும் இந்த நாவலில் பகடி செய்யப்பட்டிருக்கின்றன
நகரின் முக்கியப் புள்ளியான துரைச்சாமி தேவநாம்பேட்டை ராஜேந்திரன் என்ற DDR நடத்தும் ஹோட்டல் அம்புலி முன்பாக ஒரு வெள்ளைகாரன் வானில் இருந்து விழுந்து இறந்து போய்விடுகிறான், தன் கண்முன் நடந்த இந்த சாவை சாமிநாதன் ஆராயத் துவங்குகிறார், அது ஏற்படுத்தும் அகச்சிக்கல்கள், அபத்தமான முடிவுகள் சாமிநாதனை கடவுளின் நேரடி அருள் கொண்ட சுவாமிஜி ஆக்கிவிடுகிறது, அதன்பிறகு அவரது வாழ்வின் திசை எப்படியெல்லாம் மாறிவிடுகிறது என்பதை நாவல் விரிகிறது
நாவலின் மையக்கதை எளிமையான ஒன்று, ஆனால் அதைச் சுற்றி மைக் உருவாக்கியுள்ள பின்புலம் தான் நாவலின் சுவாரஸ்யம், போகிற போக்கில் எல்லாவற்றையும் கேலியும் கிண்டலும் செய்து அசத்துகிறார் மைக் ஸ்டாக்ஸ்,
மதமும், சினிமாவும், அரசியலும், கலாச்சாரத்தின் பெயரால் நடைபெறும் போலியான கட்டுபாடுகளும், கண்காணிப்பும்,  தமிழ்குடும்பங்களை எப்படியெல்லாம் ஆக்ரமித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும் இந்தநாவல் , இன்னொரு பக்கம் தமிழ்வாழ்க்கையின் மாற்றங்களை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அடையாளப்படுத்துகிறது,
தமிழில் இதை அப்படியே சினிமாவாக எடுக்க முடியும் என்பது போல காட்சிகள் கண்முன்னே விரிகின்றன, திடீரென நம் வீட்டை வெளியில் இருந்துவேடிக்கை பார்ப்பது போன்ற மனநிலை நாவலை வாசிக்கையில் நேர்கிறது, அது தான் இந்நாவலின் வெற்றி.
White Man Falling-  Mike Stocks – Pages: 302  ALMA BOOKS LTD . 2006



நன்றி : எஸ்  இராமகிருஷ்ணன் (எழுத்தாளர் )

Follow by Email

Recent Post