உணவே விஷம் ஆகலாமா?

வசரம் நம் வயிற்றை இறுக்கத் தொடங்கிவிட்டது. ஆம், ஓட்டமும் வேகமுமான நம் வாழ்க்கை கண்டதையும் அள்ளிப்போடும் குப்பையைப்போல் நம் வயிற்றை மாற்றிவிட்டது. சமைக்கவோ, சாப்பிடவோ நேரமின்றி, கடைகளில் விற்கும் பேக்டு உணவுகளை சாப்பிடுவது இப்போது சகஜமாகிவிட்டது. பேக்டு உணவுகளால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி. 
'ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் இவை பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் இவற்றைச் சுற்றிவைக்கப் பயன்படும் பாலிதீன் தாள்களால் ஏற்படும் தீய விளைவுகளைத் தெரிந்துகொள்வது அவசியம். முன்பு எல்லாம் வாழை இலைகளையும், செய்தித்தாள் பேப்பர்களையும் மட்டுமே உணவுகளைக் கட்டிக்கொடுப்பதற்குப் பயன்படுத்தினார்கள். பிறகு அலுமினியம் ஃபாயில் வந்தது. தற்போது கடினமான பிளாஸ்டிக் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. பாலிதீன், பாலிப்ரோபைலீன் (polypropylene)போன்றவை கொண்டு பிளாஸ்டிக் உருவாகிறது. இவை புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆற்றல் பெற்றவை என ஆய்வு குறிப்பிடுகிறது. 
பிளாஸ்டிக்கில் 'பிஸ்பெனால்-ஏ’ (BISPHENOL-A)  என்ற ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. ரெடிமேட் உணவுகளைச் சுற்றும் தாள்களில் இந்த நச்சு ஊடுருவி இருக்கும். இந்த நச்சுப்பொருட்கள் நமது உடலின் செல் அமைப்பையே மாற்றக்கூடிய ஆற்றல்கொண்டவை. ஹார்மோன்களின் சமநிலையையும் இவை பாதிக்கக்கூடும்'' என்று எச்சரிக்கையுடன் சொல்லும் கிருஷ்ணமூர்த்தி, பேக்டு உணவுப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கினார்.
''பொதுவாகவே, ரெடிமேட் உணவுகளில் ருசியைக் கூட்டுவதற்காக, மோனோ சோடியமும், உணவின் நிறத்துக்காக சில வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மிகச் சிறிய அளவில் நமது உடலுக்குள் நுழைந்தாலும் கெடுதல்தான். உணவுகளைப் பேக் செய்திருக்கும் அட்டையில் குறிப்பிட்டு இருப்பதைப்போல ஊட்டச் சத்துக்களும் அந்த உணவுகளில் இருக்குமா என்பதும் சந்தேகம். மேலும், இந்த உணவுகளைச் சூடாக சாப்பிட வேண்டும் என்பதற்காக,  இவற்றை வீட்டில் திரும்பவும் சூடாக்குகின்றனர். இப்படிச் செய்வதால் மட்டும் அதில் இருக்கும் நஞ்சுப் பொருள் போய்விடாது.
இதேபோல உணவகங்களில் இருந்து காபி, சாம்பார், ரசம் போன்றவற்றையும் பிளாஸ்டிக் உறைகளில் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். உள்ளே இருக்கும் பண்டங்களின் சூட்டினால் பாலிதீன் உறைகளில் இருக்கும் வேதிப் பொருட்கள் கரைந்து, அவற்றைச் சாப்பிடும்போது நமது உடலுக்குள் நேரடியாகக் கலக்கின்றன.
இந்த கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளும்போது நம் உடலில் இருக்கும் செல்கள், ஹார்மோன்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.  குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்களது மூளையின் செயல்பாடு மந்தமாகும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை, பிறக்கும் குழந்தைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கும். மேலும், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
மேலும், இந்த உணவுகளால் தோலில் அலர்ஜி, உடல் சோர்வு, உடல் வலி, ஒபிசிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் வரவும் வாய்ப்பு உண்டு. இதயத்தில் இருந்து உடலுக்கு ரத்தம்  கொண்டுசெல்லும் ஆர்ட்டரிக் குழாயில் இந்த உணவில் இருக்கும்  கழிவுகள் சென்று அடைத்துக்கொள்ளும். இதனால் நெஞ்சு வலி வர வாய்ப்பு உண்டு. சிறுநீரகக் கோளாறு மற்றும் உணவுக் குழாய்களிலும் பாதிப்பு வரும்.'' எனப் பட்டியலிடும் கிருஷ்ணமூர்த்தி இறுதியாக இப்படிச் சொல்கிறார்.  
''இவ்வளவையும் சொல்வது பயமுறுத்த அல்ல. மாறாக உண்மை அதுதான் எனும்போது, அதைப்பற்றி எச்சரிக்கை செய்யவேண்டியது மருத்துவரின் கடமை. வேகமான இன்றைய காலகட்டத்தில் ரெடிமேட் உணவுகள் தவிர்க்க முடியாதவை. பதப்படுத்தி பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கி வந்தவுடன் பயன்படுத்துவது ஓரளவுக்கு நம்மைப் பாதுகாக்கும். பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதுகூட நமக்கான பாதுகாப்புதானே!''

நன்றி : ஆனந்த விகடன் 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More